நட்பு கற்பைப் போன்றது என்பது பொய்!





‘‘குருவி கூடு கட்டின இடத்தை அழிச்சி, மனுஷன் வீடு கட்டி வாழ்றான். குடிக்கிற தண்ணில ஆரம்பிச்சி திங்கிற சோறு வரை, சாப்பிடும் ஒவ்வொன்றிலும் கண்ணுக்குத் தெரியாத விஷம் கொஞ்சம் கொஞ்சமா நம்ம உடம்பில கலந்து, மனிதனோட நடவடிக்கையில கூட மாற்றத்தைக் கொண்டு வருது. வாழ்க்கைக்கு இயற்கை விவசாயம் அவசியம் என்கிற பின்னணியில் நான் இயக்கும் படம்தான் ‘குகன்’ ’’ - இனிப்பில் மருந்து கலந்து கொடுப்பதுபோல சமூக அக்கறையுடன் தான் எடுத்துவரும் சினிமா பற்றிப் பேசுகிறார் அழகப்பன் சி.

‘‘சமூக அக்கறை சரி... வெகுஜன மக்கள் ரசிக்க படத்தில் என்னென்ன இருக்கு?’’
‘‘நம்ம மக்களுக்கு கசப்பு மருந்து பிடிக்கறதில்லையே! அதனால அனைத்து தரப்பும் ரசிக்கிற மாதிரி, பொழுதுபோக்குக்கு பஞ்சமில்லாமல் திரைக்கதை ரொம்ப யூத்ஃபுல்லாவும் யூஸ்ஃபுல்லாவும் இருக்கும். கலா மாஸ்டரோட அக்கா மகன் அரவிந்த் கலாதர்தான் ஹீரோ. சுஷ்மா, ஸ்ரேயா குப்தான்னு இரண்டு ஹீரோயின்கள். தன்னையே கிண்டல் பண்ணிக்கொண்டு அடுத்தவங்களுக்கு வேட்டு வைக்கிற வித்தியாச வில்லனா சுப்பு பஞ்சு நடிக்கிறார். சத்யராஜ் - ரஜினி ரெண்டு பேரும் கலந்த மாதிரி ஒரு ஸ்டைல்ல அதை அற்புதமா பண்ணியிருக்கார் அவர். இயற்கை விவசாயத்துக்காக வாழும் ஓய்வுபெற்ற நீதிபதியா ‘ஆடுகளம்’ நரேன் வர்றார். காமெடியனா மட்டுமே நாம நினைச்சிட்டிருக்கிற சிங்கம் புலி, இதில குணச்சித்திர ரோலில் குட்டி ரங்காராவா கலக்கியிருக்கார்.

‘‘ ‘குகன்’... டைட்டிலுக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்?’’
‘‘ராமனுக்கு கேட்காமலேயே பெரும் உதவியை செய்துட்டு, வேறு ஏதும் உதவி தேவையான்னு கேட்டவன் குகன். அப்படி, உதவி செய்யிற ஒவ்வொருத்தரும் குகன்தான். ஆனா, இன்னைக்கு பெரும்பாலும் நட்போ உறவோ, அப்படி அமையறதில்லை. நல்லவன்னு பேர் வாங்கத்தான் பலர் உதவி செய்றாங்க. உறவு, நட்பு ரெண்டுமே பெரும்பாலும் பணத்தின் அடிப்படையிலதான் ஆரம்பிக்குது. தேவைகளைத் தர முடியாதபோதும் உறவுகள் நீடிக்கணும். அந்த நட்பும் உறவும்தான் இன்றைய உலகத்துக்குத் தேவை. நட்பு கற்பைப் போன்றது என்ற கருத்து சுத்தப் பொய். அது, ‘கொடுக்கும்போது கொடுக்கும்... கெடுக்கும்போது கெடுக்கும்’ என்பதை வெளிப்படையா, தைரியமா சொல்லியிருக்கேன்...’’

‘‘இதில ஜாலி ஏரியா எங்க வருது?’’
‘‘ஹீரோ, ஹீரோயினோட காதல் காட்சிகளில் இன்றைய யூத்களுக்குத் தேவையான அத்தனையும் இருக்கு. குறிப்பா, நாயகனும் நாயகியும் கபடி விளையாடும்போது இருவருக்குள்ளும் நுழையும் காதல் மயக்கமும் அதனைத் தொடரும் ஒரு பாடலும் குளுகுளு ஏரியா. பொதுவா ஆண்கள் அளவுக்கு பெண்கள் காதலை வெளிக்காட்டிக்க மாட்டாங்கன்னு சொல்வாங்க. ஆனா, அவங்க உணர்ச்சிகளை வெளிக்காட்ட ஆரம்பிச்சா அவங்க உள்ளே பசியோடு இருக்கும் புலி, வெளியே பாய்ந்து வந்து தன் வேட்டையைத் தொடங்கும். அப்படி ஒரு சூழ்நிலையில், கதாநாயகி தனது வேட்கையை வெளிப்படுத்துவது போல ஒரு பாட்டு வரும்...
‘முதல்முறை தொடுவதுபோல
முயல் குட்டியாக நீ பதுங்குகிறாய்...
வெப்பக் காட்டில் மழையாக நீ கட்டிக்கொள்கிறாய்...
வேட்டையாட அனுமதி கேட்டு தள்ளி நிற்கிறாய்...
காதலைக் கேட்பது உன் விரலா?
காலடி ஓசை உன் குரலா?
காற்று வழி காதல் ஊர்வலம்...’
- குருகல்யாண் இசையில்  இந்தப் பாட்டு, இளசுகளுக்கு ஜில் ஜிகர்தண்டா!’’
- அமலன்