தண்டனை : வெ.தமிழழகன்





‘‘சமிதா! உன்னைப் பத்தி பக்கத்து வீட்டு பங்கஜம் ரொம்பக் கேவலமா பேசறா. உனக்குத்தான் கமிஷனரைத் தெரியுமே... பிடிச்சு உள்ளே போடச் சொல்லு!’’ என்றாள் அலமு. கவர்ச்சி நடிகை சமிதாவின் தாய்.

சமிதா வீட்டுக்கு சொகுசு கார்கள் வருவதும் போவதும் பங்கஜத்துக்குப் பொறுக்கவில்லை. ‘‘ச்சீ... ஒழுக்கங்கெட்டு வாழறதும் ஒரு பிழைப்பா? த்தூ!’’ என சமிதாவை எப்போதும் கரித்துக் கொட்டுவாள். கூடவே அவள் மகள் மாலினியும், இன்னும் சில பெண்களும் சேர்ந்து அதற்கு உரக்கச் சிரிப்பார்கள். பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் கமிஷனருக்கு போன் போடச் சொன்னாள் அலமு.
சமிதாவும் அம்மா சொன்னபடியே போனை எடுத்தாள்...

அடுத்த நாள்...
பங்கஜத்தின் வீட்டு வாசலில் கார் நின்றது. அதிலிருந்து இறங்கியவர்... ஒரு படத் தயாரிப்பாளர்.

‘‘நீங்கதானே பங்கஜம்? உங்க பொண்ணு மாலினியோட அழகைப் பத்திக் கேள்விப்பட்டுத்தான் வந்தேன். என்னோட புதுப்படத்துல உங்க பொண்ணு கவர்ச்சி நடனம் ஆடணும்’’ என்று அட்வான்ஸை நீட்டினார் அவர்.
இன்ப அதிர்ச்சியோடு பங்கஜமும் மாலினியும் அதைப் பெற்றுக் கொண்டார்கள்.
மாடியிலிருந்து ஜன்னல் வழியே இதைப் பார்த்து சிரித்துக் கொண்டாள் சமிதா. கமிஷனருக்கு போன் போட்டிருந்தால் கூட, இப்படி ஒரு தண்டனையை பங்கஜத்துக்கு தந்திருக்க முடியுமா என்ன?