
அவ்வளவு அன்போடு கரம் கொடுக்கிறார் சூர்யா. ‘‘ஹரி சார் தெரிஞ்சுக்கிட்டது, புரிஞ்சுக்கிட்டது எல்லாம் மக்கள் மனசு மட்டும்தான். நம்மகிட்டே புழங்குகிற நம்பிக்கைகள், பழக்க வழக்கம், கோபதாபம், வஞ்சகம், பகை, துரோகம், காதல்... இதைத்தான் எடுத்துக்கிட்டு பண்றார். பாய்ந்து அடித்தது ‘சிங்கம்’. அடுத்த ‘சிங்கமு’ம் அதைவிட வேகம்தான்!’’ என்கிறார் சூர்யா. மென் புன்னகையில் மிளிரும், ‘சூர்யா ஸ்பெஷல்’ சிரிப்பு. தமிழ் சினிமாவின் வியாபாரத்தில் இன்று சூர்யாவுக்கு அதி முக்கிய இடம்.
‘‘சிங்கத்திற்கு தொடர்ச்சியாக ‘சிங்கம்-2’ வர்றது உங்க படங்களிலே முதல் முறை. எப்படி அதை எடுத்துக்கிறீங்க?’’
‘‘ ‘சிங்கம்’ நடிச்சது என் கேரியரில் ரொம்ப நல்ல விஷயம். அந்தப் படத்தால் என் கைக்கு வந்தவங்க வியர்வை ஒழுகி, கஷ்டப்படுகிற மக்கள். என்னை எங்கே பார்த்தாலும் வேட்டியை மடிச்சுக் காட்டி, பைக்கில் விரட்டி ‘தலைவா... துரைசிங்கம் டாப்பு’ன்னு கை வலிக்கிற மாதிரி குலுக்கிச் சொன்ன மக்கள். சினிமாவுக்கு மொழி தடையில்லைன்னு சொல்வாங்க. ஒரியா, வங்காளி, கன்னடம், இந்தி வரைக்கும் அப்படியே காட்சிகளைக் கூட மாற்றாமல் ‘சிங்கம்’ சக்ஸஸ் தந்துடுச்சு.

எமோஷனை பேலன்ஸ் பண்ணினது, குடும்பம், கிராமம், போலீஸ் வேலைன்னு வேல்யூ சம்பந்தமாவும் இருந்ததுதான் ‘சிங்க’த்தோட கொடி, இந்தியா முழுக்கப் பறந்ததுக்கு காரணம். நானே ஒரு கட்டத்தில் துரைசிங்கத்துக்கு ஃபேன் ஆகிட்டேன். அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கும்போதுதான் அடுத்த இடத்திற்கு சிங்கத்தை நகர்த்தினால் என்னன்னு பட்டது. இறங்கிடலாம்னு ஹரி சொன்னார். தூத்துக்குடியை விட்டு வெளியே போனால் எப்படியிருக்கும்னு யோசித்தால், மளமளன்னு கதை வந்தது. இதே துரைசிங்கம் தென் ஆப்ரிக்கா வரைக்கும் போனால்..? கிடைச்சது பரபரப்பான க்ளீன் ஆக்ஷன். இப்ப விவேக்கோடு சந்தானமும் இணைந்து விட்டார். காமெடியை அவங்க கையில் எடுத்துக்கிட்டாங்க. டானி, பிரிட்டிஷ் ஆக்டர். அவருடைய இடமும் இருக்கு. ‘காதல் வந்தாலே’னு அழகான ட்யூன் போட்ட தேவிஸ்ரீ பிரசாத், இந்த முறையும் தன் பங்கில் குறைவில்லாமல் இருக்கார்!’’

‘‘அடுத்தடுத்து ஒரே சமயத்தில் கௌதம் மேனன், லிங்குசாமி... என்ன மாதிரியிருக்கும்?’’
‘‘எனக்கும் கௌதமுக்கும் புரிதல் அருமையானது. நான் அவரோட இணைகிற மூணாவது படம் இது. அவரோட ஸ்டைல், திருப்பங்கள், நேர்த்தி எல்லாமே வேறு விதம். எங்களோட காம்பினேஷனுக்கு எப்பவும் எதிர்பார்ப்பு. அதுதான் சந்தோஷமாவும், பயமாவும் இருக்கு. நிறுத்தி நிதானமாக ஸ்கிரிப்ட்டோடு வந்திருக்கார் கௌதம். ஒவ்வொரு டைரக்டரிடமும் என்னை அர்ப்பணிக்கிறேன். எந்தப் படத்திலும் என் பங்கை குறை சொல்ல முடியாதபடி பார்த்துக்கொள்வதில் எனக்கு அக்கறை இருக்கு. மியூசிக் ஏ.ஆர்.ரஹ்மான். நானே அவரை ரெண்டு தடவை சந்திச்சேன். ரொம்ப அருமையான, அமைதியான சந்திப்பு. ‘கதை கேட்டேன். ரொம்ப நல்லாயிருக்கு. எனக்கு நிறைய இடம் இருக்கு. உங்களை மாதிரி ஹீரோக்கள் இந்த மாதிரி படங்களில் நடிக்கிறதால் எனக்கு இப்படியெல்லாம் வாய்ப்பு வருது’ன்னு ஜாலியா சொன்னார்.
லிங்கு வேற மாதிரி. அவர் கௌதம், ஹரிகிட்டே இருந்து வேறுபடுவார். ஆனால், ஆக்ஷனுக்கு மத்தியில் அழகா கவிதைக் காட்சிகளை கொண்டு வந்து நிறுத்துவார். திடீர்னு ஒரு சீன் மனதை வருடிப்போகும். எப்பவோ அவர் கூட படம் பண்ணியிருக்க வேண்டியது. ‘ஆனந்தம்’ பண்ணலாம்னு நினைச்சப்ப, பாலாவோட ‘நந்தா’வில் இருந்தேன். ‘சண்டைக்கோழி’ நான்தான் செய்திருக்க வேண்டியது. அந்த சமயம்தான் ‘கஜினி’ செய்தேன். இப்பத்தான் எல்லாமே சரியாகி இணைஞ்சிருக்கோம். ரொம்ப அழகா வந்திருக்கு ஸ்கிரிப்ட். அவர் ஒரு கதையைச் சொன்னால், எப்படி அதைத் திரையில் கொண்டு வருவார்னு மனசில் நல்ல நம்பிக்கை சித்திரம் வருது. நான் நினைப்பது நடந்தால் கௌதமும், லிங்குவும் எனக்கு அடுத்த இடத்தைத் தர முடியும். படத்தை நல்லபடியா கொண்டு வரணும்னு கவலைப்படுற லிங்குவின் அக்கறையும், எனது விருப்பமும் ஒண்ணுதான்.’’
‘‘கவனிச்சீங்களா, இப்ப சினிமாவில் ஹீரோவே இல்லை. சிக்ஸ்பேக், டூயட், அழகா இருக்கணும்... இப்படி எல்லாத்தையும் உடைக்கிறாங்க!’’
‘‘புதுசா வர்ற எல்லாருக்கும் இடம் இருக்கிறதுதான் தமிழ் சினிமாவின் மொத்தச் சிறப்பு. ‘சூது கவ்வும்’ நலன் குமரசாமியை இங்கே குறிப்பிட முடியும். வேறு வகை சினிமாக்கள் அவ்வப்போது வந்து போவது இங்கே எல்லா சமயமும் நடக்கும். இந்த மாதிரி வருகிற எல்லா படங்களையும் நான் பண்ணிட முடியாது. இங்கே கொஞ்ச நாள் இருந்து ஒரு இடத்தை நான் பிடிச்சு வச்சிருக்கேன். உடனே அவசரப்பட்டு அதைத் தாண்டிட முடியாது. ஒவ்வொரு தடவையும் எதிர்பார்ப்பு, பிசினஸ்... மேலே ஏறிக்கிட்டுப் போகுது. புதுசா வந்தவங்களை இன்னும் கொஞ்சம் கவனிச்சுப் பார்க்கலாம்.’’
‘‘கார்த்தியும் இப்ப முக்கியமான ஹீரோக்கள் வரிசையில் இருக்கார். வீட்டுக்குள்ளே இருந்தாலும் அவரைப் பத்தி என்ன தோணுது?’’
‘‘கார்த்திக்கு கிடைச்சது எல்லாமே கிஃப்ட். சினிமா வாசனையே இல்லாம யு.எஸ் போய் எம்.எஸ் படிச்சு முடிச்சான். திடீர்னு பார்த்தால் மணிரத்னம் அஸிஸ்டென்ட். நானெல்லாம் ஏழெட்டு படங்களுக்குப் பிறகு வேற தினுசில் வெளிவந்தேன். ஆனா, முதல் படத்திலேயே அவன் தொட்டது, நான் நிமிர்ந்து பார்க்க வேண்டிய உயரம். தனக்கு எது சரியா வரும், எப்படியான படங்கள் பண்ணலாம்னு முடிவு எடுக்கிறது எல்லாமே அவன்தான். என் படங்களைத் தேர்வு செய்வதில் அப்பாவின் பங்கு இல்லைங்கிற மாதிரி, அவன் செலக்ஷனிலும் நான் இல்லை என்பதுதான் நிஜம். நம்மோட எல்லா ஏற்ற இறக்கங்களுக்கும் நாமேதான் காரணமாக இருக்கணும் என்பது தான் என் முடிவு.’’
‘‘சினிமாவை விட்டு வெளியே வந்திடுவேன்னு சொல்லியிருந்தீங்க?’’
‘‘ம்ஹும்... அப்படியெல்லாம் சொல்லவே இல்லை. சினிமாவை விட்டு நான் எப்படிப் போவேன்? இங்கேதான் இருப்பேன். பிரகாஷ்ராஜ் சாரோட நடந்த ஷோ அது. சினிமா உலகின் யதார்த்தங்களை மனசு விட்டு பேசிக்கிட்டு இருந்தோம். எப்பவும் எல்லா நேரமும், கடைசி வரைக்கும் இங்கே நீடிச்சு நிற்கிறதைப் பத்தி நினைக்க முடியாது. எனக்கும் எஸ்.எம்.எஸ் குறையும், கை குலுக்கல்கள் மட்டுப்படும், இந்தப் பரபரப்பு இருக்காதுன்னு ஒருத்தருக்கொருத்தர் நிஜங்களை பேசிக்கிட்டிருந்தோம். நடுவில் ஒரு வார்த்தையை உருவி இது மாதிரி வெளிவந்துவிட்டது. என்ன செய்வது... சில நேரங்களில் சில இடங்களைக் கடந்துதான் வரணும்!’’
- நா.கதிர்வேலன்