குட்டிச் சுவர் சிந்தனைகள் : நையாண்டி





சாப்பிட சோறு இருக்கோ இல்லையோ... நாட்டுல எல்லாருக்கும் கூப்பிட அடைமொழி பேரு இருக்கு. போன வாரம் ஒருத்தருக்கு புரட்சித்திலகம்னு அடைமொழி கொடுத்திருக்காங்க. காசா... பணமா... இந்தாங்கய்யா புடிங்க! இன்னமும் பல அடைமொழிகள்...

படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து, ‘னகர்தினா தினனா’ பாடி கதவைத் திறந்து காத்து வாங்கிய சாமியாருக்கு ‘எழுச்சி திலகம்’ பட்டம். பிரமாண்டம் என்றாலே ஷங்கர் படத்துக்கு பிறகு ஞாபகத்துக்கு வர்றது நமீதா மேடம்தான். அவங்களுக்கு பட்டம் ‘கவர்ச்சி திலகம்’. எப்போ பார்த்தாலும் ‘அத வாங்காதீங்க, இத வாங்காதீங்க’ன்னு புலம்பற நிதியமைச்சருக்கு ‘வறட்சி திலகம்’ பட்டம். ஆந்திராவ வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுனு ஆக்குன சோனியாவுக்கு ‘பிரிச்சி திலகம்’ பட்டம். ‘40 தொகுதிகளிலும் வெற்றி பெருவோம்’னு கூவினாலும் இன்னமும் இன்னோவா கிடைக்காத இளம் மறதிக்கு ‘தளர்ச்சி திலகம்’ பட்டம், எப்பூடி?

ஆல்தோட்ட பூபதி
ஒரு நாளில் நாட்டை மாற்ற முடியும்னு சொல்றாரு அன்னா ஹசாரே. கிரிக்கெட் விளையாடுறப்போ ஒரு ஓவருக்கு ஒரு தடவை பேட்ட மாத்தலாம். காலைல வேலைக்குப் போயிட்டு சாயந்திரம் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்து ஷர்ட்டை மாத்தலாம். ஒரு வாரம் மரங்களை வெட்டுனா காட்டை மாத்தலாம். வாக்கியம் சரியில்லன்னு வார்த்தைகள மாத்துனா பாட்ட மாத்தலாம். வேட்பாளர் சரியில்லைன்னா தேர்தல்ல தந்த சீட்ட மாத்தலாம். ஆனா, ஒரு நாளுல நாட்டையெல்லாம் மாத்த முடியாது. நைட்டோட நைட்டா காலி பண்ணி வீட்ட வேணா மாத்தலாம்!

‘‘அது ஏன்டா என்னையப் பார்த்து அந்தக் கேள்விய கேட்டே?’’ன்னு கவுண்டமணி பொலம்பற மாதிரி ஆயிடுச்சு மக்கள் நிலைமை. ‘எத்தனை ரூபாய்க்கு எவ்வளவு பேரு எவ்வளவு சாப்பிடலாம்’ங்கிற ஆராய்ச்சி முத்திப் போய், இத்தனை ரூபாய்க்கு இவ்வளவு பேரு இவ்வளவு சாப்பிடலாம்ங்கிற முடிவுக்கே வந்துட்டாங்க வட இந்திய அரசியல்வியாதிகள். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகர் ராஜ் பாப்பர், ‘‘12 ரூவா இருந்தா திருப்தியா சாப்பிடலாம்’’னு ஆரம்பிச்சு விட்டாரு. ரஷீத் மசூத் என்கிற காங்கிரஸ் தலைவர், ‘‘5 ரூவா இருந்தா ஒருத்தரு வயிறார சாப்பிடலாம்’’னு சொல்றாரு. அசாம் அமைச்சர் தேக்கா என்பவர், ‘‘20 ரூவாய்க்கு 8 பேரு சாப்பிடலாம்’’னு சொல்றாரு. இது எல்லாத்துக்கும் மேல, மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா, ‘‘ஒரே ஒரு ரூபாய் இருந்தா ஒருவேளை உணவை நிம்மதியா சாப்பிடலாம்’’னு திருவாய் மலர்ந்திருக்கிறாரு. அய்யா ஆல் இந்தியா அரசியல்வாதிகளே! ஒரு ரூபாய் இருந்தா இந்தியாவுல எங்கேயும் சாப்பிட முடியாது, இந்தியாவெங்கும் போன்ல கூப்பிட வேணா முடியும், புரிஞ்சுக்கோங்க!

எல்லா படத்துலயும் படத்தோட கடைசி சண்டைக்காட்சின்னா சுமோ, குவாலிஸ்னு பறக்கிறதும், படத்தோட கடைசி காட்சின்னா போலீஸ் வந்து புடிக்கிறதும் சகஜம்தானே? வில்லன் தங்கச்சின்னா ஹீரோ லவ்வுறதும், ஹீரோவோட தங்கச்சின்னா வில்லன் கற்பழிக்க கவ்வுறதும் சகஜம்தானேப்பா. ஆரம்பத்துல ஹீரோ - ஹீரோயின் முட்ட முட்ட மோதல் செய்யறதும், இடைவேளைக்கு முன்னால திகட்ட திகட்ட காதல் செய்யறதும் கூட சகஜம்தானே. டாக்டர் வேஷம் போட்டா கண்ணாடிய கழட்டி கலங்குறதும், தொழிலாளி வேஷம் போட்டா வாழ்க வாழ்கன்னு கை தூக்குறதும் கூட சகஜம்தானே. ஹீரோ ஃப்ரெண்ட்ஸ் பீர் குடிச்சா யூரின் போறதும், ஹீரோவுக்கு ஃபிகர் மடிஞ்சா பாட்டு பாட ஃபாரீன் போறதும் சகஜம்தானே. ரஜினின்னா அஞ்சு நிமிஷத்துல பணக்காரன் ஆகறதும், கஜினின்னா அஞ்சு நிமிஷத்துக்குள்ள மறந்து போறதும் சகஜம்தானேப்பா. இதெல்லாம் இப்போ எதுக்கு அடுக்குறோம்னா, சினிமாவுல மட்டுமல்ல... சினிமா இண்டஸ்ட்ரில கூட பல விஷயங்கள் சகஜம்தான். அதாவது, நடிகை கனகா நடிச்சப்ப கிசுகிசு பரப்பறதும், அவரு நடிக்கிறத நிப்பாட்டினாலும் புரளி பரப்பறதும் சகஜம்தானேப்பா!

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்...
ஆந்திராவ ரெண்டா பிரிச்ச மாதிரி, ‘தமிழ்நாட்ட நாலா பிரி, ஏழா பிரி’ன்னு யாராவது அடுத்த வாரம் கிளம்புவாங்க பாருங்க... அவீங்களுக்கு இந்த இடம் அட்வான்ஸ் ரிசர்வ்டு!

பள்ளிக்கூடத்துல படிக்கிற காலத்துல ‘‘நீ என்னவாகப் போற?’’ன்னு வாத்தியாரு கேட்டப்போ, என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம தலைய சொரிஞ்சுக்கிட்டு நின்னவவங்க... மொத பெஞ்ச்லயும் உட்காராம, கடைசி
பெஞ்ச்லயும் உட்காராம நடுவுல இருக்கிற பெஞ்ச தேய்ச்சவங்க... லவ்வும் பண்ணாம, லவ் பண்ணப்படவும் இல்லாம கல்லூரி வாழ்க்கை முழுக்க காதலுக்கு தூதுவனா இருந்தவங்க... காலேஜ்ல சண்டையும் போடாம சமாதானமும் பேசாம எல்லா சண்டைக்கும் காரணமா இருந்தவங்க... காலேஜ் மெஸ் சாப்பாட்ட கண்டபடி திட்டினாலும், கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம தின்னவங்க... பீர தண்ணி கலந்து குடிச்சுட்டு, ‘‘மச்சான், வாசம் வருதா பாரு’’ன்னு ஆயிரம் முறை கேட்டு கடுப்பேத்துனவங்க எல்லாம் யாரு? இப்போ ஐ.டி துறையில பதுங்கிக் கிடக்கிற நம்ம பயலுவதேன். செஞ்ச பாவமும் கொடுத்த கஷ்டமும் சும்மா விடுமா?

ஸ்கூலுக்குப் போற குழந்தைகளோ, வேலைக்குப் போற பெரியவங்களோ... எல்லோருக்குமே திங்கட்கிழமை மாதிரி ஒரு மொக்கையான நாள் கிடையாது. திங்கட்கிழமை சம்பள நாளா இருந்தாலும், ஒரு சூப்பர் ஃபிகர் வேலைக்கு சேர்ந்தாலும் கூட, சனி, ஞாயிறுன்னு ரெண்டு நாள் நிம்மதியா இருந்தவனுக்கு திங்கட்கிழமை ஒரு டரியல்கிழமைதான். சஹாரா பாலைவனத்திற்குப் பிறகு அதிகம் வறண்டு கிடப்பது திங்கட்கிழமைகள்தான். திங்கட்கிழமை ஒரு பாவச்செயல், திங்கட்கிழமை ஒரு பெருங்குற்றம், திங்கட்கிழமை ஒரு மனிதத்தன்மையற்ற நாள். தண்ணில போட்ட முறுக்கு மொறுமொறுப்பாவும், தண்ணி போட்ட பின் வரும் திங்கட்கிழமை சுறுசுறுப்பாவும் இருந்ததா சரித்திரமே இல்ல.
திங்கட்கிழமை என்பது காதலிய முதன்முதலா சினிமாவுக்கு கூட்டிப்போன மாதிரி... என்ன செய்யறதுன்னும் தெரியல, ஏதாவது செய்யணும்னும் தோணுது. அன்புள்ள அம்மாவ நாங்க கெஞ்சிக் கேட்கிறது என்னன்னா, தமிழ்ப் புத்தாண்டை மாற்றியது போல இந்த திங்கட்கிழமையை சனிக்கும் ஞாயிறுக்கும் நடுவில மாற்றுங்களேன்... ப்ளீஸ்!