கவிதைக்காரர்கள் வீதி




மீறல்


வாடிய பூக்களுக்காக
புன்னகைக்க மறப்பதில்லை பூக்கள்
உதிரும் இலைக்காக
துளிர்க்க மறுப்பதில்லை மரங்கள்
விடியல் புறக்கணிக்கும் இரவை
அந்தி வரவேற்க மறுப்பதில்லை

சிலமணித் துளிகள் தழுவும் பனித்துளிகளை
இலைகள் வெறுக்கவில்லை
இடைவெளியோடு கிடக்கும் நினைவுகள்
இயல்பை மீறுவதில்லை
இயல்பை மீறும் பொழுதுகள்
மகிழ்ச்சியால் ததும்பிக் கிடக்கின்றன!

 தமிழ்ச்செல்வி நிக்கோல்ஸ்

பந்தயப் புறா

அமர்தலினின்றும்
சிறகசைத்தலுக்கு மாறி
படபடப்போடு குதூகலமாய்
பறக்க எத்தனிக்கும் புறாக்களுக்கு
ஒருபோதும் தெரிவதே இல்லை
பறத்தலை வைத்து
மனிதர்கள் நடத்தும் பந்தயங்கள்

- ஸ்ரீநிவாஸ் பிரபு

நினைவுகள்

மனதில் தங்கின நினைவுகள்
விரைந்து சென்ற
காலக் குதிரைகளின்
குளம்படிகளாய்!

- லா.ரா.கணபதி

இழப்பு

யாரிடம் சொல்லி
ஆறுதல் பகிரும்
நதிகளை இழந்த மீன்கள்?

- பெ.பாண்டியன்

உதிர்தல்


வாழ்க்கை ஒரு பறவையாய்
உதிர்த்துக் கொண்டே இருக்கிறது
ஒவ்வொரு சிறகாய்
பறத்தலுக்கான சாத்தியத்தை
மறந்தபடியே!

- பா.விஜயராமன்