அவன் அவள் unlimited



ரியல் போட்டோஷாப் அழகு!

மெல்லிடை இல்லை என்பதற்காக தன்னை அழகற்றவள் என நினைக்கும் பெண்களே... உண்மையில் அழகற்றிருப்பது இந்த சமூகம்தான்!
* மர்லின் மன்றோ

ஓப்பனிங் சீனில் ராமுவும் சோமுவும் டீக்கடை ஓரம் நின்று, கடந்து போகிற பெண்களை சைட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ராமு: மச்சான் அந்த ‘க்ரீன்’ எப்படி? சூப்பரா இருக்கால்ல?
சோமு: ம்ஹும்... சூப்பர்லாம் இல்ல!

ராமு: அப்போ அங்க தூரத்துல வருதே சைக்கிள்ல... அது..? ஸ்கின் டோனே அள்ளுதுல்ல!
சோமு: ப்ச்... இதுவே சூப்பர்னுட்டா எப்படி மச்சி? உன்னை மாதிரி எல்லா பொண்ணுங்களையும் என்னால ரசிக்க முடியாது. பொண்ணுன்னா அவ எப்படி இருக்கணும் தெரியுமா?
சொல்லிக்கொண்டே சோமு வானம் பார்க்கிறான்.

‘கட் பண்ணா ஹீரோயின்தானே’ என்கிறீர்களா? தப்பில்லை. தமிழ் சினிமாவுக்காக தகவமைக்கப்பட்ட நம் கண்களுக்கு இந்த சோமு, ஹீரோ போலவும் ராமு என்பவன் காமெடி பண்ணும் சைடு கேரக்டர் போலவும் தோன்றும்தான். ஆனால், உண்மையில் இந்த சோமு ஒரு வில்லன்!

ஆணாய்ப் பிறந்தவன், பெண்களில் பலரையும் சரியில்லை என வடிகட்டுவதே மாபெரும் குற்றம். அது இயற்கைக்கு எதிரானது. இயற்கையாக ஆண் அப்படி படைக்கப்படுவதும் இல்லை. ‘இப்படித்தான் இருக்க வேணும் பொம்பள’ என்ற ரசனை செயற்கையாகத்தான் ஒவ்வொரு ஆணிடமும் புகுத்தப்படுகிறது. உலகில் எல்லோரும் சோமு போலாகிவிட்டால் மனித குலம் தழைக்காது. இதில் முதல் குற்றவாளிகள் ஓவியர்களும் சிற்பிகளும்.

 ஒரு காலத்தில் பெண்கள் எப்படி இருக்கிறார்களோ அதை அப்படியே ஓவியமாய்த் தீட்டி சிலையாய் வடித்து அழகைப் பிரதிபலிக்கும் வேலையை மட்டும் கலைஞர்கள் செய்தார்கள். ஆனால், காலப்போக்கில் ‘பெண்கள் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும்’ என்ற மிகைக் கற்பனைகளுக்கு சிலைகளும் ஓவியங்களும் தீனி போட ஆரம்பித்தன. கைப்பிடி சைஸில் இடை, ஆனாலும் திரட்சியான முன்னழகு, அகன்று வளைந்த இடுப்பு என இம்பாஸிபிள் இலக்கணங்களை அவை கற்பித்தன.

விளைவு..? உலகம் முழுவதும் சோமுக்கள் உருவாகிவிட்டார்கள். ‘அழகுன்னா...’ என்று அவர்கள் ஒரு கற்பனை பிம்பத்தை மனதில் வைத்துக்கொண்டே சுற்றுகிறார்கள். லட்சத்தில் ஒருத்திதான் அந்த இலக்கணங்களுக்கு ‘ஓரளவு’ பொருந்திப் போகிறாள். அவளை ‘சிலையே... ஓவியமே...’ என்று வர்ணித்து காதலிக்கிறார்கள் சோமுக்கள். மிச்சமிருக்கும் 99999 பெண்களும் என்ன செய்வார்கள், பாவம்! சிலையைப் போல், ஓவியத்தைப் போல், உருமாற நினைத்து, நாள் முழுக்க டயட்டில் கிடந்து ஆரோக்கியத்தை இழக்கிறார்கள்.

1970களில் அமெரிக்காவில் எழுச்சி பெற்ற மூன்றாம் அலை பெண்ணியவாதிகள் இந்த மேட்டரைக் கையில் எடுத்தார்கள். திரும்பும் இடமெல்லாம் ‘ஸ்லிம் உடல்’ விளம்பரம் செய்யப்படுவதை அவர்கள் இன்றும் எதிர்க்கிறார்கள். பருமன் பெண்ணியம் (Fat feminism) என்றே இது அழைக்கப்படுகிறது. ‘‘அந்தக் காலத்து ஐரோப்பிய கலாசாரமே குண்டுப் பெண்களைத்தான் விரும்பியிருக்கிறது. ‘கண்ணாடி முன்னால் வீனஸ்’ போன்ற பழங்கால ஓவியங்கள் கூட, பெண் உருவத்தை சதைப்பற்றோடுதான் காட்டுகின்றன. அதுதான் நம் இயற்கையான ரசனை. இந்த ஸ்லிம் கலாசாரம், முழுக்க முழுக்க செயற்கையானது!’’ என வாதிடுகிறார்கள் அந்தப் பெண்ணியவாதிகள்.

இன்று, நிலைமை இன்னும் மோசம். போட்டோஷாப் போன்ற மென்பொருட்கள் மூலம் இப்போது ஒரு பெண்ணின் புகைப்படத்தை அவளுக்கே அடையாளம் தெரியாதபடி ஆல்டர் பண்ணிவிட முடிகிறது. முகத்தில் பருக்களை நீக்கி நிறத்தைக் கூட்டுவது மட்டுமல்ல... பல விளம்பரங்களில் இப்போது பெண்களின் இடையைக் கூட கட் பண்ணி கவர்ச்சியாக்கி விடுகிறார்கள். அந்த போட்டோஷாப் பெண்களோடு ரியல் பெண்கள் எப்படிப் போட்டி போட முடியும்?

பெண்களின் பெரும் போராட்டத்தின் பயனாக அயல்நாடுகளில் இந்த அக்கிரமம் ஓரளவு குறைந்திருக்கிறது. விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் புகைப்படங்களுக்கு அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் கடுமையான கட்டுப்பாடுகளை வகுத்திருக்கிறது. ‘போட்டோக்கள் கணினியால் மாற்றம் செய்யப்பட்டிருந்தால், அந்தத் தகவல் விளம்பரத்திலேயே எழுதப்பட வேண்டும். இல்லாவிட்டால் அபராதம்’ என எச்சரித்துள்ளது பிரான்ஸ் நாட்டுப் பாராளுமன்றம்.

அழகுப் பொருள் தயாரிக்கும் ஓலே நிறுவனம், 59 வயதுப் பெண்ணின் முகத்தை ஒரு சின்ன சுருக்கம் கூட இல்லாதது போல வெளியிட்டு விட, லண்டன் நகரத்தில் அந்த விளம்பரமே தடை செய்யப்பட்டுவிட்டது. ‘‘இப்படிப்பட்ட கற்பனை விஷயங்களுக்கு மட்டும் தடை விதித்தால் போதாது. அல்ட்ரா ஸ்லிம்மாக கேட்வாக் வரும் மாடல்களுக்கும் அழகுப் போட்டிகளுக்கும் கூட எங்கள் நாட்டில் தடை’’ என ஒருமுறை அறிவித்தது ஸ்பெயின் அரசு. லண்டனில் உள்ள புகழ்பெற்ற துணிக்கடையான டிபென்ஹாம்ஸ், தங்களின் காட்சி பொம்மைகளைக் கூட, சதைப் பற்றுள்ள பெரிய சைஸ் பொம்மைகளாக மாற்றிவிட்டது.

சரி இதெல்லாம் வெளிநாட்டு, சங்கதிகள். நம்ம ஊரில் நிலைமை எப்படி இருக்கிறது? சென்னை க்வா நியூட்ரீஷியன் கிளினிக்கைச் சேர்ந்த டயட்டீஷியன் அபிநயாவிடம் கேட்டோம்...
‘‘விளம்பரங்களுக்கெல்லாம் தடை கேட்கும் அளவுக்கு இங்கே விழிப்புணர்வு இல்லை. ஆனால், அவை நம் ஊர் டீன் ஏஜ் பெண்களை பாதித்திருப்பது உண்மை. ஒல்லியான தேகத்துக்காக தினமும் காலை டிபனே சாப்பிடாத பெண்கள் இங்கு எக்கச்சக்கம். பருமனாகாமல் இளைக்க நினைப்பது நல்லதுதான். அதற்காக இல்லாத உடலமைப்பைக் கொண்டு வர முயற்சிக்கக் கூடாது. இது பெண்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது. எதிர்கால வாழ்வையும் பாதிக்கிறது’’ என்றார் அவர்.

விளம்பரங்கள் வந்தால் என்ன? அதைப் பார்த்து டயட் இருக்கும் பெண்களைக் குறை சொல்லாமல், சோமுக்களை ஏன் வில்லனாக்க வேண்டும்?

பெண் பற்றிய மிகைக் கற்பனையை உருவாக்குவதும் பரப்புவதும் ஆண்கள்தான். ஆண்களின் ரசனைக்கு ஏற்ப மாற வேண்டிய மன அழுத்தம் இயல்பாகவே பெண்களிடம் வந்துவிடும். இது சமூக உளவியல். ‘மாடு பிடிப்பவனுக்குத்தான் மணமாலை’ என்று பெண்கள் எல்லோரும் முடிவெடுத்து விட்டால், நாட்டில் ஆண்கள் எல்லோரும் கம்ப்யூட்டரை விட்டுவிட்டு மாடு பின்னால் சுற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. அதே அடிப்படையில்தான் இங்கே ஆண்களின் ரசனை பெண்களை ஆட்டி வைக்கிறது. கட்டுடலில் மட்டும்தான் அந்த ரசனை கவனம் செலுத்துகிறதா? கலர் பார்த்தும் காதல் வருகிறதுதானே? எங்கும் எதிலும் சிவப்பழகுப் பெண்களுக்கு தனி மவுசு இருப்பது உண்மையா?

நீங்கள் அழகானவர்!

பெண்கள் தங்கள் தோற்றம் பற்றிய தாழ்வு மனப்பான்மையில் இருக்கிறார்களா? இதைத் தெரிந்துகொள்ள டவ் சோப் நிறுவனம் செய்த ஆராய்ச்சி இது. மனிதர்களின் அங்க அடையாளங்களைச் சொன்னால் அப்படியே தத்ரூபமாக வரைந்து காட்டிவிடும் ஓவியர் கில் சமோரா. திரைமறைவில் இருக்கும் பெண்களிடம் இவர், ‘உங்கள் முகம் எப்படி இருக்கும்? கண்கள், மூக்கு, வாய் எப்படி?’ என விசாரித்தே ஓர் ஓவியத்தை வரைகிறார். அடுத்து, அதே பெண்ணின் தோழி அல்லது நண்பர் அழைக்கப்படுகிறார். அவர்களிடம் அதே பெண்ணைப் பற்றி விசாரித்து இன்னொரு ஓவியத்தைத் தீட்டுகிறார் கில். இதே மாதிரி பல பெண்கள் பரிசோதிக்கப்படுகிறார்கள்.

கடைசியில் ரிசல்ட் இதுதான்... பெண்கள் தங்களைப் பற்றிச் சொல்லும் தகவல்கள் அழகற்ற உருவத்தையும்... அடுத்தவர் அவரைப் பற்றிச் சொல்லும் தகவல்கள் அழகான உருவத்தையும் உருவாக்குகின்றன. ‘உங்களை அடுத்தவர்கள் இவ்வளவு அழகாகப் பார்க்கிறார்கள்’ என இரண்டு படங்களையும் அந்தந்த பெண்களிடம் ஒப்பிட்டுக் காட்டும்போது, ‘ஆமாம்’ல என அவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்!

யூ டியூப் வீடியோவாக, சுமார் 6 கோடியே 40 லட்சம் மக்களால் பார்க்கப்பட்டிருக்கும் இந்த ஆய்வு, ‘நீங்கள் நினைப்பதை விட நீங்கள் அழகானவர்’ என்ற டச்சிங் வரியோடு முடிகிறது.
பார்க்க: www.youtube.com/watch?v=XpaOjMXyJGk

ரம்பை, ஊர்வசி உள்ளிட்ட நம் தேவ கன்னிகைகள் எல்லாம் பூலோக விளம்பரங்களில் வருவது போல ஸ்லிம் ஆக விரும்பி ஜிம்முக்குப் போயிருக்கிறார்கள் வேந்தே. அதான் நாங்களே...

- தேடுவோம்...
கோகுலவாச நவநீதன்