அஜித்துக்கு நான் வில்லியா!



பரபரக்கும் த்ரிஷா

வேட்டி மேட்டர் மட்டுமல்ல... த்ரிஷாவின் பேட்டி மேட்டரும் கடந்த வார பரபரப்பு. அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய த்ரிஷா, தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகர்களில் ‘தல’க்கு முதல் இடமும் தளபதிக்கு கடைசி இடமும் கொடுக்க... தளபதி ரசிகர்கள் கொதித்துக் கொண்டிருப்பதாக மேட்டர் சீரியஸானது.

சென்னை திரும்பியிருந்த த்ரிஷாவிடம் பேசினோம்... ‘‘நான் சாதாரணமா பேசியது இப்படி சீரியசான செய்தியா திரிக்கப்பட்டதற்கான காரணம் புரியலை. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், ‘உங்களுக்குப் பிடித்த நடிகர்கள் யார்?’னு ஜாலியா கேட்டாங்க. நான் ரொம்ப சாதாரணமா ஒவ்வொரு பெயரா சொன்னேன்.

நாலு நடிகர்கள் பெயரைச் சொல்லும்போது ஒரே நேரத்தில் எல்லா பெயரையும் சொல்ல முடியுமா? ஒன்றன் பின் ஒன்றாகத்தான் சொல்ல முடியும். அப்படித்தான் நானும் சொன்னேன். இதை ஏன் பிரச்னை ஆக்க வேண்டும். எல்லோருமே எனக்கு சூப்பர் ஸ்டார்கள்தான். எல்லோரையும் எனக்குப் பிடிக்கும். விஜய், அஜித், விக்ரம் எல்லோருடனும் சூப்பர் ஹிட் படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறேன். ஒவ்வொருத்தருக்கும் தனி ஸ்டைல் இருக்கு. யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை. பாரபட்சம் பார்த்துப் பழகும் ஆளும் நான் இல்லை. இதுக்கு மேல இதில் பேசுறதுக்கு ஒண்ணுமில்லை.’’

‘‘சீனியர் நடிகர் கமலை ஏன் இந்த லிஸ்டில் சேர்த்தீங்க?’’‘‘இதே கேள்வியைத்தான் நானும் கேட்கிறேன். நான் அந்த இடத்தில் கமல் சார் பெயரையே சொல்லலை. அப்படி இருக்கும்போது, அவர் பெயரை ஏன் சேர்த்தார்கள்னு தெரியலை. இந்த இடத்தில் இப்படிச் சொன்னா, உடனே ‘கமல் உங்களுக்குப் பிடித்த நடிகர் இல்லையா?’ன்னு இன்னொரு பிரச்னைக்கு சூடம் கொளுத்திடாதீங்க. கமல் சாரோட உயரமே தனி. அவர் மீது எனக்குப் பெரிய மரியாதை இருக்கு. நான் இப்போ ஷூட்டிங் போகணும். இதோட நிறுத்திக்கலாம்’’ என்ற த்ரிஷாவிடம் சில கூல் கேள்விகளைப் போட்டோம்.

‘‘இந்த அமெரிக்க ட்ரிப்ல பங்கி ஜம்ப், ஸ்கூபா டைவிங் போனீங்களா?’’

‘‘அதுக்கு டைம் இல்லை. சொல்லப் போனா, ஷாப்பிங் செய்யக்கூட நேரமில்லை. எனக்காக இல்லைன்னாலும் என் புதிய செல்லங்கள் ஜானோ, ஜாரோவுக்கு (நாய்க்குட்டிகள்) ஏதாவது வாங்கணும்னு நினைச்சேன். சிகாகோவில் செல்லப் பிராணிகளுக்கென்று ஒரு பிரத்யேக ஷோரூம் இருக்கு. அதைக் கண்டுபிடித்து கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ணினேன். வீட்டுக்கு திரும்பியதும் ஜானோவுக்கு சந்தோஷம் தாங்கலை. என் மேல ஏறி விளையாடி ஒரு மணி நேரம் கழித்துத்தான் கீழே இறங்கினான். காட்பரி இறந்த மன பாரத்தை இந்த இரண்டு சுட்டிகள்தான் இலகுவாக்கியிருக்கு.’’

‘‘ஆர்யாவோட அடுத்த கிசுகிசுவுக்கு ரெடியாகிட்டீங்க போல?’’

‘‘ஹாங்... அவரோட சொந்தப் பட விழாவில் சிறப்பு விருந்தினரா கலந்துக்கிட்டதை வச்சி சொல்றீங்களா?

ஆர்யா எனக்கு ரொம்ப நாளா பழக்கம். இதுவரை கிசுகிசு வந்ததில்லை. இனியும் வராது. ஆர்யா எப்போதுமே என்னோட கடலை போட்டதில்லை. ரொம்ப ஜாலியான டைப். சீரியஸா இருக்க மாட்டார். அதனால்தான் ஹீரோயின்களுக்கு அவரைப் பிடிக்குது. அவரால் எந்தப் பிரச்னையும் வராது. எப்போ வேணும் னாலும் ‘என்னோட வா’ன்னு அவரைக் கூட்டிட்டுப் போகலாம். நமக்கு பாதுகாப்பா இருப்பார். ரொம்ப நாகரிகமா பழகுவார். அவரோட பேச்சு ரொம்ப கிளாஸியா இருக்கும்.

ஐ லைக் ஆர்யா!’’‘‘இப்ப நடிச்சிக்கிட்டிருக்க படங்கள் பற்றி சொல்லுங்களேன்...’’ ‘‘தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியா ஒரு படத்தில் நடிக்கிறேன். காமெடி கலந்த கமர்ஷியல் படம்தான். இன்னும் பெயர் வைக்கலை. இதில் நானும் காமெடி பண்றேன். ராஜமுந்திரி யில் ஷூட்டிங் தொடங் கியிருக்கு. அடுத்த வாரத்திலிருந்து கௌதம் மேனன் சார் படத்தில் நடிக்கப் போறேன். இந்த ரெண்டு படங்களுமே எனக்கு முக்கியம். இது தவிர தமிழில் ‘பூலோகம்’, கன்னடத்தில் புனித் ராஜ்குமார் ஜோடியா நடிக்கிற ஒரு படமும் ரிலீசாகப் போகுது. கன்னடத்தில் இதுதான் எனக்கு முதல் படம். தெலுங்கில் வந்த ‘தூக்குடு’ படத்தின் ரீமேக். நான் கன்னடத்துக்கு வரணும்னு புனித் விரும்பி அழைச்சிருந்தார்!’’

‘‘கௌதம் மேனன் படத்தில் அஜித்துக்கு நீங்கதான் வில்லியா மே?’’

‘‘அப்படியா... புதுசு புதுசா கிளப்பி விடுறாங்கப் பா. அந்தப் படத்தில் நான் ‘தல’ ஜோடியாத்தான் நடிக்கிறேன். நல்ல கேரக்டர். மற்றபடி அந்தப் படம் பற்றி ரொம்பப் பேச முடியாது.’’

‘‘இளமையாகக் காட்டிக்கொள்ள உங்களோட கிளாமர் படங்களை நீங்களே நெட்டில் பரவ விடுகிறீர்களாமே?’’

‘‘இப்படித்தாங்க என்னைப் பற்றி செய்திகள் தப்பு தப்பாவே வருது. இளமையா காட்டிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் எப்பவுமே மாடர்னா டிரஸ் பண்ணுவேன்னு எல்லாருக்கும் தெரியும். நடிக்க வந்து 12 வருஷமாச்சு. ‘இன்னும் எப்படி அப்படியே இருக்கீங்க’ன்னு எத்தனையோ பேர் கேட்டிருக்காங்க. பெரிய நடிகர்கள், பிரமாண்ட தயாரிப்புகள்னு இன்னிக்கும் நான் பிஸியாகத்தான் இருக்கேன். ஃபிரஷ்ஷாவே ஃபீல் பண்றேன்!’’

‘‘நல்ல செய்தி எதுவும் இருக்கா?’’

‘‘அதுக்கு இன்னும் டைம் இருக்கு!’’

- அமலன்
ஸ்பெஷல் படங்கள்: முத்துக்குமார்