கதை



பங்களா மாடியிலிருந்து தன் பி.ஏவோடு இறங்கி காருக்கு வந்தார் அவர். அவருக்காக வாசலில் இரண்டு மணி நேரமாக நான் வெயிட்டிங். ‘‘நீயும் காரில் ஏறு!’’ என்பதாக அவர் பார்வையாலேயே எனக்கு சமிக்ஞை செய்தார். அவர் டிரைவர் அருகே அமர்ந்துகொள்ள, நான் அந்த பி.ஏவோடு பின் சீட்டில் ஏறிக்கொண்டேன். பயணத்துக்கிடையே என்னைத் திரும்பிப் பார்த்து ‘‘என்ன கதை..? ஷார்ப்பா சொல்லு!’’ என்றார்.

நான் மடமடவென்று கதை சொல்ல ஆரம்பித்தேன். இடையிடையே பி.ஏவிடம் அவர் இன்று செய்யப் போகும் காரியங்களைப் பற்றி சீரியஸாகப் பேசினார். டிரைவரிடமும் வழி சொன்னார். மியூசிக் சிஸ்டம் இன்னொரு பக்கம் பாடிக் கொண்டிருந்தது. அவ்வப்போது என்னையும் திரும்பிப் பார்த்துக் கொண்டார். மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் இறங்கியவர் சொன்னார்... ‘‘த பார்... நான் இப்ப தெலுங்குப்படம் பண்றதுக்காக ஐதராபாத் போறேன்.

தமிழ்ல பண்ண ஆறு மாசம் ஆவும். உன் நம்பரை பி.ஏகிட்ட கொடுத்துட்டுப்போ... கூப்பிடறேன்!’’ - சொல்லிவிட்டுப் போய்விட்டார். பசியோடு பஸ் ஏறி வீட்டுக்கு வந்தேன்.‘‘அப்பா! அப்பா!! எனக்கு சிங்கம், நரி, முயல் கதை சொல்லுப்பா. நாளைக்கு ஸ்கூல்ல மிஸ் சொல்லச் சொன்னாங்க’’ என்றான் மகன் மழலையாக. ‘‘எனக்குத் தெரியலைடா’’ என்றேன் விரக்தியோடு!