பாதுகாப்பானவையா வங்கி லாக்கர்கள்?



தெரிஞ்ச விஷயம் தெரியாத விஷயம்


கடந்த வார பரபரப்பு சென்னையில் இருக்கும் பழமையான ஸ்டேட் வங்கிக் கிளையில் ஏற்பட்ட தீ விபத்துதான். பணம், நகைக்கு ஒன்றும் ஆபத்தில்லை என்றும் பாதுகாப்புப் பெட்டகங்கள் சேதமடையவில்லை என்றும் அப்டேட்ஸ் வந்த பிறகுதான் பலருக்கும் டென்ஷன் குறைந்தது. வங்கி லாக்கர்கள் பற்றி பாஸிட்டிவாகவும் ஆர்வக் கோளாறாகவும் பல கேள்விகளை ஏற்படுத்தியிருக்கிறது இந்தச் சம்பவம். சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஆவடி கிளை மேலாளர் எஸ்.ரவியிடம் எல்லா கேள்விகளையும் வைத்தோம்!

வங்கி லாக்கர்கள் எந்த அளவு பாதுகாப்பானவை?

‘‘நம் வீட்டு பீரோக்களை விட ஆயிரம் மடங்கு பாதுகாப்பானவை. தீயாலோ, தண்ணீராலோ பாதிக்கப்படாத அளவுக்கு கனமான உலோகத்தால் அவை செய்யப்படுகின்றன. ஒரு பிரமாண்டமான ரேக்கில் நூற்றுக்கணக்கான லாக்கர்கள் இணைக்கப்பட்டிருப்பதால், யாரும் அதை எடுத்துக்கொண்டு ஓடுவதும் சாத்தியமில்லை. லாக்கர்கள் அமைந்திருக்கும் அறையே கனமான உலோகக் கதவுகளால் மூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு லாக்கருக்கும் மூன்று துவாரமுள்ள லாக்குகள் இருக்கும். அதாவது, மூன்று சாவிகளைக் கொண்டுதான் இந்தப் பெட்டகங்களைத் திறக்க முடியும்.

முதல் சாவியை மாஸ்டர் கீ என்பார்கள். இந்த சாவி வங்கியின் வசமே இருக்கும். அடுத்த இரண்டு சாவிகளும் வாடிக்கையாளர்கள் வசம் ஒப்படைக்கப்படும். தங்கள் லாக்கரில் பொருட்களை வைக்கவோ எடுக்கவோ வாடிக்கையாளர்கள் வரும்போது, வங்கி அதிகாரிகள் மாஸ்டர் கீயோடு வந்து முதல் லாக்கை திறந்து கொடுத்துவிட்டு சென்று விடுவார்கள். லாக்கர் இருக்கும் அறைக்குள் ஒரு சமயத்தில் ஒரு வாடிக்கையாளர்தான் அனுமதிக்கப்படுவார் என்பதால் நூறு சதவீதம் பிரைவஸி உண்டு.’’

யாருக்கெல்லாம் வங்கி லாக்கர் வசதி வழங்கப்படும்?


‘‘லாக்கர் பெறுவதற்கான முதல் தகுதி, அந்தக் குறிப்பிட்ட வங்கிக் கிளையில் நீங்கள் வாடிக்கையாளராக இருப்பதே. வங்கிக் கணக்கு இருந்தாலும் அதைத் தொடர்ந்து பயன்படுத்துவராகவும் இருக்கவேண்டும். ஐந்து வருடத்துக்கு முன்பு வெறும் ஐநூறு ரூபாயை மட்டுமே போட்டுவிட்டு, பிறகு எந்த வித டிரான்ஸாக்ஷனும் செய்யாமல், லாக்கர் வேண்டும் என்று அதிகாரிகளிடம் அடம் பிடித்தால் கை விரித்துவிடுவார்கள்.

 தொடர் டிரான்ஸாக்ஷன் மட்டுமே சேஃப்டி லாக்கர் பயன்படுத்தும் உரிமையை வாடிக்கையாளருக்கு வழங்கிடாது. அந்த வாடிக்கையாளர் செய்யும் தொழில் நேர்மையானதா, இருக்கும் வீட்டு முகவரி சரியானதா, சமூகத்தில் அவருக்கு இருக்கும் மதிப்பு என்ன என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு சரியான விடை தெரிந்த பின்னரே லாக்கர் கோரிக்கையைப் பரிசீலிப்போம். நம் நாட்டில் வங்கிப் பாதுகாப்பு பெட்டகங்களின் பற்றாக்குறை அப்படி. இதனால்தான் இன்று தனியார்களும் இந்த சேவையை வழங்க முன்வந்திருக்கிறார்கள்.’’

வாடகை..?

‘‘சிறிய பெட்டகம் என்றால் சில வங்கிகள் வருடத்துக்கு 1200 ரூபாய் வரை வாடகை வசூலிக்கிறார்கள். இந்த வாடகைக்கு சேவை வரி, 12.36%. பெரிய பெட்டகம் என்றால் பத்தாயிரம் ரூபாய் வரை வசூலிக்கின்றன வங்கிகள். பெட்டக சேவைக்காக டெபாசிட் வாங்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கி சொல்கிறது. ஆனாலும் டிமாண்ட் அதிகம் இருப்பதால் சில வங்கிகள் இந்த சேவைக்கு டெபாசிட் வசூலிப்பதும் உண்டு.’’

லாக்கரில் எதையெல்லாம் வைக்கலாம்?

‘‘லாக்கருக்குள் வாடிக்கையாளர்கள் எதை வைக்கிறார்கள் என்பதை யாரும் பார்க்கப் போவதில்லை. அதற்காக எதையும் வைத்து விடலாம் என்று அர்த்தமில்லை. தடை செய்யப்பட்ட பொருட்களை வைக்கக் கூடாது. ஒருவேளை கறுப்புப் பணம், கள்ள நோட்டு, திருட்டு நகைகள் போன்றவை அதற்குள் இருந்து, விசாரணைக்காக வருமான வரி அதிகாரிகளும், சுங்கத் துறையினரும் வந்தால், அவர்களுக்கு மாஸ்டர் கீயை எடுத்துக் கொடுக்க வேண்டியது வங்கிகளின் கடமை. சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் தலைமறைவாகிவிட்ட பட்சத்தில் காவல்துறையினர் லாக்கரை உடைத்துப் பார்க்க விரும்பினாலும் அனுமதிக்கத்தான் வேண்டும்.

ஒருவேளை தீயாலோ வெப்பத்தாலே லாக்கரில் இருக்கும் பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டால், வங்கிகள் இழப்பீடு வழங்குமா?

‘‘இதற்கு வாய்ப்பு மிகமிகக் குறைவு. அப்படியே நடந்தால் முழுமையான இழப்பீடு கிடைக்க வாய்ப்பில்லை. காரணம், லாக்கருக்குள் என்ன இருந்தது என்றே தெரியாமல் இழப்பீட்டைக் கோரவே முடியாது. வங்கிகள் தங்கள் பாதுகாப்பில் உள்ள பொருட்களுக்கென பொதுவான காப்பீட்டைப் பெற்றிருக்கும். வாடிக்கையாளர் இழந்ததாக குறிப்பிடும் மதிப்பை வைத்து, காப்பீட்டு நிறுவனம் ஒரு உத்தேசமான நிவாரணத் தொகையை வழங்கலாம். அது முழுமையான இழப்பீடாகாது!’’

வார்த்தை சாவி!

பெட்டகம் ஒதுக்கப்படும்போதே வாடிக்கையாளர் தவிர, அவர் பரிந்துரைக்கும் மூன்று அல்லது நான்கு பேருக்கு பெட்டகத்தைத் திறப்பதற்கான உரிமை வழங்கப்படும். ஏ.டி.எம் பாஸ்வேர்டு மாதிரி இவர்களுக்கு ஒரு தனி சங்கேத வார்த்தையும் வழங்கப்படும். சச்சின், ரஜினி, தலாய் லாமா என ஒரு பெயராகக் கூட அது இருக்கலாம். லாக்கரின் சாவியோடு வருகிறவர்கள் இந்த சங்கேத வார்த்தையை சரியாகச் சொன்னால்தான் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். சாவியைத் திருடிக் கொண்டு வருபவர்களைத் தடுப்பதற்காக இந்த முறையை அறிமுகப்படுத்தி யிருக்கின்றன வங்கிகள்!

- டி.ரஞ்சித்
படம்: ஆர்.சி.எஸ்