வேலை வாங்கித் தருவதாக பணம் பறிக்கும் இணையதளங்கள்!



உஷார் ரிப்போர்ட்

சென்னை புறநகர்ப்பகுதி ஒன்றிலிருந்து நம்மைத் தொடர்பு கொண்டார் அந்தப் பெண். அதிர்ச்சியும், ஆவேசமும் பொங்கியது அவர் பேச்சில். ‘‘எம்.பி.ஏ. முடிச்சிருக்கேன். ஒரு நிறுவனத்தில டி.ஜி.எம்மா இருந்தேன். தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த வேலையை விட்டுட்டு வேறு வேலைக்கு முயற்சி செஞ்சேன். வேலைவாய்ப்புக்கு உதவுற ஒரு பிரபல இணையதளத்துல என் ப்ரொஃபைலை இணைச்சிருந்தேன்.

ஒரு வாரத்துல எனக்கு ஒரு போன் வந்துச்சு. அந்த இணையதளத்துல இருந்து பேசுறதா சொன்ன நபர், ‘சென்னையில உள்ள ஒரு பெரிய நிறுவனத்தில உங்களை டிஜிஎம் பைனான்ஸ் பணிக்கு தேர்வு பண்ணியிருக்காங்க. Naukrihr.com என்கிற இணையதளத்துல சில தகவல்களை அப்டேட் பண்ணினா கால்லெட்டர் கிடைக்கும்’னு சொன்னான். 

பெரிய நிறுவனத்தில நான் எதிர்பார்த்த மாதிரி ஒரு வேலை கிடைச்ச சந்தோஷம். அவன் கொடுத்த இணையதள முகவரியும் நம்பகமா இருந்ததால உடனடியா அதை ஓப்பன் பண்ணினேன். அந்த தளத்தோட முகப்புலResume2job¡னு   இருந்துச்சு. உள்ளே நிறைய ‘கெட்டிங்ஸ்’ இருந்துச்சு. ‘Job strikerனு   ஒரு கெட்டிங்கை ஓபன் பண்ணி 2500 ரூபாய் கட்டுங்க, அது எங்க சர்வீசுக்கான கட்டணம்’னு சொன்னான். உடனே டெபிட் கார்டுல இருந்து பணம் கட்டினேன்.

அதுக்கப்புறம் சீனியர் ஆபீசர்னு ஒருத்தன் லைனுக்கு வந்தான். அவன், ‘டாகுமென்ட் வெரிஃபிகேஷனுக்கு 3250 ரூபாய் கட்டுங்க’ன்னான். அப்படியே இன்க்ரிமென்ட் காம்போ, அட்மினிஸ்ட்ரேட்டிவ் சார்ஜ்னு என்னென்னவோ சொல்லி, சில நிமிடங்கள்ல 39,342 ரூபாய் பறிச்சுட்டாங்க. வேலைதான் கன்ஃபார்ம் ஆயிடுச்சேன்னு கேட்ட பணத்தையெல்லாம் கட்டினேன். கடைசியா, ‘இதுதான் உங்க ரெஃபரன்ஸ் நம்பர், நீங்க வேலைக்குத் தயாரா இருங்க’ன்னு சொல்லி ஒரு நம்பரைக் கொடுத்துட்டு கட் பண்ணிட்டான்.

அதுக்கப்புறம் எதுவும் தகவல் இல்லை. ஒரிஜினல் Naukri.com   இணையதளத்துல அந்த ரெஃபரன்ஸ் நம்பரை பயன்படுத்தினா ஓப்பனே ஆகலே. அவங்களுக்கு மெயில் அனுப்பிக் கேட்டப்போ, ‘எங்களுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

நாங்க யார்கிட்டயும் பணமே வாங்குறதில்லை’ன்னு சொல்றாங்க. திரும்பவும் இவனுங்க நம்பருக்கு கால் பண்ணினா ‘சுவிட்ச் ஆஃப்’னு வருது. அதுக்கப்புறம் கூகுள்ள சர்ச் பண்ணினா என்னை மாதிரியே இதுல சிக்கி ஏகப்பட்ட பேர் பணத்தை இழந்திருக்காங்க’’ என அவர் ஏமாந்த கதையைச் சொன்னபோது பரிதாபமாக இருந்தது.

www.naukri.com, www.monsterindia.com, www.timesjobs.com என பல இணையதளங்கள் வேலை தேடுவோரையும், வேலை தருவோரையும் இணைக்கின்றன. வேலை தேடுவோர் இந்த இணையதளங்களில் தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம். அதற்கு எந்தக் கட்டணமும் கிடையாது. வேலைக்கு ஆள் தேடும் நிறுவனங்கள், இந்த இணையதளங்களோடு ஒப்பந்தம் செய்து, அதில் பதிவு செய்துள்ள நபர்களிலிருந்து தங்களுக்கான ஊழியர்களைத் தேர்வு செய்வார்கள். பல்லாயிரம் பேர் இந்த இணையதளங்கள் மூலம் வேலை பெறுவார்கள்.

ஆனால், இந்த இணையதளங்களிலிருந்து விபரங்களைத் திருடி, ஓரிரு எழுத்துகள் வித்தியாசத்தோடு இணையதளங்களை உருவாக்கி காசு பறிக்கும் வேலையில் சிலர் ஈடுபடுகிறார்கள். அப்பாவிகளின் பலவீனத்தைக் காசாக்கும் இதுபோன்ற போலி இணைய மோசடியாளர்களிடம் ஏராளமானோர் பணத்தை இழந்துள்ளார்கள். இவர்களைத் தடுக்கவே முடியாதா?

‘சைபர் சொசைட்டி ஆஃப் இந்தியா’ அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான சீனிவாசனிடம் கேட்டோம். ‘‘பரந்து விரிந்த இந்த உலகத்தை ஒரேயொரு நேர்கோட்டில் இணைத்த மாயசூத்திரம்தான் இணையம். எந்த அளவுக்கு வாழ்க்கையை அது எளிதாக்கி இருக்கிறதோ, அதே அளவுக்கு பாதுகாப்பின்மையையும் உருவாக்கி இருக்கிறது. லாட்டரியில் பரிசு; தொண்டு நிறுவனம் தொடங்க பணம் தருகிறோம்;

சொத்தைப் பிரித்துத் தருகிறோம் என என்னவெல்லாமோ சொல்லி சபலப்படுத்துகிறார்கள். இதுபோன்ற மோசடி செய்திகளை நம்பி பலர் பணத்தையும் நிம்மதியையும் இழக்கிறார்கள். இணைய மோசடியாளர்களை சரியாக அடையாளம் காண்பது மிகவும் சவாலானது. துரதிர்ஷ்டவசமாக இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

வேலை தேடுபவர்கள் எப்போதும் ஒருவித தவிப்பில் இருப்பார்கள். அந்த தவிப்பை இவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதுபோன்ற மோசடியாளர்களிடம் இருந்து தப்பிக்க ஒரே வழி, சுய விழிப்புணர்வு தான். நேருக்கு நேராக பணம் வாங்குபவர்களே ஏமாற்றி விடுகிறார்கள். ஒரு இணையதளம் தன் சேவைக்காக பணம் கேட்கிறது என்றால் உடனடியாக கட்டக்கூடாது. கூகுளில் அந்த இணையதளத்தின் பெயரை டைப் செய்து சர்ச் செய்து பார்க்க வேண்டும். அது மோசடி இணையதளம் என்றால் அதில் ஏமாந்தவர்கள் நிச்சயம் அதைப் பற்றி எழுதியிருப்பார்கள்’’ என்கிறார் சீனிவாசன்.

மனிதவளத்துறை நிபுணர் சுஜித்குமாரிடம் இது பற்றிப் பேசினோம். ‘‘வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைப் போலவே மோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பெரிய நிறுவனங்களின் லெட்டர் ஹெட்டில் போலியாக ஆஃபர் லெட்டர் தயாரித்துக் கொடுத்து காசு பார்க்கும் மோசடியும் நடந்து வருகிறது.

 வேலை பெற்றுத் தரும் நம்பகமான இணையதளங்கள், வேலை தேடுபவரிடம் பணம் வாங்குவதே இல்லை. தங்கள் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளும் நிறுவனங்களிடம்தான் பணம் வாங்குகின்றன. இணைய தளமோ, நிறுவனமோ வேலை பெற்றுத் தருவதற்குப் பணம் கேட்டால் நிச்சயம் ஏதோ உள்குத்து உள்ளது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

பெரிய நிறுவனங்களில் வேலை ரெடி என்று கூறி பணம் கேட்டால் நேரடியாக அந்த நிறுவனத்திடமே பேசி உறுதிசெய்து கொள்ளலாம். அந்த நிறுவன இணையத்தில் தொலைபேசி எண் இருக்கும். நேற்று ஆரம்பித்த சிறு நிறுவனமாக இருந்தால் கூட நேரடியாகக் கூப்பிட்டு இன்டர்வியூ செய்யாமல் வேலை தரமாட்டார்கள்.

இப்போதெல்லாம் பெரிய நிறுவனங்கள் கன்சல்டன்ஸி வைத்தெல்லாம் ஆட்களைத் தேர்வு செய்வதில்லை. அவர்களின் இணையதளத்திலேயே ‘கேரியர்’ என்ற ஆப்ஷன் இருக்கிறது. அதிலேயே பயோடேட்டாவை இணைத்து விட முடியும். எந்த ரெஃபரன்சும் இல்லாமல் ஒரு போன் காலை நம்பி பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்து விட்டதற்கு மகிழ்ந்து பணம் கட்டுவது அபத்தமான விஷயம்’’ என்கிறார் சுஜித்குமார்.

சென்னை சைபர் க்ரைம் பிரிவு துணை ஆணையர் ஜெயகுமாரின் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றோம். ‘‘வேலை கிடைத்துவிட்டதாகக் கூறி பணம் பறிப்பது தொடர்பாக சில புகார்கள் வந்துள்ளன. விசாரணை நடந்து வருகிறது. நன்கு படித்தவர்களே இதுபோன்ற இணையதளங்களை நம்பி ஏமாறுவது வேதனை அளிக்கிறது. கண்டிப்பாக மோசடி இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார் அவர்.

இணையதளமோ, நிறுவனமோ வேலை பெற்றுத் தருவதற்குப் பணம் கேட்டால் நிச்சயம் ஏதோ உள்குத்து உள்ளது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

வெ.நீலகண்டன்