‘ராமானுஜன்’



வேண்டிய வசதிகளற்று, வறுமையில் வாடி சரிந்த சாதனையாளர்கள் இங்கே அனேகம். அப்படிப்பட்ட ஒரு நிலையிலிருந்து மீண்டு எழுந்து மறைந்த கணித மேதை சீனிவாச ராமானுஜனின் சுருக்கப்பட்ட வாழ்க்கைக் கதை. அக்ரஹாரத்தில் பிறந்து லண்டன் வரைக்கும் சென்று, கணிதத்தின் பல புதிர்களை விடுவித்த ராமானுஜனை நமக்குத் தெரியாது.

 தெரிந்துகொள்ள கொண்டு வந்து கண் முன்னே நிறுத்துகிறார் இயக்குநர் ஞான ராஜசேகரன். குத்துப்பாட்டும், வெத்துவேட்டும், ரத்தக்களறியும், விடலைக் காதலும் மலிந்த தமிழ் சினிமாவில் இத்தகைய ஒரு பதிவைக் கொண்டு வந்த அழகிய, துணிச்சலான முயற்சிக்காகவே ‘ஞான’த்திற்கு ஒரு பெரிய பூங்கொத்து. இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டிய வரலாற்று நாயகன் ராமானுஜனின் வாழ்க்கை மதிப்பீடுகளை ஒரே படத்தில் பேச முயன்றதற்காக இயக்குநர் ஞானராஜசேகரனுக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும்.

அதிகபட்சமாக ராமானுஜனாக வாழ்ந்திருக்கிறார் அபிநய். பள்ளியில் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் தவறுவதிலாகட்டும், பரீட்சையில் தவறி புலம்புவதிலாகட்டும், அபியின் முகத்தில் உச்சபட்ச துயரம். ராமானுஜன் போன்ற முகவெட்டும், உருவமும் அவருக்கு அட்டகாசமாகப் பொருந்துகிறது. துடிக்கும் வேதனையில் வெடிக்கும் துயரை வெளிப்படுத்துவதில் அவரின் தேர்வு அசல். எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும், எதுவொன்றிற்கும் கண்ணீர் உதிர்க்கும் ஒரு சாதாரண மனிதனோடு அவர் பொருந்திப் போவது ஆச்சரியமளிக்கிறது. 32 வயதிலேயே இறந்து, சாதனைகளின் முற்றுப் பெறாத ஆற்றாமையோடு ராமானுஜனைக் கொண்டு வருவதில் டைரக்டரின் முயற்சி வெற்றி பெறுகிறது.

இது மாதிரியான வாழ்க்கை சரிதைகளுக்கு இயக்குநர் புதியவர் இல்லையென்பது அவரது எளிமையான காட்சிப் பரிமாற்றங்களில் தெரிகிறது. ஆனால், ராமானுஜன் என்ற மேதையின் புத்திசாலித்தனத்தை திரையில் தோன்ற வைக்க முடியாமல் திணறுகிறது திரைக்கதை. கணிதத்தில் ஆழ்ந்து, மற்றவற்றில் கவனம் இழந்த அவரின் வாழ்க்கையில் வேறு பக்கத்தையும் கொண்டு வந்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே! திரும்பத் திரும்ப ராமானுஜன் புகழ் பாடுவதிலேயே படம் மெலோடிராமாவாக மாறிப்போவதை டைரக்டரால் தவிர்க்க முடியவில்லை. ‘பாரதி’யில் கூட இதை சாதித்த இயக்குநர், இதில் தவறியது ஏன்? அந்நிய தேச இயக்குநர் ‘காந்தி’யைப் பற்றிச் சொன்னதை கண்டவர்கள்தானே நாம்!

ராமானுஜனின் அப்பாவாக ‘நிழல்கள்’ ரவி தத்ரூபம். பரீட்சையில் தவறும்போது வெறுப்பில் திட்டுவதும், ஓடிப்போன மகனை நினைத்து வருந்துவதும் எளிமையின் விளிம்பில் யதார்த்தம். சுஹாசினியும் அம்மாவாக உன்னதம். ராமானுஜனை எடுத்து முன் வைக்கும் ஒய்.ஜி.மகேந்திரனும் பாசத்தில் நிறைகிறார். அடடா, அந்த உருண்டை விழி பாமாவை மறக்க முடியாது. மனைவியாக அவரின் ஜாடையும், பரிதவிப்பும், பெருமூச்சும் இன்னொரு கதைக்கு கருவாகும்.

அந்தக் கால இசையைக் கொண்டு வந்திருப்பதில் ரமேஷ் விநாயகம் - குறிப்பாக பாடல்களில் - நெகிழ வைக்கிறார். ராமானுஜனுக்கான அஞ்சலியில், அவரின் மேல் வீசப்படுகிற வண்ண மலர்களில் விநாயகத்தின் பங்கு மகா அழகு. ‘விண் கடந்த ஜோதியாய்’ மட்டும் இந்தக் கணத்திலும் மனதில் நிற்கிறது. ஆனாலும், படம் முழுவதும் வந்து போகிற குடுமி வைத்த கேரக்டர்கள், எப்போதும் என்ன செய்வதென்பது அறியாமல் திகைத்து நிற்பது பரிதாபம். அடிக்கடி தலை தூக்கும் நாடகத் தன்மையை தவிர்த்திருந்தால், சினிமா வரலாற்றில் காவியத் தன்மையை அடைந்திருப்பான் இந்த ‘ராமானுஜன்!’

குங்குமம் விமர்சனக் குழு