லஞ்சம் வாங்க மாட்டாங்க!



இங்க படிச்சுட்டுப் போன  யாரும்

‘‘எங்க காலம் வரைக்கும் நெசவாளர் குடும்பத்துப் பிள்ளைங்க யாரும் பள்ளிக்கூடம் போனதில்லை. தறியில சீடா போட விட்டுருவாங்க. நானும் 2ம் வகுப்புதான் படிச்சேன். அதுக்குப் பிறகு சீடாவுல உக்காந்துட்டேன். வளர வளர, ‘படிக்கலையே’ங்கிற வருத்தமும் வளர்ந்துச்சு. 20 வயசுல காந்தியடிகள் நற்பணிக் கழகம் பற்றிக் கேள்விப்பட்டு வந்து சேந்தேன். இப்போ பி.ஏ. முடிச்சுட்டு இந்தி ஆசிரியரா இருக்கேன்...’’  பூரிப்பாகச் சொல்கிறார் செல்வம்.

மிகவும் ஏழ்மையான சூழலில் குழந்தைத் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கிய தனராமன், இன்று ஒரு தனியார் பள்ளியில் வேதியியல் ஆசிரியர். அவரையும் உருவாக்கியது காந்தியடிகள் நற்பணிக் கழகம். கடந்த 39 ஆண்டுகளில் செல்வத்தையும் தனராமனையும் போல படிக்க வாய்ப்பற்ற பல நூறு இளைஞர்களை படிப்பாளிகளாக்கி வாழ்க்கையை மாற்றியிருக்கிறது கும்பகோணம் காந்தியடிகள் நற்பணிக் கழகம். இதன் நிறுவனர், பாலசுப்பிரமணியன்.

எளிமையும் தூய்மையுமாக வாழும் சமரசமற்ற காந்தியவாதி. இவரும் ஒரு குழந்தைத் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கியவர்தான். வெற்று வார்த்தைகளைப் போதிக்காமல் தன் வாழ்க்கையையே பாடமாக்கிப் போதிக்கும் இவர், தன் வாழ்வாதாரத்துக்காக சிறிய மளிகைக்கடை நடத்துகிறார்.

‘‘சமூகத்துக்குப் பயனுள்ள நல்ல குடிமக்களை உருவாக்குறது தான் கல்வின்னு சொன்னார் காந்தி. ஆனா இன்னிக்கு கல்வியோட நோக்கம் மாறிடுச்சு. வாழ்க்கைக்கான கல்வி அழிஞ்சு, வேலைக்கான கல்வியா மாறிடுச்சு.

 நாங்க எங்க அளவுல அதை மாத்த போராடுறோம். காந்தியோட 18 ஆக்கப்பணிகள்ல இன்றைய நடைமுறைக்குச் சாத்தியப்பட்ட பணிகளை செஞ்சுக்கிட்டிருக்கோம்...’’  அடக்கமாகப் பேசுகிறார் பாலசுப்பிரமணியன்.

மிகச் சிறிய அறை ஒன்றில் தொடங்கிய காந்தியடிகள் நற்பணிக் கழகம், இன்று பிரமாண்டமான சொந்தக் கட்டிடத்தில் இயங்குகிறது. எல்லாம் இங்கு படித்து முன்னேறிய பழைய மாணவர்களின் கொடை. ‘‘நான் சின்னவனா இருக்கும்போதே அப்பா தவறிட்டார். வீட்டுல நான்தான் மூத்தவன்.

ரெண்டு தம்பிங்க, ஒரு தங்கை. குடும்பத்துக்கு வருமானம் இல்லாமப் போச்சு. செம்பியன் மாதேவி கிராமத்துல எங்க சின்னம்மா மளிகைக்கடை வச்சிருந்தாங்க. ‘இங்கிருந்து படி, ஓய்வு நேரத்துல கடையில நில்லு’ன்னு கூப்பிட்டாங்க; போயிட்டேன்.

தன்னிலப்பாடிங்கிற ஊர்ல உள்ள காந்தியடிகள் நடுநிலைப்பள்ளியிலதான் படிச்சேன். காந்தியை மனசுக்குள்ள சிம்மாசனம் போட்டு உக்கார வச்சது அந்தப் பள்ளிதான். ‘ஆர்.என்.ஆர்’னு ஒரு நல்ல மனிதர் தொடங்கின பள்ளி அது. பழுத்த காந்தியவாதி. மற்றவர்களுக்காக வாழ்கிற வாழ்க்கையை அந்த பள்ளி தான் கத்துக் கொடுத்துச்சு. ஆசிரியர்கள் எல்லாருமே முன்மாதிரிகளா வாழ்ந்தாங்க.    படிப்பு மேல எனக்கு பெரிய ஈர்ப்பு. அப்போ ராமநாதபுரம் வட்டாரத்துல இருந்து எங்க பகுதிக்கு நிறைய பேர் பிழைப்புத் தேடி வருவாங்க.

அவங்க சொல்ற பஞ்சக்கதைகளைக் கேட்டு மனசுக்கு கஷ்டமா இருக்கும். படிச்சு ராமநாதபுரத்துக்கு கலெக்டரா போகணும்ங்கிறது என் கனவு. ஆனா குடும்பச்சூழல் இணக்கமா இல்ல. தம்பி களையும், தங்கையையும் படிக்க வைக்கணும். அதனால எட்டாம் வகுப்போட படிப்பை நிறுத்திட்டு கடையிலயே நின்னுட்டேன். கொஞ்சநாள்ல கும்பகோணம் வந்து சொந்தமா ஒரு மளிகைக்கடையை ஆரம்பிச்சேன்.

மனசுக்குள்ள படிக்க முடியலையேங்கிற தவிப்பு. அப்போ, காமராஜர் பல்கலைக்கழகத்துல மெட்ரிக்குலேஷன் படிப்புன்னு ஒண்ணு இருந்துச்சு. எஸ்.எஸ்.எல்.சிக்கு இணையான
அந்தப் படிப்பை வீட்டில இருந்தபடி படிக்கலாம்.

அதுல சேந்தேன். அப்போ வயசு 23. காந்தியோட 18 ஆக்கப்பணிகள்ல இந்திப் பிரசாரம் முக்கியமானது. இந்தியின் மூலமா இந்தியாவை ஒருமைப்படுத்த நினைச்சார் காந்தி. அதே நேரம், தாய்மொழி வழிக்கல்வியையும் அந்த செயல்திட்டத்துல வலியுறுத்துறார். இந்தியைக் கத்துக்கணும்; தாய்மொழியில படிக்கணும். இதுதான் காந்தியம். நான் இந்தியில எம்.ஏ. முடிச்சேன்.

நான் இருந்தது, அடித்தட்டு மக்கள் வசிக்கிற பகுதி. அப்போ, எஸ்.எஸ்.எல்.சியில ஒரு பாடத்துல ஃபெயிலாப் போனா இப்போ உள்ளமாதிரி அந்தப் பாடத்தை மட்டும் எழுத முடியாது. எல்லாப் பாடத்தையும் திரும்பவும் எழுதணும். பரீட்சை எழுதற பாதிப்பேர் ஃபெயில் ஆகிடுவாங்க. வசதியுள்ள பிள்ளைகள் டுடோரியல் காலேஜ்ல சேந்து திரும்பவும் படிப்பாங்க. முக்கால்வாசிப் பேர் டுடோரியலுக்கு பணம் கட்ட முடியாம, படிப்பை விட்டுட்டு வேலைக்குப் போயிடுவாங்க.

வசதி இல்லாத பிள்ளைகளுக்காக ஒரு டுடோரி யல் தொடங்கலாம்னு யோசிச்சேன். சுந்தரமூர்த்தி, வீரராஜன், வீராச்சாமி, நாகராஜன்னு நாலு பேர் தோள் கொடுத்தாங்க. 1975, ஜூன் 5ம் தேதி காந்தியடிகள் நற்பணிக் கழகத்தைத் தொடங்கினோம். 50 பேர் படிக்க வந்தாங்க.

ஒருமுறை எங்க கழகத்துக்கு வந்த பேராசிரியர் நெ.து.சுந்தரவடிவேல், ‘சிறுவர்களுக்கு கல்வி புகட்ட நிறைய ஏற்பாடுகள் இருக்கு. குடும்பச் சூழ்நிலையால பள்ளி செல்ல முடியாம தொழிலாளர்களாக நிர்ப்பந்திக்கப்பட்டு, அப்படியே வளர்ந்த பெரியவர்களுக்கும் பயிற்றுவிக்க வேண்டும்’னு சொன்னார்.

அதை வேதவாக்கா எடுத்துக் கிட்டு பள்ளி இடைநின்றவர்களைத் தேடத் தொடங்கினோம். அவங்களுக்கு நேரடியா இ.எஸ்.எல்.சி தேர்வை எழுத பயிற்சி கொடுத்தோம். அடுத்து எஸ்.எஸ்.எல்.சி, பியூசி, டிகிரி... அப்படியே இந்தியும் கத்துக் கொடுக்க ஆரம்பிச்சோம். இப்படித்தான் காந்தியடிகள் நற்பணிக் கழகம் வளர்ந்துச்சு...’’ என்கிறார் பாலசுப்பிரமணியன்.

32 ஆசிரியர்கள்...


எல்லோரும் இங்கே படித்து வேலையில் இருப்பவர்கள். ஒரு பைசா சம்பளம் இல்லை. அதற்காக ஏனோதானோ என்றெல்லாம் வரமுடியாது. அனைத்திலும் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். காலை ஆறே முக்காலுக்கு நற்பணிக் கழகம் திறக்கிறது. வேலை பார்த்துக் கொண்டே படிப்பவர்களுக்கு, எட்டே முக்கால் வரை வகுப்புகள். பிறகு, மாலை ஐந்தே கால் முதல் பத்து மணி வரை இந்தி மற்றும் தனிப்பயிற்சி வகுப்புகள். யாரிடமும் ஒத்தைப் பைசா வாங்குவதில்லை.

‘‘படிப்புக்கு பணம் தடையா இருக்கக்கூடாதுங்கிறது காந்தியோட கொள்கை. இப்போ வசதியில்லாத பிள்ளைகள் மேற்படிப்பு படிக்கறதுக்கு உதவி செய்ய நிறைய கொடையாளர்கள் தயாரா இருக்காங்க.

அவங்களை எங்க சேவையில இணைக்கிறோம். இங்கே படிக்கிற எல்லா மாணவர்களுக்கும் காந்திய சிந்தனையை தனிப்பாடமா பயிற்றுவிக்கிறோம். இங்கிருந்து போன யாரும் நிச்சயம் லஞ்சம் வாங்க மாட்டாங்க. கடமை தவற மாட்டாங்க. நிறைய பொறுப்பான பிள்ளைகளை உருவாக்கியிருக்கோம்...’’  பாலசுப்பிரமணியனின் முகத்தில் பெருமிதம்.

தாராசுரம் பொன்னியம்மன் கோயில் தெரு, ஒரு காலத்தில் கள்ளச் சாராயம் கரை புரண்டோடிய ஏரியா. இன்றைக்கு அது கட்டுக்கோப்பான பகுதியாக மாறியிருக்கிறது. மதுவை எதிர்க்கும் ஒரு புதிய தலைமுறையை இங்கு உருவாக்கியிருக்கிறது இந்தக் கழகம். இதற்குத்தானே ஆசைப்பட்டார் காந்தி மகான்! சமூகத்துக்குப் பயனுள்ள நல்ல குடிமக்களை உருவாக்குறதுதான் கல்வின்னு சொன்னார் காந்தி. ஆனா இன்னிக்கு கல்வியோட நோக்கம் மாறிடுச்சு.

வெ.நீலகண்டன்
படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்