பழசு



‘‘இதோ... இது 1930 மாடல் கார்... இதோ, இது 1940 மாடல். இது, 1925 மாடல் கார்! புது கார்களை விட, இப்போ இந்த பழங்கால கார்களுக்கு மதிப்பு அதிகம்!’’   தனது கார் கலெக்ஷனை எனக்குக் காட்டினான் நண்பன் வினோத்.‘‘ஆனா, பழமைக்கு இருக்கற மரியாதையும், மதிப்பும் நம்ம நாட்டுல யாருக்கும் புரியறதில்லை. வெளிநாட்டில் இந்த மாதிரி பழமையான பொருட்களுக்கு என்ன விலை வேணும்னாலும் கொடுப்பாங்க!’’

‘‘உண்மைதான் வினோத். நானும் பல வீடுகள்ல பார்த்திருக்கேன். ஒரு மிக்ஸியோ, கிரைண்டரோ வாங்கிட்டா, பழைய அம்மிக்கல்லையும் உரலையும் தூக்கி வெளியே போட்டுடறாங்க...’’ என்றேன் நான். ‘‘பழையதை அலட்சியமா நினைக்கற போக்கை மாத்திக்கணும். உண்மையிலேயே, அதெல்லாம் விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள்!’’  பேசிக்கொண்டே போனான் வினோத்.

அப்போதுதான் ஞாபகத்துக்கு வந்தது. எப்போது நான் வந்தாலும் என்னை வரவேற்று பேசிக்கொண்டிருக்கும் வினோத்தின் அப்பாவைக் காணோமே!

‘‘எங்கே வினோத், அப்பாவைக் காணோம்..?’’“ப்ச்... எப்போ பார்த்தாலும் நை நைனு பழைய விஷயங்கள் எதையாவது பேசிக்கிட்டு இருக்காரு. பெரிய தொந்தரவா இருந்துச்சு அவரால... போன வாரம்தான் முதியோர் இல்லத்துல சேர்த்தேன்’’ என்றான் வினோத் அசட்டையாக!       

கே.ஆனந்தன்