கார்த்திகா... துளசி... யார் பெஸ்ட்?



ஜீவா ஜிலீர்

ஷூட்டிங்கில் நடந்ததோ, பர்சனலோ... விஷயங்களை முழுமையாகத் தெரிந்துகொண்டு, தயாரிப்போடு போனால்தான் முழுமையாகப் பேசுவார் ஜீவா. இல்லையென்றால் அவரிடமிருந்து ஒன்லைன் பதில்கள் மட்டுமே கிடைக்கும். மாலையில் கத்தாரில் பர்சனல் ட்ரிப், அடுத்த நாள் காலையில் சென்னையில் ‘யான்’ டப்பிங் என பட ரிலீஸ் பரபரப்பில் இருந்த ஜீவாவை அவரது அலுவலகத்தில் பிடித்தோம். ‘என்றென்றும் புன்னகை’தான் அவருக்கு! ‘‘ ‘யான்’ ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆகிடுச்சு

. இவ்வளவு லேட் ஏன்?’’

‘‘இது லேட் இல்லை. ‘ராம்’ ஒன்றரை வருஷமா ஷூட் பண்ணினோம். இது சுவிட்சர்லாந்து, மொராக்கோ, மும்பைன்னு டிராவல் பண்ற கதை. மும்பையில இருக்குற ஹீரோ அங்கிருந்து மொராக்கோ எப்படிப் போறார்னு சொல்றோம். பாஷை தெரியாத ஊர்ல சிக்கித் திணறுகிற ஒருத்தனுக்கு, அங்கே ஒரு காதல். விசா, ஃபார்மாலிட்டீஸ் அது இதுன்னு நிறைய டைம் எடுத்துடுச்சு. மொத்தப் படத்தையும் எண்பது நாள்ல முடிச்சாச்சு. மார்ச், ஏப்ரல்ல மொராக்கோ விசா கிடைச்சிடும்னு நினைச்சோம்.

 ஆனா, அடுத்த வருஷம் பிப்ரவரியிலதான் கிடைச்சது. ஆனா, அங்க ‘கிங்டம் ஆஃப் ஹெவன்’ மாதிரியான படங்கள் பண்ணின ஃபாரீன் லைன் புரொடியூஸர்ஸ் எல்லாம் எங்களுக்குக் கிடைச்சாங்க. மொராக்கோல ‘மம்மி’, ‘கிளியோபாட்ரா’ படங்களோட செட்களுக்கு பக்கம்தான் எங்க ஷூட்டும் நடந்தது. நல்ல ட்ராவல். எனக்கு ட்ராவலிங் ரொம்பப் பிடிக்கும். அந்த வகையில் மனசுக்கு சந்தோஷம் தந்த படம் இது!’’‘‘ரவி.கே.சந்திரன்...’’

‘‘அவர் ஒரு லெஜண்ட். பயங்கர காமெடி சென்ஸ் உள்ளவர். பெரிய ஆர்ட்டிஸ்ட், டைரக்டர்ஸ்னு எவ்வளவோ பேரோட வொர்க் பண்ணியிருக்கார். அவர் என்கிட்ட கதை சொல்லிக்கிட்டு இருக்கறப்பவே, நான் ஹேப்பி ஆகிட்டேன். ‘கோ’ பண்ணின புரொடியூசர்ஸ்கிட்ட அறிமுகப்படுத்தி, ஷூட்டிங் போயிட்டோம். நிறைய விஷயம் அவர்கிட்ட கத்துக்கிட்டேன். ஒரு விஷயம் நல்லா இருந்தா உடனே தட்டிக் கொடுத்து என்கரேஜ் பண்ணுவார்.

நல்லா இல்லைன்னா, முகத்துக்கு நேரா பேசிடுவார். ‘நான் படமெடுக்க வந்திருக்கேன். ஃப்ரெண்டா வரல...’ன்னு சட்டுனு சொல்லி, வேலை வாங்குற வித்தை தெரிஞ்சவர் அவர். அவரோட தேவைகளுக்கு ஏற்ற மாதிரி நல்லா நடிச்சிருக்கேன்னு நினைக்கறேன்!’’

‘‘கார்த்திகா, துளசி... யார் பெஸ்ட்?

‘‘துளசி... ஸ்வீட் கேர்ள். குழந்தை மாதிரி. கார்த்திகா குட் டான்ஸர். குட் ஆக்ட்ரஸ். ஆரம்பத்துல எனக்குப் பெயர் குழப்பம் இருந்துச்சு. துளசியை ‘கார்த்திகா’ன்னு பல தடவை கூப்பிட்டுட்டேன். கார்த்திகா ரொம்ப தைரியசாலி. துளசி எதையும் சீக்கிரம் கத்துக்கிறவங்க. துளசியோ, கார்த்திகாவோ எங்களுக்குள்ளான கெமிஸ்ட்ரி, பயாலஜி எல்லாம் ஸ்பாட்ல நாங்க பேசி வச்சு நடிக்கிறதுதான். இதுவரை நான் நடிச்ச ஹீரோயின்கள்லயே துளசி ரொம்ப கம்ஃபர்ட்டபிளான பொண்ணு. கம்யூனிகேஷன் லெவல் எங்களுக்குள்ள அருமையா வொர்க் அவுட் ஆச்சு!’’

‘‘மொராக்கோவில் உங்களைக் கைது பண்ணிட்டாங்கன்னு நியூஸ் வந்ததே... என்னாச்சு?’’

‘‘என்னை ஏன் கைது பண்றாங்க? அது வதந்தி பாஸ். நடக்காத ஒரு விஷயத்துக்கு நான் ஏன் விளக்கம் சொல்லணும்?’’

‘‘உங்க பையன் ஸ்பார்ஷ் என்ன பண்றார்?’’

‘‘எல்.கே.ஜி படிக்கிறார். எங்க அப்பா என்னை எப்படி வளர்த்தாரோ, அதே மாதிரி அவரையும் வளர்க்க விரும்புறேன். ரெண்டு வருஷமா ஒரே ஒரு படம் மட்டும் பண்ணினதால, அவரோட டைம் ஸ்பெண்ட் பண்ண முடிஞ்சது. வீட்ல இருந்தா அவர் கூட ப்ளே ஸ்டேஷன்ல பேட்மேன், சூப்பர்மேன் கேம்ஸ் விளையாடுவோம். அவர்தான் ஜெயிப்பார்...’’

‘‘தேசிய விருது ஆசையெல்லாம் இல்லையா?’’

‘‘அவார்டுக்காக நான் நடிக்கவே இல்லை. ‘ராம்’க்கு சைப்ரஸ்ல கிடைச்ச அவார்டை நான் போய் வாங்கக்கூட இல்லையே. நான் விருதுகளை நம்புறதில்லை. நடிக்க வந்திருக்கேன். எல்லா படத்திலும் நடிக்கத்தான் செய்யுறேன். ‘ராம்’, ‘கற்றது தமிழ்’ல கொஞ்சம் ஆக்ரோஷமா நடிச்சதால, பெரிசா தெரியுது. கேஷுவலா, ‘என்றென்றும் புன்னகை’ மாதிரி சைலன்ட்டா நடிக்கறது கஷ்டம் தெரியுமா?’’

‘‘இப்பல்லாம் படம் ரிலீஸ் ஆகற அன்னிக்கே ஃபேஸ்புக், ட்விட்டர்ல அந்தப் படத்தை கழுவிக்கழுவி ஊத்திடுறாங்களே... கவனிக்கிறீங்களா?’’

‘‘அது வேலை இல்லாதவங்க பண்ற வேலை பாஸ். எனக்குத் தெரியும். மக்கள் உழைக்கிறாங்க... முந்நூறு ரூபாய் கொடுத்து படம் பார்த்துட்டு, அந்தப் படம் நல்லா இல்லைன்னா, ‘நல்லா இல்லை’ன்னுதான் சொல்வாங்க. படம் பிடிக்கலைங்கறதை சொல்றதுக்கு ஒரு கருவியா ஃபேஸ்புக்கை பயன்படுத்திக்கிறாங்க. இதைத் தடுக்க முடியாது. ஸோ, நல்ல படங்களைக் கொடுப்போம். ஒரு நல்ல படத்தைக் கெடுக்கப் பார்த்தாங்கன்னா, மக்களுக்கே உண்மை தெரிஞ்சிடும். மக்கள் எப்பவும் நல்ல படத்தை வாழ வைப்பாங்க!’’

‘‘தனுஷ் இந்தியில கலக்குறார். உங்களுக்கு பாலிவுட் ஐடியா இல்லீயா?’’

‘‘எனக்கு இருக்கற தமிழ்ப்படங்களில் நடிக்கறதுக்கே கரெக்டா இருக்கு. நான் தமிழ் இண்டஸ்ட்ரீக்கு வந்து பதிமூணு வருஷம்கிட்ட ஆகப்போகுது. வெரி கம்ஃபர்ட்டபிள் இன் தமிழ். தெலுங்குல கூட நடிக்கக் கேட்டாங்க. நான் போகலை. பாலிவுட் போனா, திரும்ப ஆரம்பத்திலிருந்து என்னை ப்ரமோட் பண்ண வேண்டியிருக்கும். அப்படி ஐடியா எதுவும் இல்லை. ஆனா, பாலிவுட்ல இருந்து பெரிய டைரக்டர், சென்ஸிபிளான ஸ்கிரிப்ட்டோட வந்தால் மறுக்காமல் ஓகே சொல்வேன்.’’

‘‘விஜய் உங்க ஃப்ரெண்ட்தானே.. ‘கத்தி’ பட பிரச்னைக்கு நீங்க குரல் எதுவும் கொடுக்காதது ஏன்?’’

‘‘ஒரு நடிகரா நான் ‘கத்தி’யைப் படமா மட்டும்தான் பார்க்குறேன். விஜய் பாடின ‘செல்ஃபி புள்ள’ பாட்டு கேட்டேன்... பிடிச்சிருக்கு. ஆனா, ‘கத்தி’க்கு பிரச்னை வந்திருக்கிறதா என் காதுக்கு எதுவும் நியூஸ் வரலை. சின்னச் சின்னதா எதிர்ப்பு, அது, இதுன்னு கேள்விப்படுற விஷயத்துக்கெல்லாம் கவனம் செலுத்திட்டு இருக்க முடியாது.

 ‘கத்தி’க்கு என்ன பிரச்னை வந்திருக்குதுன்னு உண்மையிலயே எனக்குத் தெரியாது. ஒரு நடிகரா உண்மையைச் சொல்லணும்னா எங்க படம் எப்போ ரிலீஸ் ஆகும், அது மக்களை எப்படி சந்தோஷப்படுத்தும்ங்கிறதை மட்டும்தான் பாக்குறோம் பாஸ். வேற எதையும் கவனத்தில எடுத்துக்கறதில்லை!’’

 மை.பாரதிராஜா