குட்டிச்சுவர் சிந்தனைகள்



எந்தெந்த காய்கறிகள் எந்தெந்த வகையில் வளரும், அதை நாம எப்படி எங்க பறிப்போம்னு என் பொண்ணுக்கு சொல்லிக்கிட்டு இருந்தேன். கேரட் மண்ணுக்குள்ள கிடைக்கும், கத்திரிக்காய் செடில கிடைக்கும், உருளைக்கிழங்கு மண்ணுக்குள்ள கிடைக்கும், அவரைக்காய் கொடில கிடைக்கும், பீட்ரூட் மண்ணுக்குள்ள கிடைக்கும்,

பூசணிக்காய் கொடில கிடைக்கும், வெண்டைக்காய் செடில கிடைக்கும், புடலங்காய் கொடில கிடைக்கும்னு அரை மணி நேரம் சொல்லிக் குடுத்துட்டு, தக்காளி எங்க கிடைக்கும்னு கேட்டா, என் பொண்ணு,

‘‘மார்க்கெட்ல கிடைக்கும்’’னு சொல்றா. என்னா ஒரு வில்லத்தனம்? இதைப் பற்றி ஒரு நண்பரிடம் சொன்னேன், அதுக்கு அவரு ‘‘எனக்கென்னமோ அடுத்து வர ஜெனரேஷன் காய்கறி முதல் பழவகைகள் வரை எல்லாம் எங்க கிடைக்கும்னு கேட்டா, வீட்டு ப்ரிட்ஜ்ல கிடைக்கும்னு சொன்னாலும் சொல்வாங்க’’ங்கறாரு. நியாயம்தானே!

கணவனும் மனைவியும் மாத்தி மாத்தி, ‘என்னடா, வாடா, போடா’ன்னு கூப்பிட்டுக்கிட்டா, அவங்களுக்குக் கல்யாணமாகி ஒரு வருஷம் கூட முடியலனு அர்த்தம். (அதாவது கொஞ்சுறாங்களாம்!) கணவன் மட்டும் மனைவிய ‘டா’ போட்டுக் கூப்பிட்டா அவங்களுக்கு கல்யாணமாகி ஒரு வருஷம் முடிஞ்சு ரெண்டாவது வருஷம் ஆரம்பமாகிடுச்சுனு அர்த்தம். (அதாவது, கணவர்கள் கெஞ்சுறாங்களாம்!) கணவனை மனைவி மட்டும் ‘டா’ போட்டு கூப்பிட்டா, அவங்களுக்கு கல்யாணமாகி மூணு, நாலு வருஷம் ஆகிடுச்சுன்னு அர்த்தம்.

(அதாவது, மனைவிங்க மிஞ்சுறாங்களாம்!) இதுவே, பெத்த மகனும் மகளும் டா போட்டு பேசினா, அவங்களுக்கு கல்யாண வயசு வந்திடுச்சு, காலாகாலத்துல கல்யாணம் பண்ணி வைக்கணும்னு அர்த்தம்!

டெல்லி மிருகக்காட்சிச் சாலையில நடந்த துயரமான சம்பவத்த எல்லோரும் கேள்விப்பட்டிருக்கலாம். எட்டு வயசு புலி, 20 வயசு மனுஷனை கொன்னுடுச்சுன்னு புலி மேல தப்ப போட்டுட்டு அடுத்த வேலைய பார்க்க போயிட்டோம். ஆனா, இந்தச் சின்ன சம்பவம் எத்தனை தவறுகளை வெளியே கொண்டு வந்திருக்குன்னு கொஞ்சம் யோசிச்சாதான் புரியும்.
தவறு 1: கற்களையும் குச்சிகளையும் கொண்டு புலியை சீண்டியது.
தவறு 2: பயங்கர மிருகங்கள் இருக்கும் இடத்தில் கூட குறைவான உயரத்தில் தடுப்புச் சுவர் வைத்தது
தவறு 3: தடுப்பு வேலியைத் தாண்டிச் சென்று தடுப்புச் சுவரின் மீது ஏறியது
தவறு 4: புலி போன்ற பயங்கர மிருகங்கள் இருக்கும் இடங்களின் அருகே போதுமான செக்யூரிட்டி கார்டு இல்லாதது
தவறு 5: காப்பாற்ற போதுமான நேரமிருந்தும், பாதுகாவலர்கள் வராதது
தவறு 6: பாதுகாவலர்கள் ஒரு மயக்க மருந்து துப்பாக்கி கூட வைத்திருக்காதது
இந்தியாவுல நடக்கும் எல்லா அசம்பாவிதத்துலயும் இருக்கும் ஒற்றுமை என்னன்னா, ஒரு தவறு நடந்தாதான் அதற்கு முன்னும் பின்னும் நடந்த, அதைச் சார்ந்த பல தவறுகள் வெளிய தெரிய வரும். ஒரு கும்பகோண மகாமக விபத்து நடந்தாதான், நமக்கு நகராட்சியின் மெத்தனம், விதிகள் பின்பற்றப்படாதது, விதிகள் மீறப்பட்டதுன்னு பல தவறுகள் தெரிய வரும். ஒரு கும்பகோண தீ விபத்து நடந்தாதான், பள்ளிக்கூட வசதிகள், முறைகேடா வாங்கிய அனுமதின்னு பல தவறுகள் தெரிய வரும். எத்தனை துயர சம்பவங்கள் நடந்தாலும், நம்மளைப் பொறுத்தவரை ‘வரும் முன் காப்போம்’ என்பது வெறும் வாசகம்தான்.

* உள்ளூரு ஐ.பி.எல். போட்டில, தோனி சிக்ஸ் அடிச்சு தொலைஞ்சு போன பந்துகள்!

* ‘ஐ’ படத்துக்காக உலகத்துல எங்கெங்கேயோ வித்தியாசமான லொகேஷன்கள்ல ஷூட்டிங் எடுத்த ஷங்கர் டீம், செவ்வாய் கிரகத்துலயும் ஷூட்டிங் பண்ணியிருக்காங்க என்பதற்கு சான்றா, அங்கே போட்ட செட்!

* நம்ம ஊரு ஏர்போர்ட்ல பேட்டி கொடுக்க முடியலன்னு, செவ்வாய் கிரக ஏர்போர்ட் வாசலில் நம்ம நாராயணசாமி பேட்டி கொடுக்கும் போட்டோ.

* ஜெயங்கொண்டத்திலிருந்து ஜப்பான் வரை, அய்யம்பேட்டையிலருந்து அமெரிக்கா வரை ரசிகர் மன்றங்கள் இருக்கும் சூப்பர் ஸ்டாரின் செவ்வாய் கிரக ரசிகர் மன்றத்தின் ஃபிளக்ஸ் போர்டு.

* செவ்வாய் கிரகவாசிகள் பசியாறும் மம்மி மெஸ் பில்டிங்.

* கலர் கலர் கொடிகளோட மனை பிரிச்சு நம்மாளுங்க, செவ்வாய் சிட்டி, கால்வாய் சிட்டின்னு பண்ற அட்ராசிட்டிங்க போட்டோ.

* பள்ளிக்கூடத்துல ஆரம்பிச்சு ஹாஸ்பிடல் வரை எல்லா முக்கியமான இடத்துலயும் இருக்கும் டாஸ்மாக் கடை, செவ்வாய் கிரகத்துலயும் முட்டி மோதுற போட்டோ.

* நம்மூரு பவர்ஸ்டாரின் கட்அவுட் ஆங்காங்கு நின்றுகொண்டிருக்கும் போட்டோ.

* இது எல்லாத்தையும் விட, அங்கங்கே கிழிந்த வேட்டிகளும் சட்டைகளும் செருப்புகளும் குவிந்திருக்கும் போட்டோ, செவ்வாய் கிரகத்தில் போங்கிரஸ் கிளை அலுவலகம் இருந்தது என்பதன் அத்தாட்சியாக!

மங்கள்யான் விண்கலம் செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நுழைஞ்சிடுச்சு. கொஞ்ச நாள்ல அது செவ்வாய் கிரகத்தின் பகுதிகளை, கலர் கலராக படங்கள் எடுத்து அனுப்பப் போகிறது. அப்படி அனுப்பறப்ப, என்னென்ன புகைப்படங்கள் இருக்கலாம்னா...

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்ஸ்...

செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை, 671 மில்லியன் டாலர் செலவுல அனுப்பின அமெரிக்காவும், 386 மில்லியன் டாலர்ல அனுப்பிய ஐரோப்பிய யூனியனும், 189 மில்லியன் டாலர்ல அனுப்பின ஜப்பானும், 117 மில்லியன் டாலர் செலவுல அனுப்பிய ரஷ்யாவும், இப்ப நாம வெறும் 74 மில்லியன் டாலர்ல அனுப்பிய மங்கள்யானைப் பார்த்து வாயைப் பிளந்து நிக்கறாங்களே... அவங்களேதான்!

ஆல்தோட்ட பூபதி