கொன்றது புலி அல்ல... செல்ஃபி?



இந்தியாவே அந்த வீடியோவைப் பார்த்து அதிர்ந்துவிட்டது. ‘ஞீஷீஷீ’ போனாலே ‘ஹை... அழகா இருக்குல்ல’ என எப்போதும் நாம் பார்த்து ரசிக்கும் வெள்ளைப் புலிதான். இளைஞர் ஒருவரை அது கதறக் கதற அடித்துக் கொன்ற காட்சி இன்னும் மனதை விட்டு அகலவில்லை. சம்பந்தப்பட்ட அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்கிறார்கள்.

 டெல்லி உயிரியல் பூங்காவின் பாதுகாவலர் இரண்டு முறை தடுத்தும் கேட்காமல், அவர் தடுப்பைத் தாண்டினார் என்கிறார்கள். எல்லாம் சரிதான். ஆனால், அவர் ஏன் விடாப்பிடியாக புலியின் அருகில் போனார்? இதற்கு ஆளுக்கொரு பதிலைச் சொல்கிறார்கள். பெரும்பான்மையானவர்கள் சொல்லும் லாஜிக் காரணம், செல்ஃபி!

அந்த இளைஞர் தன் நண்பர்களோடுதான் உயிரியல் பூங்காவுக்குப் போயிருக்கிறார். முதல் நிலை தடுப்புக் கம்பிகளைத் தாண்டி, குழியின் விளிம்பில் இருந்த கம்பி வலை மீது அவர் சாய்ந்தபோது வலை நெகிழ... குழிக்குள் விழுந்துவிட்டார். ‘‘புலியை பின்னணியாக வைத்து தன்னை ஒரு செல்ஃபி எடுக்க அவர் விரும்பியிருக்கலாம்’’

என்கிறார்கள் ஸ்பாட்டில் இருந்த சிலர். அந்த வகையில் இந்த உயிரிழப்பை இந்தியாவின் இரண்டாவது செல்ஃபி மரணமாக ஏற்கலாம். அதென்ன ‘செல்ஃபி மரணம்’? தன்னைத் தானே போட்டோ எடுக்கும் நபர், அடுத்த சில நிமிடங்களிலேயே எதிர்பாரா விதமாக உயிரை விடுவதுதான் செல்ஃபி மரணம். இன்றைய தேதி வரை உலகின் டாப் 8 செல்ஃபி மரணங்கள் இவை...

செனியா இக்னட்யேவா... 17 வயதே நிரம்பிய ரஷ்யப் பெண்ணான இவர், தன் நண்பர்களை இம்ப்ரஸ் பண்ணுவதற்காக இந்த செஃல்பியை ஒரு பாலத்தின் மீதிருந்து எடுத்தார். க்ளிக்கியபோது பேலன்ஸ் தவறி விழுந்து, அடுத்த நொடியே இறந்துவிட்டார்.

மெக்ஸிகோவைச் சேர்ந்த பாப் பாடகியான ஜென்னி ரிவேராவும் அவர் நண்பர்களும் தங்களின் தனி விமானம் டேக் ஆஃப் ஆகும் முன் எடுத்த செல்ஃபி இது. துரதிர்ஷ்டவசமாக அந்த விமானம் விபத்துக்குள்ளாகி யாருமே பிழைக்கவில்லை.

கோர்ட்னி ஸ்டான்ஃபோர்டு என்ற அமெரிக்கப் பெண் தனது காரில் டிரைவ் பண்ணிக்கொண்டிருக்கும்போது இந்த செல்ஃபி எடுத்து தன் நண்பர்களுக்கு ஷேர் செய்தார். சில நிமிடங்களிலேயே அந்தக் கார் விபத்துக்குள்ளாகி இறந்துவிட்டார்.

13 வயதுச் சிறுமியான கரென் ஹெர்னாண்டஸ், மெக்ஸிகோவில் உள்ள ஒரு நதிக்கரையில் செல்ஃபி எடுக்க விரும்பினார். அப்போது தவறி ஆற்றில் விழுந்தவரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது.

அசுர வேகத்தில் வரும் ஒரு ரயிலின் பின்னணியில் செல்ஃபி எடுத்துக் கொள்ள ஆசைப்பட்ட இவரின் பெயர் மைக்கேல். ரயில் தொடாத தூரத்தில்தான் இவர் நின்றார். ஆனால், யதேச்சையாக கால் நீட்டிய ரயில் ஊழியர் இவரது தலையில் இடித்துவிட்டார். உயிருக்குப் போராடி இறந்தார் மைக்கேல்.

திருமணத்துக்கு முந்தைய ஜாலி பார்ட்டிக்காக சென்ற இந்தத் தோழிகள், இந்த செல்ஃபியை எடுக்கும்போதே எதிரே வந்த கார் மீது மோதிவிட்டனர். இதில் கொலெட் மொரெனோ என்ற பெண் மட்டும் இறந்துவிட்டார். அவர்தான் மணமகள்!

இதுதான் நம்மூரின் முதல் அசம்பாவிதம். ஐதராபாத்தைச் சேர்ந்த 48 கல்லூரி மாணவர்கள் பீஸ் நதியின் நடுவே இந்த செல்ஃபி எடுக்கத்தான் போனார்கள். திடீரென்று ஆற்றில் வெள்ளம் வந்து பெரும்பாலானவர்களை அடித்துச் சென்ற கோரத்தைத்தான் செய்திகளில் பார்த்தோமே!

எங்கும் எதிலும் செல்ஃபி எடுக்கத் துடிப்பதும், அதற்கு இத்தனை லைக் வரும் என கணக்குப் போடுவதும் ஒருவகை மனநல பாதிப்பு என்றே சமீபத்தில் வகைப்படுத்தியிருக்கிறது அமெரிக்கன் சைக்கியாட்ரிக் அசோசியேஷன். இந்த பாதிப்பின்  பெயர், ‘செல்ஃபிடிஸ்’. ஆக, சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர்தான். கொன்றது புலியா, செல்ஃபியா என்பதே கேள்வி!

 நவநீதன்