மின் வினியோகம் தனியார்மயமாகிறதா?



கரன்ட் பில் ஷாக்!

அடுத்த தாக்குதல் ஆரம்பமாகி விட்டது. மீண்டும் மின்கட்டண உயர்வு. 100 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு (2 மாதங்களுக்கு) ஒரு யூனிட்டுக்கு 40 காசுகளும், 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 45 காசுகளும், 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 60 காசுகளும் உயர்த்த உத்தேசித்திருக்கிறது மின்சார ஒழுங்குமுறை வாரியம். நிலைக் கட்டணங்களும் 10 ரூபாய் அதிகரிக்கிறது.

 ‘நஷ்டத்தில் தள்ளாடும் மின் வாரியத்தைக் காப்பாற்றவே இந்த உயர்வு’’ என்கிற ஒழுங்குமுறை ஆணையம், இதன்மூலம் 6,854 கோடி ரூபாய் பற்றாக்குறையை ஈடுகட்டலாம் என்கிறது. உண்மை என்ன?

ஏற்கனவே 2012ல் தடாலடியாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போதும் இப்படி காரணம் சொன்னார்கள். ‘‘9500 கோடி ரூபாய் மின் வாரியத்துக்கு நஷ்டம், கட்டண உயர்வு மூலம் 7500 கோடி ரூபாய் கிடைக்கும்...’ என்றார்கள். மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். இப்போது மீண்டும் 6,854 கோடி ரூபாய் நஷ்டமாம்.

பல கோடி நுகர்வோர்கள்... பல ஆயிரம் ஊழியர்கள்... ஏராளமான உற்பத்தி மையங்கள்... பல்லாயிரம் கோடி அரசு மானியம்... இவ்வளவு இருந்தும் மின் வாரியம் ஏன் நஷ்டத்தில் இயங்குகிறது? கட்டணத்தை உயர்த்தி மக்களை வதைக்காமல் மின் வாரியத்தை மீட்கவே முடியாதா?

‘‘நிச்சயம் முடியும். ஆனால், மின் வாரியத்தை நிர்வகிப்பவர்கள் அதற்கான முயற்சியில் இறங்கத் தயாராக இல்லை. அவர்களின் நோக்கம், மின் வாரியத்தை தனியார் கையில் தாரை வார்ப்பது. அதற்கான முகாந்திரமே இந்த கட்டண உயர்வு...’’ என்று அதிர்ச்சியூட்டுகிறார் தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பின் தலைவர் சா.காந்தி.‘‘தண்ணீரும் மின்சாரமும் இந்தியாவின் பெரும் நுகர்வுப்பொருட்கள்.

 இரண்டையும் கைப்பற்ற தனியார் நிறுவனங்கள் துடிக்கின்றன. தண்ணீர் கிட்டத்தட்ட சுரண்டப்பட்டு விட்டது. மின் சப்ளையும் பறிபோகும் நிலையில் இருக்கிறது. தொடர்ச்சியாக நஷ்டக் கணக்கு காண்பித்தால் எளிதாக தனியார் கைக்குத் தாரை வார்த்து விடலாம்.

மின் வாரியத்தில் ஏகப்பட்ட நிர்வாகக் கோளாறுகள். வருமானத்தை அதிகரிக்க ஏகப்பட்ட வழிகள் உண்டு. டாடா கம்பெனியை எடுத்துக் கொள்ளுங்கள். மின்சாரம், உப்பு, தண்ணீர், காபி, டீ, ஜுவல்லரி என எல்லாம் விற்கிறார்கள். மின் வாரியத்தின் கையில் சுமார் 2.50 கோடி நுகர்வோர்கள் இருக்கிறார்கள்.

இவர்களை சரியாகக் கையாண்டால் பெரும் லாபம் ஈட்ட முடியும். வெறும் மின்சாரத்தை மட்டும் விற்காமல் பிற வணிகங்களிலும் கவனம் செலுத்தலாம். ஆனால் மின் வாரியத்தை மீட்பதிலோ, லாபம் ஈட்டுவதிலோ அங்கிருப்பவர்களுக்கு ஆர்வமில்லை. சத்தமேயில்லாமல் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கான ஒப்பந்தங்கள் போட்டாயிற்று.

மின்வாரியம் 24 ஆயிரத்து 422 கோடி ரூபாயை குறுகிய காலக்கடனாக (ஒர்க்கிங் கேப்பிடல்) பெற்றிருந்தது. அத்தொகையை திருப்பிச் செலுத்த முடியாததால் வங்கிகள் பாதித்தொகையை நீண்டகாலக் கடனாக (லாங் டெர்ம் லோன்) மாற்றிக் கொண்டன. மீதத்தொகைக்கு தமிழக அரசு கடன் பத்திரம் வழங்க வேண்டும்.

ஆனால், ‘ஒர்க்கிங் கேப்பிடலை நீண்டகாலக் கடனாக மாற்றவேண்டும் என்றால் மின்சார வினியோகத்தை தனியாருக்குத் தர வேண்டும்’ என்கிறது உலக வங்கி. இதை, ராஜஸ்தான், ஹரியானா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களும் ஏற்றுக்கொண்டு கையெழுத்துப் போட்டுவிட்டன. ஆந்திரா, பீகார், இமாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

 டெல்லி, கொல்கத்தா, மும்பை போன்ற நகரங்களில் ஏற்கனவே தனியார் நிறுவனங்கள்தான் மின் வினியோகத்தை மேற்கொள்கின்றன. சென்னையையும் அப்படிக் கைப்பற்ற தனியார் நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. மின் வாரியத்தின் மொத்த வணிகத்தில் 40% சென்னையில் மட்டுமே நடக்கிறது. மொத்த மின் உற்பத்தியில் 25% இங்குதான் வினியோகமாகிறது. இந்த பிரமாண்டமான மின்சந்தை தனியார் கைக்குப் போகப் போகிறது. கொடுமை என்னவென்றால், ஒரு பைசா கூட பணம் கொடுக்காமல் அபகரிக்கப் போகிறார்கள்.

இந்த மின்கட்டண உயர்வு அறிவிப்பில் ஏகப்பட்ட குளறுபடிகள். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30ம் தேதிக்குள் மின் வாரியம் தன்னுடைய வருவாய் தேவை மற்றும் லாப நட்ட அறிக்கையை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் ஆணையம் கட்டண உயர்வை முடிவு செய்யும். ஆனால் மின் வாரியம் அந்த அறிக்கையை வழங்காததால் இப்போது தன்னிச்சையாக கட்டண உயர்வை அறிவித்ததாகச் சொல்கிறது ஒழுங்குமுறை ஆணையம். வேடிக்கை என்னவென்றால், இன்றைக்கு ஒழுங்குமுறை ஆணையத்தில் பொறுப்பில் இருந்து கட்டண உயர்வை அறிவித்த அதிகாரிகள்தான், நவம்பர் 30ம் தேதி வரை மின் வாரியத்தின் அந்த அறிக்கையை வழங்க வேண்டிய பொறுப்பில் இருந்தார்கள்.

2012ம் ஆண்டில், ‘ரூ.9500 கோடி நஷ்டம்; கட்டண உயர்வு மூலம் ரூ.7500 கோடி கிடைக்கும். மின்வாரியத்தை மீட்டு விடுவோம்’ என்றார்கள். ஆனால், அடுத்த ஆண்டிலும் ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டம் என்கிறார்கள். முதலாமாண்டில் கிடைத்த ரூ.7500 கோடி எங்கே? இந்த 12 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் எப்படி வந்தது?

நிறைய தவறுகள் நடக்கின்றன. எங்கள் கணக்குப்படி 2006 முதல் 2014 வரை 24,309 கோடி ரூபாய் மின்வாரியத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தனியார் மின்திட்டத்தில் முதலீடு செய்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள். இந்த ஆதாரங்களை எல்லாம் திரட்டி, தவறு செய்த அதிகாரிகள் பட்டியலையும் இணைத்து கவர்னரிடமும், முதல்வரிடமும் புகார் கொடுத்தோம். இன்றுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

எங்கள் கணிப்புப்படி வரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் 70 சதவீதத்துக்கும் மேல் மின் கட்டணம் உயர்த்தப்படலாம். அப்படியான திசையில்தான் மின்வாரியம் செல்கிறது...’’ என்கிறார் காந்தி. டெல்லி, கொல்கத்தா, மும்பை போன்ற நகரங்களில் ஏற்கனவே தனியார் நிறுவனங்கள்தான் மின் வினியோகத்தை மேற்கொள்கின்றன. சென்னையையும் அப்படிக் கைப்பற்ற தனியார் நிறுவனங்கள் முயற்சிக்கின்றன.

 வெ.நீலகண்டன்