ஆஸ்கர் தூரமில்லை! கீது சர்ப்ரைஸ் சாதனை



பத்து வருஷத்திற்கு முன்னால் கீது மோகன்தாஸ் மற்றவர்களைப் போல் ஒரு நடிகைதான். தமிழில்கூட ‘நள தமயந்தி’யில் நடித்திருக்கிறார். ஆனால், இன்று அவர் இயக்கிய ‘Liar‘s Dice’ எனும் இந்திப் படம் ஆஸ்கர் விருதின் அன்னிய மொழிப் பிரிவுக்கான தேர்வுக்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்டிருக்கிறது. மிக உயரிய கௌரவம் கிடைத்த வேளையில் கீது நம்மிடம் பேசினார்.... ‘‘சினிமா சம்பந்தப்பட்ட ஒவ்வொருவருமே இப்படியொரு ப்ரேக்கிங் நியூஸுக்கு காத்திருப்பாங்க...’’

‘‘ரொம்ப சந்தோஷம். எனக்கு விருது பற்றி அக்கறையே இல்லைன்னு சொன்னால் அது பொய். இந்த சினிமாவில் என் கடமையை ஒழுங்காகச் செய்தேன் என்பதில் ரொம்ப திருப்தி.
எளிய மக்களின் வாழ்க்கையை, அவர்களின் வெளித்தெரியாத சோகத்தைச் சொல்ல இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

இதே மதிப்பீட்டில் வேறு யாருக்கு இந்த கௌரவம் கிடைத்திருந்தாலும் இதே மாதிரி சந்தோஷப்பட்டிருப்பேன். ‘ஆஸ்கர் பற்றி நினைக்கவே இல்லை’ன்னு சொல்ல விரும்பலை. மனசின் ஓரத்தில் அது மாதிரி ஒரு கனவு இருந்தது. அவ்வளவுதான். அதை அரசாங்கமே செய்யும்போது மகிழ்வோம். இது ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கான நெகிழ்ச்சிதான்!’’

‘‘குழந்தை நட்சத்திரமாகவே ஆரம்பித்து, இந்த சாதனையை எட்டியிருப்பது... உங்கள் சிரமத்திற்கு கிடைத்த பரிசா?’’‘‘இந்த சினிமாவில் இருந்ததை, ஏதோ சுமையை சுமந்த மாதிரி நினைக்கலை. ரொம்ப சின்ன வயதில் இருந்து நடிக்க ஆரம்பிச்சேன். நிறைய மனிதர்களிடமிருந்து சினிமாவை பார்த்து ரசித்திருக்கிறேன்.

ஒரே நாளில் முடிவெடுத்து இயக்குநர் ஆகலை. ஒரு குறும்படம் செய்திருக்கேன். அதற்குக் கிடைத்த பாராட்டு, பரிசு இதெல்லாம் என்னை மேலும் தூண்டியது. ‘லிவீணீக்ஷீ‘s ஞிவீநீமீ‘ அதைக் கச்சிதமாக்கி கொண்டு வந்து சேர்த்துவிட்டது.’’‘‘இந்த இந்தி சினிமாவிற்கு ஆரம்பம் எப்படியிருந்தது?’’

‘‘எனக்குப் பயணங்கள் பிடிக்கும். மறுபடியும் கண்டடைய முடியாத மனிதர்களை, முகங்களை, வார்த்தைகளை, நினைவுகளை, காட்சிகளை மறக்கவே முடியாது. அதில் ஒரு காவியத்தன்மை இருக்கு.

இந்தப் படத்தில் இருப்பது ஒரு பெண்ணின் அவலம். கணவனைத் தேடிப் போகிற பெண். எதிர்காலம் குறித்த பயத்தையும், பிரிவையும் வலியையும் உணர்த்துகிற படம். அதை இந்திய சமூகம் சரியாகப் புரிந்துகொண்டதுதான் என் பெரிய ஆறுதல். திபெத்சீன எல்லையில் இந்தக் காட்சிகளை படமாக்கியது போராட்டம்.

எனது கணவரும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ் ரவி இல்லையென்றால் என் கஷ்டம் அதிகமாகியிருக்கும். இமாசலப் பிரதேசத்தில் படமாக்கும்போது நிலச்சரிவைக் கூட சந்திக்க நேர்ந்தது. ஆனாலும், மக்களின் ஆதரவு, தேசிய விருது, இப்போ ஆஸ்கர் விருதுக்கான பயணம். இதெல்லாம் சேர்ந்தபோது அந்த கஷ்டம் ஒரு பொருட்டில்லை. என் படத்தில் நடித்த குழந்தை மான்யா பற்றி கவலையிருந்தது. ஆனால், அவளுக்கு குளிர் ஒரு பொருட்டாக இல்லை. அவளுக்கு ஊரே சிம்லா பக்கம்தான்!’’

‘‘உங்களை இடதுசாரிக் கொள்கையுடையவராக சொல்லலாமா?’’

‘‘நன்றாகச் சொல்லுங்கள். அது பெருமைதானே! எனக்கான அரசியல் கொள்கையை இன்னும் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். என் கொள்கை மக்களின் நலன் சார்ந்ததுதான். அதில் அவர்களது சொந்த சோகங்களும் அடங்கும்.’’

 நா.கதிர்வேலன்