கத்தி ஸ்பெஷல்



விஜய் கேட்ட பன்ச் டயலாக்!

‘கத்தி’ ஆடியோ ஃபங்ஷனில், ‘‘சதீஷ், உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கறேன்’’ என சமந்தா சொன்னாலும் சொன்னார்... சதீஷ் முகத்தில் இன்னும் கூட வெட்கப் புன்னகை! ‘‘ஆனா ப்ரோ, சமந்தா சொன்னதை எல்லாருமே காமெடியாகத்தான் பார்க்குறாங்க... சீரியஸா எடுத்துக்கவே மாட்டேங்கறாங்க...

ஏன்?’’  நம்மிடமே ஏக்க ஃபீலிங் காட்டுகிறார் மனிதர். வடிவேலு, சந்தானம்... அடுத்து? எனும் ரேஸில் ஓடிக் கொண்டிக்கும் முக்கியமான காமெடியன். ‘எதிர்நீச்சல்’, ‘மான்கராத்தே’ என கெத்து காட்டியவர், இப்போது ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி என முன்னணி இயக்குனர்களின் செல்லப்பிள்ளை.

‘‘அதாவது...’’ என ஆரம்பித்தால் போதும்... அடுத்த அரை மணி நேரத்திற்கு நான் ஸ்டாப் பேச்சு சதீஷிட மிருந்து.

‘‘சிவகார்த்திகேயன் ‘கேங்’கா நீங்க?’’

‘‘நான் படிச்சு, வளர்ந்ததெல்லாம் சேலம். ஸ்கூல்ல படிக்கிறப்ப டான்ஸ், டிராமான்னு ஆர்வம் அதிகம். சினிமாவுல நமக்குத் தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்க யாரும் இல்ல. சென்னையில ஒரு நண்பன் ரூம்ல தங்கி சேல்ஸ் ரெப் வேலை பார்த்தேன். கிரேஸி மோகன் சார் டிராமா ட்ரூப்ல சேர்ந்தேன். எனக்கு பிள்ளையார் சுழி இல்ல...

பிள்ளையாரே கிரேஸி மோகன்தான். ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ ஸ்கிரிப்ட் வொர்க்ல கூட அவரோட இருந்திருக்கேன். ஒரு தடவை ஏ.எல்.விஜய் சார் என்னோட நாடகம் பார்த்துட்டுதான் ‘பொய் சொல்லப்போறோம்’ படத்துல டயலாக் வொர்க் பண்ணக் கேட்டார். அடுத்து ‘மதராசப்பட்டினம்’ல ஒரு சின்ன கேரக்டர் பண்ணினேன்.

‘ராஜா ராணி’ படத்துக்கு முன்னாடி ‘முகப்புத்தகம்’னு ஒரு குறும்படம் பண்ணியிருந்தார் அட்லி. அதுல நானும் நடிச்சிருந்தேன். சிவகார்த்திகேயன் அதில்தான் அறிமுகம். டி.வியில மிமிக்ரி, டான்ஸ்னு கலக்கினதுல அப்பவே அவர் ரொம்ப ஃபேமஸ். யூனிட்டையே நாங்க சேர்ந்து கலாய்ச்சிட்டிருந்தோம். அந்த குறும்படம்தான் எங்களுக்கு ‘மெரினா’ கிடைக்கக் காரணமா இருந்தது. ‘எதிர்நீச்சல்’ல துரை செந்தில்குமார்தான் எனக்கு மிகப்பெரிய ப்ரேக் கொடுத்தார்.’’‘‘சிவகார்த்திகேயன் ஹீரோவானது உங்களாலதான்னு சொல்றாங்களே..!’’

‘‘கொஞ்சம் ஓவரா போறாங்களோ! ‘மெரினா’ சமயத்துல தான் காமெடியனா, ஹீரோவான்னு அவருக்கே பெரிய குழப்பம். ‘உங்க டான்ஸும் டைமிங் கமென்ட்டும் அள்ளுது. நீங்க ஹீரோதான் ப்ரோ’னு ஏத்திவிட்டது நான்தான். அது, ‘சுயநலம் கருதி’ வெளியிட்ட கமென்ட். அவர் காமெடியனாகிட்டா... அப்புறம் நான் எங்கே போறது? இப்ப அவர் ஹீரோ... நான் காமெடியன். தெளிவா போயிட்டிருக்கு.

ஒரு படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே நாங்க ஸ்கிரிப்ட் வொர்க் பண்ண ஆரம்பிச்சிடுவோம். இப்ப ‘கத்தி’யில நான் கமிட் ஆனதும், ‘உன்னாலதான்டா ‘கத்தி’யில விஜய் கூட நடிக்க முடியாம போச்சு... நான் காமெடியனா இருந்திருந்தா, உனக்கு பதில் இன்னிக்கு நான்தானே விஜய் சார் கூட நடிச்சிருக்கணும்’னு கலாய்ச்சார்!’’

‘‘விஜய்யோட குட் புக்ஸ்ல வந்துட்டீங்க போலிருக்கே?’’

‘‘இப்ப வரைக்கும் நம்ப முடியல. எண்பது நாள் அவரோட ஒண்ணா வொர்க் பண்ணியிருக்கேன். அந்த பிரமிப்பு இன்னும் போகலை. என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தர் தீவிரமான விஜய் ரசிகர். ஐதராபாத்ல ஷூட்டிங்ல இருந்தப்ப, அந்த ஃப்ரெண்டுக்கு பர்த் டே. இந்த விஷயத்தை விஜய் சார்கிட்ட சொன்னதும். அவருக்கு உடனே போன் பண்ணச் சொல்லி விஷ் பண்ணினார். ரசிகர்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம். ஒருநாள் என்னை அவர் வீட்டுக்கு சாப்பிடக் கூப்பிட்டார். சங்கீதா அண்ணி அவங்க கையாலேயே சமைச்சிருந்தாங்க. சந்தோஷமா இருந்தது.

ஸ்பாட்டுல டயலாக்கை டெவலப் பண்றப்ப, ‘இந்த மாதிரி பண்ணலாமா?’னு விஜய் சார்கிட்ட கருத்து கேட்டா... ‘சூப்பர், பண்ணுங்க! அப்படியே நானும் கைதட்டல் வாங்குற மாதிரி நமக்கும் கொஞ்சம் பன்ச் சொல்லுங்க ப்ரோ’னு கலாய்ப்பார். கடைசி நாள் ஷூட்டிங்ல விஜய் சார்கிட்ட, ‘நான் ஏதாவது தப்பு பண்ணியிருந்தாலோ, ஓவரா பேசியிருந்தாலோ மன்னிச்சுக்குங்க’ன்னு சொன்னேன். ரொம்ப எமோஷனலாகி கட்டிப் பிடிச்சு, ‘அப்படி எதுவும் இல்லை... செட் ஃபுல்லா ரொம்ப ஹேப்பியா வச்சிருந்தீங்க’ன்னு என்கரேஜ் பண்ணினார்!’’

‘‘சமந்தாவை ரொம்ப பிடிக்குமா?’’

‘‘ஓவியா, ப்ரியா ஆனந்த், ஹன்சிகா, சமந்தான்னு இதுவரை நான் படம் பண்ணின ஹீரோயின்களிலேயே சமந்தாதான் சூப்பர். ஏன்னா, அவங்க தமிழ்ல அவ்வளவு சரளம். நான் ஏதாவது டைமிங் அடிச்சா, கலகலன்னு சிரிப்பாங்க. இதுவே ஹன்சிகாவா இருந்தா, அந்த டயலாக்கை அவங்களுக்கு சொல்லிப் புரிய வைக்கிற அளவுக்கு எனக்கு இங்கிலீஷ் நாலேட்ஜ் இல்ல. தமிழ், தெலுங்குல நம்பர் ஒன் ஹீரோயின்னாலும் கொஞ்சமும் பந்தா பண்ணாதவங்க சமந்தா. ‘நீதான்யா படத்தில நிறைய இருக்கே... சாங்ல கூட இருக்கே...’னு என்கூட சண்டை போடுவாங்க.’’

‘‘அப்படியே சந்தானம் ஸ்டைலை ஃபாலோ பண்றீங்களே?’’

‘‘ஆக்சுவலா எல்லாருக்கும் விதை கவுண்டமணி சார்தான். அங்கிருந்து வர்ற விழுதுகள்தான் நாங்க. எனக்கு நாகேஷ் சார், கவுண்டமணி சார், வடிவேல் சாரை ரொம்ப பிடிக்கும். இப்ப இருக்கற கலாய்க்கிற டிரெண்டை அப்பவே கவுண்டமணி சார் பண்ணிட்டார்.

நாங்கல்லாம் டக்குன்னு வொர்க் அவுட் ஆகுறது அதனாலதான். வடிவேல் சார் மாதிரி நடிக்கிறதும் ரொம்ப கஷ்டம். நாகேஷ் சார் மாதிரி பண்ணவே முடியாது. இருக்குற லெஜெண்ட்ல கவுண்டமணி சார் மாதிரி நடிக்கிறதுதான் ஈஸி. டக் டக்னு கவுன்ட்டர் கொடுத்துட்டு போயிட்டே இருக்கலாம்.

இப்போ ‘ஆம்பள’, ‘வை ராஜா வை’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’னு பல படங்கள் பண்ணிட்டிருக்கேன். அதுல, ‘ஆம்பள’ படத்தில் கொஞ்சம் வித்தியாசப்படுத்தி நடிக்க ட்ரை பண்ணியிருக்கேன்!’’

‘‘அனிருத், தனுஷ், சிவான்னு நீங்க நாலு பேரும் இப்பவும் ஃப்ரெண்ட்ஸா தொடருறீங்களா?’’

‘‘எங்க நட்பு இன்னும் அப்படியேதான் இருக்கு. ‘நாங்க பிரிஞ்சிட்டோம். பேசிக்க மாட்டோம்’னு சொல்றதெல்லாம் வதந்தி. வாட்ஸ் அப்ல ஒரே குரூப்பா இருக்கோம். பேப்பர்ல நம்மளைப் பத்தி இப்படியெல்லாம் நியூஸ் வருதுன்னு பேசி சிரிச்சுக்குவோம். ‘டாணா’ல எனக்கான ரோல் இல்லாததால அதுல பண்ணலை. தனுஷ் சாரை ஒரு புரொடியூசரா பார்க்கறோம். அந்த மதிப்பு, மரியாதை இன்னும் அப்படியேதான் இருக்கு!’’

மை.பாரதிராஜா