பொலிட்டிகல் பீட்



ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங். இவரது அப்பா சரண் சிங் கொஞ்சம் காலம் பிரதமராகவும் இருந்தவர். தொடர்ந்து எம்.பி.யாக இருந்த இவர், 36 ஆண்டுகள் டெல்லியின் துக்ளக் ரோட்டில் இருக்கும் அரசு வீட்டில் வசித்தார். அஜித் சிங் அதே வீட்டில் குடியேறினார். இப்போது தேர்தலில் முதல்முறையாகத் தோற்றதால், வீட்டை காலி செய்யச் சொன்னது மத்திய அரசு.

அவர் அவகாசம் கேட்க, வீட்டுக்கு மின் சப்ளையும் தண்ணீர் சப்ளையும் துண்டிக்கப்பட்டது. இப்போது ‘இந்த வீட்டை சரண் சிங் நினைவு இல்லம் ஆக்க வேண்டும்’ என அவரது கட்சியினர் போராடுகிறார்கள். ஜாட் இனத்தின் முக்கியமான தலைவர் சரண் சிங். ஜாட்டுகள் பெரும்பான்மையாக இருக்கும் ஹரியானா மாநிலத்தில் இப்போது தேர்தல். இந்த நேரத்தில் சரண் சிங் விவகாரம் சர்ச்சையாகிவிடுமோ என அஞ்சுகிறார்கள் பாரதிய ஜனதா கட்சியினர்.

ஒரு மாநில முதல்வர் காரில் பயணம் செய்யும்போது அவரோடு அணிவகுக்கும் கார்களின் எண்ணிக்கை என்னவாக இருக்கும். இந்தியாவிலேயே வயதில் மூத்த முதல்வர்களில் ஒருவரான பஞ்சாப்பின் பிரகாஷ்சிங் பாதல் இந்த விஷயத்திலும் முதலிடம் பெறுகிறார். அவரது அணிவகுப்பில் 33 கார்கள் இடம் பெறும்.

பாதுகாவலர்களுக்கு 2 கார், மருத்துவக் குழுவுக்கு 1 கார், அவரின் அரசு உதவியாளர்களுக்கு 2 கார், கட்சி உதவியாளர்களுக்கு 2 கார். மீதி 25 கார்களில் யார் வருவார்கள் என்பது சஸ்பென்ஸ். சின்ன மாநிலமான ஹரியானா முதல்வரின் அணிவகுப்பில் 25 கார்கள்! தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு ராசி எண் ஆறு. எனவே ஆறு கார்களே போதும் எனச் சொல்லிவிட்டார். அவருக்கு ராசி நிறம் கறுப்பு. எனவே வெள்ளை கார்களை கறுப்பாக மாற்றச் சொல்லியிருக்கிறார்.

இந்தியாவில் பல்வேறு சுகாதாரத் திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் நன்கொடை அளித்திருக்கும் ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனர் பில் கேட்ஸ், சமீபத்தில் இந்தியா வந்தார். மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, தன் வீட்டுக்கு வந்திருந்த பில் கேட்ஸுக்கு மூங்கிலால் செய்த சூட்கேஸ் ஒன்றைப் பரிசளித்தார். அதை ரொம்பவே ரசித்த கேட்ஸ், தன் லேப்டாப்பை விட பத்திரமாக பாதுகாத்து எடுத்துச் சென்றார்.

மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஏற்கனவே பி.ஜே.பியின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர். அதனால் செய்தியாளர்களை சமாளிக்கும் சாமர்த்தியம் அவருக்கு எளிதாகக் கை வந்திருக்கிறது. சமீபத்திய பிரஸ் மீட் ஒன்றில், ஒரு மராத்தி சேனலின் பெண் நிருபரிடம், ‘‘நீங்க அலியா பட் நடித்த படம் ஏதாவது பார்த்திருக்கிறீர்களா?’’ என ஜவடேகர் கேட்டார். குழப்பத்தோடு அந்த நிருபர் ‘இல்லை’ என தலையசைக்க, ‘‘உங்களையும் அவங்களையும் பார்த்தால் வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாது’’ என்றார் ஜவடேகர். அதன்பின் யாரும் அவரிடம் கஷ்டமான கேள்விகளைக் கேட்கவில்லை.

ஊழலுக்கும் உச்ச வரம்பு உண்டு போலிருக்கிறது. பீகாரில் அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து வாங்கியதில் 2 கோடி ரூபாய் வரை சிலர் விளையாடி இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. ‘‘இதை ஊழல் எனச் சொல்ல முடியாது. ஒரு முறைகேடு, அவ்வளவுதான்! பல கோடி ரூபாய் கையாடல் செய்தால்தான் ஊழல்’’ என பீகார் சுகாதார அமைச்சர் ராம்தானி சிங் சொல்லி வைக்க, அவரை எதிர்த்து போராட்டங்கள் நடக்கின்றன.