அவன் அவள் unlimited



ஆண்களின் ஜொள்ளுக்கு எலும்பு துண்டு!

ஆணுக்குவயதாவதின் மிகப் பெரும் சௌகரியம், ஆபத்தில்லாதவனாக மதிக்கப்பட்டு அனைவரிடமும் வழிவது!

 லிஸ் ஸ்மித்

ரஜினி, கமல், அஜித், விஜய்... இவர்களோடு விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு... இவர்களைத் தவிர வேறு நடிகர்களை பத்திரிகை அட்டைப் படங்களில் பார்த்திருக்கிறீர்களா? ஆனால் நடிகைகளின் கதையே வேறு. நேற்று நடிக்க வந்த ஸ்ரீதிவ்யா, லக்ஷ்மி மேனன்... ஏன், இன்னும் படமே நடிக்காத ஹீரோயின் என்றாலும் அவர்கள் அட்டைப்படமாவது சுலபம். காரணம், ஆண்களின் ஜொள்ளு!

ஹீரோக்கள் எப்படி உருவாகிறார்கள் என்பதற்கு உளவியலில் விளக்கம் உண்டு. ஒரு சூப்பர் ஹீரோவைப் பார்த்தவுடன், ‘இவனை மாதிரி ஒருத்தன்...’ என்ற ஏக்கம் பெண்களுக்கு வர வேண்டும். இதைப் பக்கத்தில் இருந்து பார்க்கும் சக ஆணுக்கு காதில் புகை கிளம்பும். அதோடு, மனதில் ஒருவித ஆவலும் கிளம்பும்... ‘இந்த ஹீரோவை மாதிரி நாம இருந்தா...’

ஆக, ஆண் ஒரு ஹீரோவிடம் தன்னைப் பார்ப்பான். பெண் அதே ஹீரோவிடம் தன் கனவு நாயகனைப் பார்ப்பாள். இப்படி இருவராலுமே விரும்பப்படும்போதுதான் பெரும்பான்மையான ஓட்டுகளைப் பெற்று அந்த ஹீரோ அமோக வெற்றி பெறுவான். இந்த ஆண் பெண் ரசிகர் விகிதத்தில் எது ஒன்று குறைந்தாலும் அவனுக்கு இரண்டாம், மூன்றாம் இடங்கள்தான். உதாரணத்துக்கு, ‘இவனைப் போல நாம் இருக்கவே முடியாது’ என ஆண்கள் நிராகரித்துவிட்ட ஹீரோக்களுக்கு வெறும் ‘சாக்லெட் பாய்’ இமேஜ்தான் மிஞ்சும். பெரும்பாலும் பிறப்பிலேயே பளபள தோலுடன் ஆசீர்வதிக்கப்பட்ட ஹீரோக்கள் இந்த நிலைக்குத் தள்ளப்படுவதுண்டு.

அதே சமயம், கருகரு உருவமும் கட்டுமஸ்து பாடியும் மட்டுமே ஜெயித்து விடுவதில்லை. ‘இவனெல்லாம் ஒரு ஆளு...’ எனப் பெண்கள் நிராகரித்துவிட்டால், அவனுக்கு ஆக்ஷன் ஹீரோ அவதாரம்தான் ததாஸ்து. ‘இவன் என்னை மாதிரி’ எனப் பெரும்பாலான ஆண்களை நினைக்க வைக்கும் ஃபேஸ்கட். ‘இவன் வேற மாதிரி’ எனப் பெண்களை இழுத்து வைக்கும் வசீகரம். இவை இரண்டும் சேர்ந்த காம்பினேஷன்தான் ஒரு கலக்கல் ஹீரோ.

ஹீரோயின்கள் உருவாவதும் இவ்விதம்தான். பார்த்த மாத்திரத்தில் ‘ப்பா... சூப்பர் மச்சி’ என ஆண்கள் சொல்ல வேண்டும். அதைப் பார்க்கும் பெண்ணுக்கு ‘இவளை மாதிரி நாம இருந்தா...’ என்ற எண்ணம் வர வேண்டும். ஆனால், இந்த ப்ராசஸ் முன்னதை விட ரொம்பவே சுலபம். ‘புதுசா... இளசா...’ எனச் சொல்லும்போதே பாதி உருகிவிடுகிறது ஆண் மனம். ஆக, புதிதாக வந்து மார்க்கெட்டைப் பிடிப்பது ஒரு ஹீரோவுக்கு கஷ்டம். ஆனால், ஹீரோயினுக்கு மிக சுலபம்.

கணவனிடம் பிடித்த ஹீரோயினையும், மனைவியிடம் பிடித்த ஹீரோவையும் கேட்பது இன்று வரை டி.வி தொகுப்பாளர்களின் மரபு. திருமணமான ஆண் ஒருவன் விடும் ஜொள்ளையும், அவன் மனைவி அதை எதிர்கொள்ளும் விதத்தையும் அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் கண்கூடாகப் பார்க்கலாம்.

ஆனால், மனைவி..? ‘பிடித்த ஹீரோ’ என்பதற்கு பெரும்பாலான பெண்கள் என்ன பதில் சொல்வார்களோ... காலம் காலமாக பெண்களால் ‘லவ்லி’ பட்டம் சூட்டப்பட்டவர் யாரோ... அவருக்கே மறுபடியும் பட்டம் சூட்டி மகிழ்வார்கள் பெண்கள். புதிய வரவுகளை உள்ளுக்குள் ரசித்தாலும், வெளிப்படையாக ஒப்புக்கொள்வது அரிது. காரணம், சமூகத் தடை. புதுசாக இளசாக ஹீரோக்களை தன் மனைவி ரசிப்பது இங்கே துரோகமாகப் பார்க்கப்படும்.

ஆனால், கணவர்கள் மட்டும் ஜொள்ளு விடுவார்கள். மனைவிகள் வெட்கப்பட்டு சிரிக்க வேண்டும். இதென்ன நியாயம்? கடந்த இதழில் பேசிய மனநல ஆலோசகர் வாசுகி மதிவாணனிடம் இது பற்றி விவாதித்தோம்...‘‘எங்கள் கவுன்சலிங்கில் பல சமயம், ‘என் கணவர் ஏன் இப்படி இருக்கிறார்’, ‘என் மனைவி ஏன் இப்படி இருக்கிறாள்’ என்கிற கேள்விகள் எழும். ‘அவர்கள் அப்படித்தான் புரோகிராம் செய்யப்பட்டிருக்கிறார்கள்’ என்பதுதான் இதற்கு பதில்.

இப்போதும் நம் ஊரில் கணவன் மீது மனைவிக்கு சந்தேகம் வந்தால், அது ஊடல்... அதுவே மனைவி மீது கணவனுக்கு சந்தேகம் வந்தால், அது டைவர்ஸ். ‘ஏன் இந்த வேறுபாடு?’ என நாம் கொதிக்கலாம். ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசங்களைப் புரிந்து கொண்டால் இப்படி ஒரு கேள்வியே வராது. ஆண்கள் பெண்களைப் பார்க்கும் விதமும் பெண்கள் ஆண்களைப் பாக்கும் விதமும் முற்றிலும் வேறு வேறானது.

இதில் ஆண்கள் மாதிரி பெண்கள் அவசர முடிவெடுப்பதில்லை. ஷாப்பிங் பொருட்களைப் போலவே... ஹீரோக்களையும் அவர்கள் யோசித்து நிதானமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்தத் தேர்வை அவர்கள் சீக்கிரத்தில் மாற்றிக் கொள்வதில்லை. அழகு க்ரீமோ, டி.வி சேனலோ... முதன்முதலாகப் பழக்கப்பட்டுவிட்ட ஒன்றி லிருந்து பெண்கள் மாறுவது கஷ்டம். ஹீரோக்களின் மவுசு என்றும் குறையாதிருக்க இதுவும் ஒரு காரணம்! ஆண் என்பவன் குடும்ப வாழ்க்கைக்காக வடிவமைக்கப்படவில்லை. ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்களே... அப்படி ஆயிரமாயிரம் காலங்களாய் அதற்கு பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறான். அவன் இயற்கை உணர்வுகளை நாம் ஓரளவுக்கு மேல் தடுத்து வைக்க முடியாது.

காட்டில் மாமிச வேட்டையாடிய ஓநாய் இனத்தைச் சேர்ந்தவைதான் நாய்கள். இன்று அவற்றை தயிர்சாதம் தின்று வளரும் அளவுக்கு நாம் பழக்கிவிட்டோம். ஆனாலும் எலும்பு கடிக்கும் அதன் பழைய பழக்கம் போகாது. உடனே ஒரு பெட் ஷாப்புக்கு கூட்டிப் போய் ரப்பர் எலும்பு ஒன்றை வாங்கிப் போடுகிறோம். நாய் ஆசை தீரக் கடித்துக் கொண்டிருக்கிறது. மனித ஆண்கள் ஜொள்ளு விடுவதும், அடிக்கடி கனவுக் கன்னிகளை மாற்றி அப்பாயின்ட் செய்து கொள்வதும் அந்த ரப்பர் எலும்புத்துண்டு போலத்தான்.

பாலியல் ரீதியாக வெரைட்டி தேடுவது ஆண்களின் இயல்பு. அவர்கள் அப்படித்தான் புரோகிராம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த இயல்புக்கு ஓர் வடிகாலை அவர்களே தேடிக்கொள்ளும்போது சமூகம் அதைக் கண்டும் காணாமலும் விட்டு விடுகிறது. ஆனால், பெண்கள் அப்படி இருக்க முடியாது. காரணம், ஆண்களைக் குடும்ப விலங்காகப்  பழக்கியதே பெண்கள்தான். நாய் தன் விலங்கு குணத்தால் வளர்த்தவரைக் கடித்து வைக்கலாம். ஆனால், வளர்த்தவர் நாயைக் கடிக்கக் கூடாது!’’ என்றார் அவர் வேடிக்கையாக!

ஆண்களிடம் உள்ள ஜொள்ளு ஓகே... ஜொள் விட்ட ஆண் சும்மா இருப்பானா, பெண்ணுக்கு காதல் சமிக்ஞைகளைத் தொடுக்க  மாட்டானா? ‘கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க’ என நம் சூப்பர் ஸ்டாரே பாடவில்லையா. நிஜமாகவே ஆண்களின் கண்ணடிப்பும் விசிலும் சொல்வது என்ன?

நீங்கள் யார்?

உங்கள் அலுவல் மேஜை...

1. சுத்தமாக அடுக்கப்பட்டிருக்கும்

2. குப்பையாய் இறைந்திருக்கும்மனிதர்களின் பெயர், முகம்... எதை நினைவு கொள்வது உங்களுக்கு எளிது?

1. பெயர்
2. முகம் கணக்குப் பாடத்தில் எதைப் புரிந்துகொள்வது எளிது?

1. அல்ஜீப்ரா
2. ஜியாமெட்ரி

இந்தக் கேள்விகளுக்கு விடை டிக் பண்ணிவிட்டு திருப்புங்கள். பலன் தலைகீழாக! உங்கள் விடை 1 என்றால் 1 மார்க், 2 என்றால் 2 மார்க். மார்க்கைக் கூட்டுங்கள். 5, 6 என மதிப்பெண் வாங்கி விட்டீர்கள் என்றால் நீங்கள் கொஞ்சம் உணர்ச்சிகரமான நபர். உங்களிடம் உரையாட வார்த்தைகள் தேவையில்லை. 3, 4 மதிப்பெண் மட்டும் வந்தால் நீங்கள் எதிலும் கணக்குப் போட்டுக் காரியமாற்றக் கூடியவர். மொழித்திறனிலும் ஸ்மார்ட்!

அம்மா... ‘டி.வியில வொயிட் கலர் சாரி கட்டியிருக்குற அந்த ஆன்ட்டி மழையில நனைஞ்சா என்னைக் கூப்பிடு’னு அப்பா சொல்றாரே... எதுக்கும்மா?

 தேடுவோம்...

கோகுலவாச நவநீதன்