நடைவெளிப் பயணம்



எம்டன்

முதல் உலகப் போர் காலத்திலிருந்து இரண்டாம் உலகப் போர் முடியும் வரை - அதாவது சுமார் முப்பது ஆண்டுகள் - தென்னாட்டில் தமிழர், மலையாளிகள் மற்றும் தெலுங்கர் மத்தியில் ‘எம்டன்’ என்ற சொல்லுக்கு ஒரு விசேஷ கௌரவம் உண்டு. ஒருவரைப் பார்த்து, ‘‘நீ எம்டன்டா’’ என்று சொன்னால் அவருக்கு உச்சி குளிர்ந்து விடும். எம்டன் என்பது பெரிய செயல் வீரரைக் குறிக்கும் சொல்லாகிவிட்டது. அந்த எம்டனின் நூற்றாண்டாக இந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதியை சிலரால் அர்த்தப்படுத்திக் கொள்ள முடிந்தது.

எம்டன் ஒருவருடைய பெயர் அல்ல. அது ஒரு ஜெர்மன் கப்பலின் பெயர். அந்த வகையை ‘டெஸ்ட்ராயர்’ என்கிறார்கள். இது தவிர யுத்தக் கப்பல், விமானம் தாங்கிக் கப்பல், கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தும் கப்பல்கள் என்று பல வகைக் கப்பல்கள் உண்டு. இரண்டாம் உலகப் போரின்போது என் உறவினர் ஒருவர் கப்பற்படையில் பணி புரிந்தார். அவர்களுடைய சீருடை வெள்ளை வெளேரென்று இருக்கும்.

கழுத்துப் பட்டி அல்லது காலர் இல்லாமல் ‘ப’ வடிவத்தில் இருக்கும். வெள்ளை அரை டிராயர். அகலமான இடுப்புப் பட்டி. கால் மிகவும் குட்டை. தனித்துக் கட்டும் உடையாக இருக்க வேண்டும். அதாவது உடை எந்த நேரத்திலும் கை, கால்களின் இயக்கத்தைத் தடுப்பதாக இருக்கக்கூடாது.

முதல் உலகப் போர் 1914ம் ஆண்டில் தொடங்கியவுடன் எங்கெங்கோ இருந்த ஜெர்மன் கப்பல்கள் எல்லாம் தங்கள் நாட்டருகே இருக்கக் கிளம்பின. இந்த ‘எம்டன்’ கப்பலின் தலைவர் வான் முல்லர் மட்டும் கடலில் சற்று ‘விளையாடி விட்டு’ ஜெர்மனி வரத் தீர்மானித்தார். அவர் பிரிட்டிஷ் அரசை மிகவும் வெறுத்தாலும், பிரிட்டிஷ்காரர்களை கண்ணியமாக நடத்தியதாகத் தெரிகிறது. இதில் ஆச்சரியமில்லை.

பிரிட்டிஷ் மன்னரான ஜார்ஜ் வம்சமே ஜெர்மானியக் குடும்பம். முதலாம் ஜார்ஜுக்கு ஆங்கிலமே தெரியாது. இரண்டாம் உலகப் போர் முடிகிற காலத்தில் ஹிட்லர் பிரிட்டிஷ்காரர்களிடம் சரண் அடைய முன்வந்தான். ஆனால், சோவியத் ரஷ்யாவுடன் யுத்தம் தொடர விரும்பினான். பிரிட்டன் பிரதமர் சர்ச்சில், ‘நிபந்தனையற்ற சரணாகதிதான் ஒரே வழி’ என்றார்.

எம்டன் கப்பலுக்கு முல்லர் சில இலக்குகளை வைத்திருந்தார். முதலில் இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்களுக்கு இருக்கும் செல்வாக்கு மீது கறை படிய வைக்க வேண்டும் எனத் தீர்மானித்தார். அப்போது அவர் கப்பல் பசிபிக் பெருங்கடலில் இருந்தது. அவர் அங்கிருந்து வங்காள விரிகுடாவுக்கு வந்தார். பிரிட்டனின் அகம்பாவத்தைத் தட்டிக் கேட்க அவர் தேர்ந்தெடுத்த துறைமுக நகரம், அன்று மதராஸாக இருந்த  சென்னைப் பட்டினம். எம்டன் கப்பலில் செண்பகராமன் இருந்ததாகத் தெரிகிறது.

கப்பலின் பீரங்கிகளைச் சென்னையைக் குறிபார்த்து வைத்து முல்லர் சுட ஆரம்பித்தார். அவர் குறி தவறவில்லை. முதல் குண்டே பிரிட்டிஷாரின் தண்டையார்பேட்டை பர்மா ஷெல் எண்ணெய்க் கிடங்குகள் மீது விழுந்தது. அவை பற்றி எரிய ஆரம்பித்தன. அதன் பிறகு சுமார் அரை மணி நேரம்... நிமிடத்திற்கு நான்கு குண்டுகள் என்ற வீதத்தில் கப்பலின் பீரங்கிகள் பொழிந்தன.

என் அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன்... எம்டன் அரை மணி நேரம் குண்டு மழை பொழிந்தும் அதை எதிர்க்கச் சென்னையில் வழியில்லை. முதல் உலகப் போரை இயக்கிய முக்கிய தேசமாக பிரிட்டன் இருந்தாலும், இந்திய மண்ணுக்குப் போர் வராது என நம்பிக் கொண்டிருந்தார்கள். பர்மா ஷெல் கிடங்குகள் சுமார் ஆறு மாதங்கள் எரிந்து கொண்டிருந்தன.

அந்தத் தாக்குதலில் தென்னாடு வெலவெலத்துவிட்டது. அப்போது என் அப்பாவுக்குப் பதினைந்து வயது. அவருடைய அப்பா போய் விட்டார். அந்த நாட்களில் ஐம்பது ஆண்டுகள் ஓர் ஆண் உயிர் வாழ்ந்தால் வியப்படைவார்கள். என் அப்பாவுடைய இரு சித்தப்பாக்களும் சாவுக்குத் தயார் என்ற நிலையில் இருந்தார்கள்.

என் அப்பா பத்தாவது முடிக்கவே மிகவும் சிரமப்பட்டதாகத் தெரிகிறது. சொற்ப கட்டணத்தைக் கூட கட்ட முடியாமல் போக, அவருடைய அப்பா பணிபுரிந்த பள்ளியிலேயே அவரை விலக்கி விட்டார்கள். யார் யாரிடமோ ஒன்று, அரை என்று கடன் பெற்று சீர்காழியில் சிரமப்பட்டு பத்தாம் வகுப்பு முடித்தார்.

யுத்தம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. சுமார் பத்து லட்சம் இந்தியர்கள் பிரான்ஸ் நாட்டிலும் மத்தியக் கிழக்கு நாடுகளிலும் சிப்பாய்களாக இருந்து போர் புரிந்தார்கள். (முதல் உலகப் போரில் கலந்து கொண்ட இந்தியர்கள் இத்தனை பெரிய எண்ணிக்கை என்றாலும், இந்த யுத்தம் தமிழ் சினிமாவிலோ, படைப்பிலக்கியத்திலோ அதிகம் பிரதிபலிக்கவில்லை. இல்லவே இல்லை என்று கூடச் சொல்லலாம்!) இதற்கிடையில் என் அப்பாவின் இரு சித்தப்பாக்களும் சிறு சிறு குழந்தைகளை விட்டு விட்டு இறந்து விட்டார்கள்.

அன்று பரம தரித்திரத்திலும் யாரும் குடும்பப் பொறுப்பைத் தவறவிட மாட்டார்கள். இப்போது என் அப்பாவின் முதல் பொறுப்பு, இரு தம்பிகளை ஏதாவது வேலைக்குத் தயாராகும் தகுதியைப் பெறச் செய்ய வேண்டும். என் அப்பா விட்டுச் சென்ற நூல்களைப் பார்த்தால், அவருக்கு ஆங்கில, தமிழ் இலக்கியங்களில் நிறைய ஈடுபாடு இருந்திருக்க வேண்டும். ‘ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க’ என இயலாமையை வெளிப்படுத்த சொல்வார்கள்.

அப்பா தனது ஒரு தம்பியை மின் வேலைகள் கற்க வைத்தார். அப்போது யுத்தம் முடியும் தறுவாயில் இருந்தது. யார் சொன்னார்கள், யார் தகவல் கொடுத்தார்கள் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. என் அப்பா ஒரு நாள் செகந்தராபாத் போய் விட்டார். அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் யாரும் செகந்தராபாத் என்ற ஊரின் பெயரைக் கூட அறிந்திருக்க மாட்டார்கள்.

செகந்தராபாத் சென்ற ஆறாவது மாதத்தில் ஐந்து ரூபாய் அனுப்பி முதல் தம்பியை அவரிடம் அழைத்துக் கொண்டார். இன்னும் ஆறு மாதங்கள் ஆவதற்குள் இரண்டாம் தம்பியையும் அழைத்துக் கொண்டார். அவர் குடும்பம் வரை அவர் எம்டனாக இருந்து விட்டார்.  

சென்னையைத் தாக்கியபிறகு எம்டனில் சின்னதாக ஏதோ ஒரு பிரச்னை. நடுக்கடலில் கப்பலை நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி பழுது பார்த்துக் கொண்டிருக்க, முல்லர் மட்டும் தனியாகக் கிளம்பி சென்னை நகருக்குள் வந்தார். அங்கே ஒரு குதிரையை அமர்த்திக் கொண்டு ஒரு ஜெர்மன் குடும்பத்தைச் சந்தித்தார். அந்தக் குடும்பம் நடுநடுங்கிக் கொண்டிருந்தது. அதன்பின் முல்லர் கப்பலுக்குத் திரும்பி, கோலாலம்பூர் சென்றிருக்கிறார். ஆகஸ்ட் 1914 தொடங்கி மூன்று மாதங்களுக்குள் மொத்தம் முப்பது கப்பல்களை மூழ்கடித்திருக்கிறார்.

முதலில் சில நாட்கள் பிரிட்டன், ஆஸ்திரேலிய நாடுகளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரே ஒரு கப்பல் இவ்வளவு அட்டகாசங்கள் புரியக் கூடுமா? அப்போது சர்ச்சில்தான் பிரிட்டிஷ் கடற்படைக்குத் தலைவர். அவருடைய உத்தரவின் பேரில் பதினைந்து கப்பல்கள் ‘எம்ட’னைச் சூழ்ந்து ஆஸ்திரேலியா அருகே அதை மூழ்கடித்தன. கப்பலில் உயிரோடு இருந்த மாலுமிகள் கைது செய்யப்பட்டனர். அங்கும் பெருமை இல்லை.அந்தக் கைதிகளில் ஐம்பது பேர் சிறையிலிருந்து தப்பித்துக் கொண்டு ஜெர்மனிக்கே போய் விட்டனர். அவர்களது நீண்ட பயணம், கற்பனைகளுக்கும் சாத்தியமாகாத ஒரு சாகச வரலாறு!

ஆகஸ்ட் 1914 தொடங்கி மூன்று மாதங்களுக்குள் மொத்தம் முப்பது கப்பல்களை மூழ்கடித்திருக்கிறார். முதலில் சில நாட்கள் பிரிட்டன், ஆஸ்திரேலிய நாடுகளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரே ஒரு கப்பல் இவ்வளவு அட்டகாசங்கள் புரியக் கூடுமா?

படிக்க

சி.மோகன் அவர்களின் விசேஷ இலக்கிய அறிவையும் உணர்வையும் தமிழ்ப் பிரசுர உலகில் இருப்பவர்கள் நன்கு அறிவார்கள். என்னுடைய நெடுங்கதையாகிய ‘தண்ணீர்’, அவருடைய திருத்தங்களால் மெருகு பெற்றது. அவருடன் நான் ஒரு மொழிபெயர்ப்புத் தொகுப்பு தயாரிப்பதில் பங்கு பெற்றேன். அவருடைய மொழிபெயர்ப்பில் புகழ்பெற்ற ஒரு சீன நாவல் தமிழில் வெளிவந்திருக்கிறது.

 ‘ஓநாய் குலச்சின்னம்’ சீன மொழியிலும் ஆங்கில மொழிபெயர்ப்பிலும் லட்சக்கணக்கான வாசகர்களை மகிழ்வித்திருக்கிறது. நவீனப் படைப்பிலக்கியத்தில் இது சற்றுத் தீவிரமான நூல். ஜியாங் ரோங் என்பவர் எழுதிய இந்த நூலைச் சென்னை அதிர்வு பிரசுரம் வெளியிட்டிருக்கிறது. பிரதிகள் எளிதில் கிடைக்கக்கூடிய இடம் டிஸ்கவரி புக் பேலஸ், எண்.6, முனுசாமி சாலை, மேற்கு கே.கே.நகர், சென்னை-600078. பேச: 9940446650

(பாதை நீளும்...)

அசோகமித்திரன்