தந்திரம்



மார்ட்டினுக்குக் கவலையாக இருந்தது. கஷ்டப்பட்டுக் கடன் வாங்கி ஆரம்பித்த அவரது ரெடிமேட் துணிக்கடையில், எதிர்பார்த்தபடி வியாபாரம் ஆகவில்லை. கடைக்கு வந்தவர்கள், திருப்தி இல்லாமல் திரும்பிப் போனார்கள். வேலை செய்தவர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூட அவர் திணறுவதைப் பார்த்து, அவர்கள் சந்தடி இல்லாமல் வேலையை விட்டுப் போய் விட்டனர்.
இந்த சமயத்தில்தான் புதிதாக வேலைக்குச் சேர்ந்தான், பலராமன்.

அடுத்த வாரமே வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. முதலாளி மார்ட்டினுக்கு மகிழ்ச்சி. ஆனால், முன்பு இருந்த அதே துணிகள் இப்போது மட்டும் எப்படி வேகமாக விற்பனை ஆகின்றன? சந்தோஷம் இருந்தாலும் சந்தேகம் தாங்கவில்லை மார்ட்டினுக்கு.மதியம் சாப்பாட்டு நேரத்தில் பலராமனைக் கூப்பிட்டுக் கேட்டார். ‘‘உன் வியாபாரத் தந்திரம் என்ன?’’

‘‘எல்லா துணியுமே நல்ல கலர்ல, அழகான டிசைன்ல இருந்தா, எதை செலக்ட் பண்றதுன்னு தெரியாம தடுமாறுவாங்க. அதனால, நம்ம கடையிலயே கொஞ்சம் அவுட் ஆஃப் பேஷன், டல் கலர்னு சில துணிகளை தரம் பிரிச்சி வச்சேன். வர்றவங்களுக்கு முதல்ல தரமானதைக் காட்டுவேன். அவங்க தடுமாறும்போது, மட்டமானதை எடுத்துப் போடுவேன். முதலில் பார்த்ததே பிரமாதமா இருக்கேன்னு அதை வாங்கிடுவாங்க!’’மார்ட்டின் சந்தோஷத்துடன் சொன்னார். ‘‘இந்த மாசத்திலிருந்து உனக்கு சொன்னதை விட அதிக சம்பளம்!’’        

எஸ்.குமாரகிருஷ்ணன்