டெனன்ட்டா... டெர்ரரிஸ்ட்டா?



ஹவுஸ் ஓனர்களின் கறார் கண்டிஷன்கள்

‘‘ஜல்லிக்கட்டுல மாடு புடிச்சிடலாம்... தீபாவளிக்கு அம்மா கைப்பக்குவத்தோட லட்டு புடிச்சிடலாம்... டொரன்ட் டவுன்லோடுல ‘ஸீடு’ புடிச்சிடலாம்... ஆனா, சென்னையில வாடகைக்கு ஒரு வீடு புடிக்கிறதுதான் கஷ்டம்’’ என நொந்துகொள்கிறார்கள் அனுபவசாலிகள். அந்த அளவுக்கு எல்லை மீறிப் போய்விட்டன ஹவுஸ் ஓனர்களின் அராஜகங்கள். ‘‘இல்லவே இல்ல தம்பி...

இப்பல்லாம் டெனன்ட்ல யாரு டெர்ரரிஸ்ட்னே தெரிய மாட்டேங்குது. தினம் தினம் டென்ஷன் பண்ணி நம்ம பீ.பிய ஏத்திட்டு ஹேப்பியா இருக்கறது அவங்கதான்’’ என்கிறது வீட்டு உரிமையாளர்கள் தரப்பு. ஆளாளுக்கு கூவிக் கூவி அபார்ட்மென்ட் விற்ற களேபரத்தில் நாம் நெடுநாள் கவனிக்காமல் விட்டது இந்த வாடகை வீட்டு வர்க்கத்தைத்தான். இப்போது வாடகை மார்க்கெட்டில் பிரச்னைகள் அப்டேட்ஸ் என்ன?

*பொம்பளைங்க பேசக் கூடாது!

இந்தியா - பாகிஸ்தான்... மாமியார் - மருமகள்... மாதிரி, டெனன்ட் - வீட்டு உரிமையாளரை எதிரும் புதிருமாகவே வைத்திருக்கும் நம்பர் ஒன் காரணம், கண்டிஷன்கள். வாடகை வீட்டு கண்டிஷன் என்றால், சுவரில் ஆணி அடிக்கக் கூடாது, தண்ணியைத் தண்ணியா செலவழிக்கக் கூடாது என்பது போன்ற அரதப்பழசு கண்டிஷன்ஸ் கிடையாது.

ஸ்டீல் கட்டில் போடக் கூடாது, வீட்டுக்கு அடிக்கடி கெஸ்ட் வரக் கூடாது, வீட்டைப் பூட்டிட்டு அடிக்கடி வெளியேயும் போகக் கூடாது, ரொம்ப குப்பை போடக் கூடாது,

வீட்டுல தேவையில்லாத பொருளை வச்சிருக்கவும் கூடாது, அடிக்கடி வீட்டுக்கு லெட்டர் வரக் கூடாது, டூவீலரை சென்டர் ஸ்டாண்ட் போடக் கூடாது, நேரங்கெட்ட நேரத்துல குளிக்கக் கூடாது, நைட் ஷிஃப்ட் வேலைக்குப் போகக் கூடாது, குழந்தைங்க அழக்கூடாது, பொம்பளைங்க பேசக் கூடாது, ஆம்பளைங்க குடிக்கக் கூடாது... மொத்தத்துல யாரும் எங்க வீட்டை வாடகைக்கு கேட்டு வரவே கூடாது என்கிற மாதிரி கண்டிஷன்கள் போடுகிறார்களாம் ஹவுஸ் ஓனர்கள்.

*குப்பைக்குள் ஜூனியர் குப்பண்ணா!


இந்த கண்டிஷன்கள் எல்லாவற்றுக்கும் ஓகே சொல்லி வீட்டுக்குள் வலது கால் வைப்பதும்... அடுத்த நாளே கண்டிஷன்களை காற்றில் விடுவதும்தான் டெனன்ட் ஸ்டைல். இதனால் வீட்டு உரிமையாளர்கள் துப்பறியும் நிபுணராகவும், கூர்க்காவாகவும், சமயத்தில் மோப்ப நாயாகவும் மாற வேண்டிய நிர்ப்பந்தம்.

இப்படித்தான், மேற்கு மாம்பலத்தில் ஒரு வீட்டில் ‘அசைவம் சமைக்கக் கூடாது’ என்று கண்டிஷன். ‘ரைட்... ரைட்...’ என்று தலையாட்டி உள்ளே வந்த குடும்பத்தில், அடுத்த சண்டேவே ‘ஓட்டக் கருவாடு வாசம்’ ஊரைக் கூட்டியிருக்கிறது.

எப்படி இதைக் கேட்பது எனத் தவித்த ஹவுஸ் ஓனர், கடைசியில் அவர்கள் வீட்டு குப்பையைக் கிண்டிப் பார்த்து, உள்ளே ஒரு ஜூனியர் குப்பண்ணாவே இருப்பதை ஆதாரங்களோடு நிரூபித்துவிட்டார். ‘‘நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனா?’’ என்கிறார் டெனன்ட். ‘‘கண்டிஷனை ஏன் மீறினே?’’ எனக் கடுப்பாகிறார் ஹவுஸ் ஓனர். இது மாதிரி கண்டிஷன் கை கலப்பு நிறைய!

*பேஸ்மென்ட் ஃபிகர் சார்ஜ்!

ஒரு காலத்தில் குடியிருப்பு ஏரியாக்களில் பேச்சிலர் என்றால் வீடு கொடுக்க மாட்டார்கள். இப்போது அவர்களுக்கு மட்டும்தான் கொடுப்பார்களாம். காரணம், 5 ஆயிரம் ரூபாய் பெறாத வீட்டுக்கு அவர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் சுளையாகக் கறந்துவிடலாம். காலிங் பெல் அடித்தாலே காலி பாட்டில்களை அப்புறப்படுத்திவிட்டு குற்றவுணர்ச்சியோடு வாய் மூடிப் பேசுகிறவர்கள் அவர்கள்.

ஸோ, ‘‘மொறம் வாங்க இருநூறு... மொறவாசலுக்கு முந்நூறு’’ எனக் கணக்கு சொன்னால், வாயைத் திறக்காமல் பர்ஸைத் திறப்பார்கள். போன வாரம் கெஸ்ட் வந்ததுக்கு ஒரு சார்ஜ், அதுக்கு முந்தைய வாரம் டைஃபாய்டு வந்ததுக்கு ஒரு சார்ஜ் என அவர்கள் சார்ஜ் இறங்கும் வரை சார்ஜை ஏத்தலாம்.

குரோம்பேட்டையில் ஒரு வீட்டில், டூ வீலர் பார்க்கிங் என்றே தனியாக ஒரு அமவுன்ட் வாங்குகிறார்களாம். ‘‘இதெல்லாம் கூடப் பரவாயில்ல... எங்களுக்கு கீழ் வீட்டுல நாலு பொண்ணுங்க குடிவந்த பிறகு, ஹவுஸ் ஓனரம்மா எங்க வாடகையை ஆயிரம் ரூபா ஏத்திடுச்சு’’ என வயிறெரிகிறார் கே.கே. நகர் பேச்சிலர் ஒருவர். இதற்குப் பெயர்தான் ‘பேஸ்மென்ட் ஃபிகர் சார்ஜ்’!

*நாய்க்கு வணக்கம் வக்கிறானுங்க!

பேச்சிலர் பற்றிப் பேசினாலே டென்ஷன் எகிற நாக்குக்கு கீழே வைக்கும் டேப்லட் கேட்கிறார்களாம் சில வீட்டு உரிமையாளர்கள். ‘‘மனுஷனுங்களா சார் அவங்க? கால் டாக்ஸி ஓட்டுறவனெல்லாம் கால் சென்டர்ல இருக்கறதா சொல்லி வாடகைக்கு வந்துடுறான். வாசல்ல அதை சைக்கிள் மாதிரி நிறுத்திட்டு கூலா குளிக்கப் போறான். மிட்நைட் ரெண்டு மணிக்கு பொட்டு பொட்டுன்னு அடிச்சித் துவக்கிறான். விண்கல் விழுற மாதிரி கீழ் வீட்டுக்கெல்லாம் கிலியாகுது.

தேவலோகம் மாதிரி வீட்டுக்குள்ள எப்பவும் புகை. ரூம் மேட்ஸ்க்கு கேட்டுடக் கூடாதுன்னு பர்சனல் காலை மொட்டை மாடியில வந்து பேசுறானுங்க. அது அபார்ட்மென்ட்டுக்கே கேட்டுத் தொலைக்குது. பொண்ணுங்க இருக்குற வீட்டுலல்லாம் நாயப் பார்த்தாலும் வணக்கம் வக்கிறானுங்க. கிழடு கட்டைகளைப் பார்த்தா மதிக்கறதில்லை. எந்நேரமும் எதோ பெருசா தப்புப் பண்ணிட்டு ஓடப் போறானுங்களோன்னு திகில் கிளப்புற மாதிரியேதான் திரியிறானுங்க. இவனுங்களை காலி பண்ணச் சொன்னா, ‘வேற வீடு பார்த்துக் குடு’ன்னு நம்மளையே புரோக்கர் ஆக்கிடுறாங்க’’ - பேச்சிலருக்கு வீடு கொடுத்து ஹிஸ்டீரியா வந்த ஹவுஸ் ஓனர்களின் வாக்குமூலம் இது.

*கலாசாரத்துக்கே இவங்கதான் கான்ஸ்டபிள்!


‘‘ஹவுஸ் ஓனர்ஸ்னா லேண்ட் லார்ட்ஸ்... அதுக்கு ஏத்த மனசோட நடந்துக்கணும். கவர்மென்ட்டே 3 ரூபாய்க்கு மேல கரன்ட் சார்ஜை ஏத்த பயப்படுது... ஆனா, இவங்க... யூனிட்டுக்கு 8 ரூபா 9 ரூபாய்னு தீட்டுறாங்க. இந்தப் பொழப்புக்கு வாடகையைக் கொஞ்சம் ஏத்தி வாங்கிட்டுப் போகலாம். அந்த சார்ஜ், இந்த சார்ஜ்னு இவங்க வாங்குறதெல்லாம் பத்தாதுன்னு அடிக்கடி ஃபைன் வேற போடுறாங்க.

போர்வெல் காஞ்சு போச்சு, தண்ணி மோட்டார் தீஞ்சு போச்சு, வண்டிய நிறுத்தி டைல்ஸ் பேந்துடுச்சு, கார்ப்பரேஷன் பம்ப்ல ஸ்க்ரூ தொலைஞ்சுருச்சு, கொடி அந்துருச்சு, தாப்பா கையோட வந்துருச்சுனு இவங்க சொத்தை வீட்டைக் கட்டி வச்சிட்டு, நம்ம சொத்தைப் புடுங்குறாங்க.

வாடகையை ஏத்தணும்னா நேரடியா சொல்ல வேண்டியதுதானே! அதை விட்டுட்டு, கோலம் போட்டது சரியில்ல, கொடி கட்டினது தப்புன்னு சண்டை பிடிச்சு கடைசியா மேட்டருக்கு வர்றதெல்லாம் எந்த ஊரு ஸ்டைல்? இது எல்லாத் துக்கும் மேல, பொண்ணுங்க இருக்குற வீட்டுல பசங்க வர்றாங்களா, பசங்க இருக்குற வீட்டுல பொண்ணுங்க வர்றாங்களானு இவங்க பார்க்குற பார்வை இருக்கு பாருங்க... டெஸ்ட் மேட்ச் அம்பயர் தோத்துடுவார்.

கன்னிங்கா கன்னிகளை பிக்கப் பண்ணினா கண்டுக்க மாட்டாங்க... சோஷியலா டிராப் பண்ண வர்றவனை சொரண்டிப் பார்ப்பாங்க. என்னவோ கலாசாரத்துக்கே இவங்கதான் கான்ஸ்டபிள்னு நெனப்பு!’’ என்கிறது டெனன்ட் வர்க்கம்!  ‘குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்...’ என வாத்தியார் சொன்னது ரொம்ப ஈஸி போலிருக்கே!

என்ன பண்ணியிருக்க நீ? பேசாதே! பேசாதே!

இனி, ஹாய் சொல்லவும் தனி சார்ஜ் வாங்கணும்!

- டி.ரஞ்சித்