சாமர்த்தியம்



சாலையோரம் தேங்காய் விற்றுக் கொண்டிருந்த அந்தக் கிழவியின் கடை முன்னே, இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, கீழே இறங்கியும் இறங்காமலும் சத்தம் போட்டான் அருண்குமார்.

‘‘என்னம்மா தேங்காய் விக்கறீங்க? ஒரு தேங்காய் அழுகிப் போச்சு. இன்னும் ரெண்டு கிட்டத்தட்ட கொப்பரைத் தேங்கா அளவுக்கு முத்திப் போச்சு! நம்பி வாங்கிட்டுப் போனா இப்படி பண்றீங்களே?’’

‘‘அய்யா... ஏதோ தப்பு நடந்து போச்சு. கோவிச்சுக்காதீங்க! இந்தாங்க... இதுல நல்லதா பாத்து எடுத்துக்குங்க!’’ - கிழவி காட்டிய தேங்காய்க் கூடையில் நல்லதை பொறுக்கி எடுத்துக்கொண்டு...

மனைவியிடம் அதை ஜம்பமாய் சொல்ல மொபைலில் கூப்பிட்டான். பல முறை முயன்றும் ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது. கடைசியாக லேண்ட் லைனில் அழைத்தபோதுதான் அவள் போனை எடுத்தாள். ‘‘எத்தனை முறை கூப்பிட்டேன்...

ஏன் மொபைல் போனை எடுக்கலை?’’ - கோபமாய்க் கேட்டான்.‘‘ஆமாம்... ஏதோ வெப்சைட் விளம்பரத்தைப் பாத்துட்டு, நேத்து நீங்க வாங்கின செல்போன் அடுத்த நாளே படுத்துடுச்சு. அதை எந்த ஷோரூம்லயும் ரிப்பேர் பண்ண முடியாதுன்னு அந்த வெப்சைட்டே கையை விரிக்குது. எட்டாயிரத்துக்கு வாங்கின அந்த போனை நீங்க எப்படித்தான் உருப்படியாக்கப் போறீங்களோ?’’ என்றாள். அதிர்ந்து போனான் அருண்குமார்.

பிரகாஷ் ஷர்மா