தள்ளுபடியா... தலைவலியா..?



ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் அக்கப்போர்

‘‘அன்பான வாடிக்கையாளர்களே, கடந்த ஏழு வருடங்களாக நாங்கள் உங்களிடம் பெற்ற நல்ல பெயரை இந்த ஒரே நாளில் இழந்துவிட்டோம். எங்களை மன்னிக்கவும்!’’
- ‘இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் ஸ்டோர்’ எனப் புகழப்படும் ஃப்ளிப்கார்ட் டாட் காம் இப்படியொரு மன்னிப்புக் கடிதம் எழுதும் அளவுக்கு சீரியஸ் ஆகியிருக்கிறது மேட்டர். எல்லாம் அவர்கள் நடத்திய ‘பிக் பில்லியன் டே’ விற்பனையால் வந்த வினை. கலவரம் நடந்த பூமியில் சிதறிக் கிடக்கும் செருப்புகளாய், இந்த ‘சேல்’ குறித்த குற்றச்சாட்டுகள் நாலா பக்கமும்!

ஓவராக பில்டப் விளம்பரங்கள் வந்தபோதே நாம் சுதாரித்திருக்க வேண்டும்! ‘90 சதவீதம் வரை தள்ளுபடி, 10 மணி நேரம் வரைதான் சேல்ஸ், அதுக்குள்ள முந்தணும்’ என ஆசைப்பட்டதன் விளைவு... ‘அய்யோ... இப்ப நான் யாரையாவது போட்டு உதைக்கணுமே’ என்ற ரேஞ்சில் கடுப்பாகியிருக்கிறது இளைஞர் வர்க்கம். நடந்தது இதுதான்...

கடந்த செப்டம்பர் ஆறாம் தேதி... திங்கட்கிழமை... காலை 8 மணி... பெரும் எதிர்பார்ப்போடு ஃப்ளிப்கார்ட் தளத்தின் ‘பிக் பில்லியன் டே’ விற்பனை தொடங்கியது. குண்டூசி முதல் சோபா, வாஷிங் மெஷின் வரை கிடைக்கும் என்றாலும் ஃப்ளிப்கார்ட் போன்ற தளங்களில் பெரும்பாலானவர்கள் வாங்கத் துடிப்பது எலக்ட்ரானிக் அயிட்டங்களைத்தான். குறிப்பாக, செல்போன். ஆனால், இந்த தள்ளுபடி விற்பனை ஆரம்பித்து அரை மணி நேரம் முதலே, ஒவ்வொரு செல்போனாக ‘அவுட் ஆஃப் ஸ்டாக்’ நிலைக்குப் போய்க்கொண்டே இருந்தது.

‘எதை க்ளிக் பண்ணினாலும் வித்துப் போச்சுனு வருது. வித்துப் போன பொருட்களுக்கு தள்ளுபடி கொடுத்து என்ன பிரயோஜனம்?’ என 9 மணி வாக்கில் ட்விட்டரில் காரித் துப்ப ஆரம்பித்தார்கள் சிலர்.எல்லோரும் ஒரே சமயத்தில் ஃப்ளிப்கார்ட் தளத்தை டார்கெட் பண்ணியதால், சர்வர்கள் அப்படியே ஷாக் ஆகிவிட்டன. ஸோ, இந்த ‘சேல்’லில் தட்டுப்பாடின்றி எல்லோருக்கும் கிடைத்த ஒரே அயிட்டம், ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ கார்டுதான்.

இதோடு விளம்பரத்தில் சொன்னதை விட கூடுதல் விலையை விற்பனையில் காட்டி கடுப்பேத்தியது ஃப்ளிப்கார்ட் தளம். திருவிழாவில் சர்க்கரைப் பொங்கலுக்காக முண்டியடித்து நெருங்கியவர்களுக்கு, போடுவது புளி சாதம் என்று தெரியும்போது எப்படி இருக்கும்? அப்படி இருந்தது பலரின் அனுபவம். இதில் சில பொருட்கள், ஆஃபர் இல்லாத அமேசான் தளத்திலேயே ஃப்ளிப்கார்ட்டை விட சீப்பாகக் கிடைத்ததாம்!

‘‘அன்னிக்கு முழுக்க ஒரே டென்ஷன் சார். ஃப்ளிப் கார்ட் சைட்டே அன்னிக்கு பல தடவை க்ராஷ் ஆச்சு. கிரெடிட் கார்டுல பணம் கட்டின பிறகு வழக்கமா வர்ற புக்கிங் எஸ்.எம்.எஸ் வரல. என் ஃப்ரெண்ட்ஸ் சில பேருக்கு புக்கிங் கேன்சல்னு ஏதோ பரோட்டா கேன்சல்ங்கற மாதிரி மெசேஜ் வந்துச்சு. சும்மா இல்ல... கிட்டத்தட்ட ஆளுக்கு ரூ.10 ஆயிரம் கட்டியிருந்தோம். பொருள் வருமா? காசு வருமா? இல்ல எதுவுமே வராதா? ஒண்ணும் புரியல!’’ எனப் பேசும்போதே பதட்டமாகிறார் ஐ.டி இளைஞர் ஒருவர்.

போதாக்குறைக்கு அன்றைய தினம், கூகுளில் ‘பிக் பில்லியன் டே’ என்று தேடியவர்களுக்கு அந்தப் பெயரிலேயே ஒரு வெப்சைட் முன்னால் வந்து விழுந்தது. அதை க்ளிக் செய்தால், அது போட்டி இணையதளமான அமேசான் டாட் காமுக்கு கொண்டு போய் விட்டது. இதனாலே வெறுத்துப் போனவர்கள் பலர்.

இப்படி ‘கஷ்ட’மர்கள் தரப்பில் புகார்கள் குவிந்திருந்தாலும், ஃப்ளிப்கார்ட்டுக்கு இந்த நாள் வெற்றிதான் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். இந்த 10 மணி நேர விற்பனையில் 15 லட்சம் வாடிக்கையாளர்களிடம் சுமார் 600 கோடி ரூபாய்க்கு கல்லா கட்டி விட்டது அந்தத் தளம்.

‘‘வழக்கத்தை விட 20 மடங்கு அதிகம் பேர் வருவார்கள் எனக் கணித்து அதற்கேற்ப பொருட்களின் கையிருப்பைக் கூட்டியிருந்தோம். 5000 இணைய சர்வர்களையும் இணைத்திருந்தோம். ஆனால், இருந்த டிமாண்டுக்கு முன் இதெல்லாம் கொசுறு’’ என்கிறார்கள் ஃப்ளிப் கார்ட் தளத்தின் எஞ்சினியர்கள்.

இத்தனை குளறுபடிக்கு மத்தியிலும் இவ்வளவு பணம் குவிந்திருக்கிறதென்றால், அதற்குக் காரணம் பல்வேறு பொருட்களில் நிஜமாகவே தரப்பட்ட சில நம்ப முடியாத தள்ளுபடிகள்தான். ஆன்லைன் ஷாப்பர்களைப் பொறுத்தவரை 1000 ரூபாய் புத்தகம், 100 ரூபாய்க்குக் கிடைத்த அற்புத நாள் அது.

இதனாலேயே இன்னொரு பக்கம் எதிர்ப்பையும் வாரிக் கட்டியிருக்கிறது ஃப்ளிப்கார்ட். ‘நாங்க கடை வாடகை கொடுத்து, கரன்ட்டு பில்லு கட்டி, வாசல்ல குத்த வச்சிருப்போமாம்... இவங்க ஆன்லைன்ல சேல் நடத்தி அத்தனையும் வித்துப்புடுவாங்களாம்’ எனக் கடுப்புக் கொடி காட்டியிருக்கிறார்கள் லோக்கல் கடைக்காரர்கள். கம்பெனிகளும் கூட இவர்களுக்கு ஆதரவு தெரிவித் திருக்கின்றன.

‘‘இந்தியாவுல வாட் வரி குறைவா இருக்குற மாநிலம் கர்நாடகா. அங்க 5.5% வாட் கட்டிதான் இவங்க எல்லா பொருளையும் இறக்குமதி பண்றாங்க. ஆனா, 14.5% வாட் இருக்குற தமிழ்நாட்டுல அதை வித்துட்டுப் போயிடுறாங்க. இதிலேயே 10% அவங்களுக்கு மிச்சம். நாங்க கடை வச்சிருக்குற ஸ்டேட்லதானே வாட் கொடுத்தாகணும். இது மட்டுமில்லாம இன்னும் பல வழிகள்ல அவங்க செலவைக் குறைச்சுடறாங்க.

அதனாலதான் இவங்க அளவுக்கு விலை குறைவா எங்களால தர முடியறதில்ல. இந்த ஆன்லைன் விற்பனைக்கெல்லாம் ஒரு சில கட்டுப்பாடுகளை வகுக்கணும். இல்லாட்டி ரீ டெயில் கடைகளே இல்லாம போகும். அதுக்கப்புறம் இவங்க வச்சதுதான் ரேட்டுனு ஆகிடும்!’’ எனக் கொதிக்கிறார் சென்னை ரிச்சி தெரு கடைக்காரர் ஒருவர்.

‘‘இந்த ஆன்லைன் அக்கப்போரால வழக்கமான தீபாவளி ஷாப்பிங் மூட் சென்னை கடைகள்லயே இல்லை. சேல்ஸ் கிட்டத்தட்ட பாதியா குறைஞ்சிருக்கு!’’ என சோகப்படுகிறார், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் கடைக்காரர் ஒருவர்.

‘‘இது போன்ற புகார்கள் நிறைய அரசுக்கு வந்துள்ளன. ஆன்லைன் வியாபாரத்துக்கென தனிக்கொள்கைகள் வகுப்பது பற்றி பரிசீலித்துக்கொண்டிருக்கிறோம்!’’ எனச் சமீபத்தில் ஆறுதல் தந்திருக்கிறார் மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

 இது எதையும் கண்டு கொள்ளாமல், ஆன்லைன் வர்த்தக ஜாம்பவான்களான ‘அமேசான்’, ‘ஸ்நாப் டீல்’ என எல்லோரும் இதே மாதிரி ‘தள்ளுபடி’ கொண்டாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ‘‘அது என்னைக்கு பாஸ்... எவ்வளவு டிஸ்கவுன்ட்?’’ என்கிறீர்களா! அதானே... நாம எப்பவும் நாமாதானே இருப்போம்!

- நவநீதன்