கவிதைக்காரர்கள் வீதி



தனிமைச் சிறகு!


சமரசம்
செய்துகொள்ளும்
ஒவ்வொரு முறையும்
மரணிக்கிறது
கலைஞனின்
தன்மானம்

நெடுமரமொன்றின்
நீண்டுபிரியும்
கிளையினின்று
யாருமறியாதொரு பொழுதில்
மெல்லப் பிரிந்துதிரும்
சருகொன்று
சலனமற்று
உணர்த்திப்போகிறது
வாழ்வின் நிதர்சனத்தை

அகண்ட வெளியில்
அகன்ற தன் சிறகு விரித்துப்
பறக்கும் பறவை
அறியுமோ?
உச்சிப்பொழுதில்
நிலம் பதியா
வெற்றுக் கால்களோடு
அதன் நிழல் பிடித்தோடும்
சிறுவனின்
பறவை மனசை

மேல் வயிற்றுக்கும்
அடி வயிற்றுக்குமாய்
அபத்தங்களோடு வாழும்
அழுக்குச் சமுதாயம்
சுட்டிக் காட்டுகிறது
நிலவின் களங்கத்தை
கூச்சமின்றி

பறந்து போகிறேன்
கூட்டத்தோடு
இரை தேடுகிறேன்
சப்தத்தின் ஊடாய்
இரை ஊட்டும்
பொழுதுக்காய்
குஞ்சுகளின்
இரைச்சல்
காதில் சங்கீதமாய்
காற்றோடு பேசும்
இலைகள்
என்னோடும்
கதையளாவிப் போகிறது

மழைத்துளி ஒன்று
மூக்கின் மேல்
அமர்ந்து
பாடல் இசைக்கிறது
இருந்தும்
எப்போதும் கூடவே வருகிறது
தனிமையின் சிறகு ஒன்று

ஸ்ரீதேவி மோகன்