எல்லோருமே கண் தானம் செய்தால்..?



நெகிழ வைக்கும் முன்னுதாரண கிராமம்

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையினிடையே, வில்லுக்குறி அருகே உள்ள கிராமம் மாடத்தட்டுவிளை. சுமார் 2500 குடும்பங்கள், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தின் சிறப்பே கண் தானம்தான். ஒருவர், இருவர் அல்ல... பெரும்பாலும் இந்த கிராமத்தில் யார் இறந்தாலும், அவர் கண்கள் தானம் செய்யப்பட்டு விடுகின்றன. ஏதோ கடமைக்காகவோ விளம்பரத்துக்காகவோ அல்லாமல், கண் தானத்தை தங்கள் வழக்கங்களில் ஒன்றாகவே ஆக்கிக் கொண்டதுதான் இந்த மக்களின் சிறப்பு!

‘’கண் தானம்னா கண்ணைத் தோண்டி எடுத்துட்டுப் போறதில்லை சார்... வெங்காயத் தோல் மாதிரி கருவிழியில ஒரு சின்ன லேயரைத்தான் எடுப்பாங்க!’’‘‘இறந்து ஆறு மணி நேரத்துக்குள்ள கண் தானம் பண்ணிடணுங்க... அப்பதான் கண்ணு நல்லாயிருக்கும்!’’

‘‘ஒருத்தர்கிட்ட இருந்து எடுக்குற கண்களால நாலு பேருக்கு பார்வை கொடுக்குற அளவுக்கு இப்போ மருத்துவம் வளர்ந்துடுச்சு’’- இப்படி கண் தானம் பற்றி ஒரு டாக்டருக்கு நிகராக விவரங்களைக் கொட்டுகிறார்கள் மாடத்தட்டுவிளை மக்கள். அத்தனையும் அனுபவப் பாடம். இதுவரை இந்த கிராமத்தில் 136 பேரின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன. அடிக்கடி கண் தானம் செய்யப்படுவதால் அதன் ஏற்பாடுகளுக்காக தனியொரு இயக்கமே இங்கு துவக்கப்பட்டிருக்கிறது.

அதன் பெயர், ‘திருக்குடும்ப திரு இயக்கம்’.‘‘கிறிஸ்தவர்கள் நிறைஞ்ச கிராமம் சார் இது. ஆரம்பத்துல இங்க சர்ச் மூலமா கண் சிகிச்சை முகாம்கள் நிறைய நடந்தது. அப்போ அவங்க கண் தானம் பத்தி நிறைய அறிவுரைகள் சொல்வாங்க. அதில், நிறைய பேர் கண் தானம் செய்யிறதா உறுதி கூட எடுத்துக்கிட்டாங்க.

2007 ஜூன் 17ம் தேதி இங்கே மரிய செபஸ்தியான்னு ஒருத்தர் இறந்தார். அவரோட கண்களை தானம் செய்ய அவங்க குடும்பம் முன்வந்துச்சு. அதுதான், ஆரம்பம். இது ஒரு பிராக்டிகல் முன்னுதாரணமா ஆனதால, பல குடும்பங்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டுச்சு’’ என்கிறார் திருக்குடும்ப திரு இயக்க செயலாளர் ரெக்சின் ராஜகுமார்.

ஊர்ப்புறம் என்றால் வழக்கமாக அரசியல் கட்சிகளின் ஃப்ளக்ஸ் போர்டுகள்தான் நம்மை வரவேற்கும். ஆனால், மாடத்தட்டுவிளையில் சமீபத்திய கண் தானத்தைப் பெருமைப்படுத்தும் விதமாக திருக்குடும்ப திரு இயக்கத்தினர் வைத்திருக்கும் பேனர்களை மட்டுமே பார்க்க முடிகிறது.‘‘கண் தானத்தை ஒரு இயக்கமா முன்னெடுத்துப் போக 2009லதான் இந்த அமைப்பை உருவாக்கினோம். இறந்தவர் குடும்பத்துல எல்லாரும் கண் தானத்துக்கு சம்மதிச்ச உடனே எங்களுக்கு தகவல் சொல்வாங்க.

நாங்க கண் வங்கிக்கு தகவல் கொடுப்போம். அடுத்த ஒன்றரை மணி நேரத்துக்குள்ள மருத்துவக் குழு வந்துவிடும். வெறும் 20 நிமிஷத்துல அவங்க கண்களை எடுத்துட்டுப் போயிடுவாங்க’’ என்கிறார் இயக்க பொருளாளர் சில்வான்ஸ். இப்போது மாடத்தட்டுவிளையைப் பார்த்து பக்கத்து கிராமங்களான கூட்டமாவு, கல்லுக்கூட்டம், செம்பருத்திவிளை, முளகுமூடு, துண்டத்துவிளை, அப்பட்டுவிளை, கண்டன்விளை, ஆரோக்கியபுரம், பள்ளவிளை போன்றவற்றில் இருந்தும் சில குடும்பங்கள் கண் தானம் செய்ய முன்வந்து இந்த இயக்கத்தைத் தொடர்பு கொள்கிறார்களாம்.

கண் தானம் ஒருபுறம் இருக்க ரத்த தானம், உடல் தானம் போன்றவற்றிலும் மாடத்தட்டுவிளை மக்கள் ஓரடி முன் நிற்கிறார்கள். ஆம், இங்கே இதுவரை 16 பேர் முழு உடல் தானமும் செய்திருக்கிறார்கள்.

‘‘இறந்த பிறகு எதுக்கும் பயன்படாம போகிற இந்த உடம்பை மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தரலாமே. அதான், இப்ப நான், என் மனைவி, மகன் மூன்று பேரும் உடல்தானம் தர சம்மதிச்சு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில பதிவு செஞ்சுட்டோம்’’ என்கிறார் மாடத்தட்டுவிளைவாசி ஜான் போனிப்பாஸ். இவர் நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.

‘‘எங்கள் கிராமத்திலிருந்து வழங்கப்படுகின்ற கண்களை தானமாகப் பெற்றவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் தேதி நடத்தப்படுகின்ற கண் சிகிச்சை முகாம்களுக்கு வருகின்றனர். தங்களுக்கு கண்களில் ஒளியேற்றிய மக்களுக்கு நன்றி கூறி அவர்கள் பேசும்போது எங்களின் நெஞ்சம் நிறைகிறது’’ என்கிறார் மாடத்தட்டுவிளை சர்ச்சின் பங்குத்தந்தை ஏசுரத்தினம்.

இந்தியாவில் 2020ம் ஆண்டில் 10.6 கோடிப் பேர் கண்பார்வை இழந்தவர்களாக இருப்பார்கள் என்கின்றன புள்ளிவிவரங்கள். இந்த கிராமத்தைப் போலவே இந்தியாவில் எல்லா கிராமங்களும் மாறினால், எவ்விதத்திலும் ‘இருட்டு’ இல்லாத ஒளிமயமான இந்தியா நிச்சயம் சாத்தியம்!

உறவினர்கள் செய்ய வேண்டியது?


கண் தானம் செய்ய விரும்பும் குடும்பத்தினர், மரணம் நிகழ்ந்த உடன் அருகில் உள்ள கண் வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இருப்பிட முகவரியை தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். உடல் வைக்கப்பட்டுள்ள அறையில் ஏ.சி இருக்கலாம். ஆனால், மின்விசிறிகளை ஓடவிடக் கூடாது.

தலையணை வைத்து தலைப் பகுதியை சற்று உயர்த்தி வைத்திருக்க வேண்டும். கண்களின் இமைகளை மூடி வைத்திருப்பதுடன் கண்கள் மீது ஈரமான துணி அல்லது பஞ்சு வைப்பதும் நல்லது. ரத்தப் புற்றுநோய், எய்ட்ஸ், மஞ்சள்காமாலை போன்ற காரணங்களால் இறப்பவர்களின் கண்களை தானமாக பெற்றுக்கொள்வது இல்லை. அதே போல தற்கொலை, விபத்து மரணங்களின்போதும் வழக்கு, போஸ்ட்மார்ட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகள் இருப்பதால் கண் தானம் பெறுவதில் சிக்கல்கள் உள்ளன!

- எம்.இராஜகுமார்
படங்கள்: எஸ்.மதன்குமார்