பேசும் சித்திரங்கள்



தமிழ் ஸ்டுடியோ 27 அருண்

அப்போது நான்
முழுக்கை சட்டையும், கால் சராயும்
அணிவது வழக்கம்
அப்போது நான்
மாதம் ஒருமுறையென

சீராக முடிதிருத்தி வந்தேன்
அப்போது நான்
ஆண்களுடன்
பள்ளியில்தான் படித்தேன்

இருந்தாலும் அவர்கள்
கிண்டல் செய்தார்கள்
நான் ஆணில்லை என.
இப்போது நான்
புடவை கட்டி
ஒத்தசடை பின்னி

பூ முடிந்து
பாந்தமாக வளைய வந்தாலும்
அவர்கள் கண்டுபிடித்துவிட்டார்களாம்
‘நான் பெண் இல்லை’ என்று!
- ‘லிவிங் ஸ்மைல்’ வித்யா

பெண் கருமுட்டையிலேயே ஒரு ‘எக்ஸ்’ குரோமோசோம் அதிகமாகவோ, அல்லது ஆணின் உயிரணுவிலிருந்து வரும் ‘ஒய்’ குரோமோசோமுடன் மேலதிகமாக ஒரு ‘எக்ஸ்’ குரோமோசோமோ அல்லது ‘ஒய்’ குரோமோசோமோ கருவில் இணைந்து விட்டால், பிறக்கும் குழந்தை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இல்லாது போகிறது.

அவர்கள் இரண்டுமில்லாமலும், இரண்டுமாகவும் அதாவது திருநங்கையாக, அல்லது திருநம்பியாக உருவெடுக்கிறார்கள். மாற்றுத் திறனாளியாகவோ, அல்லது வேறு பல குறைகளுடனோ பிறக்கும் குழந்தைகளை விட மிக அதிகமான சமூக புறக்கணிப்பிற்கு உள்ளாவது திருநங்கைகள்தான்.

உடலளவிலும், மனதளவிலும் இந்த சமூகம் அவர்களைத் துன்புறுத்தி, வாழ்வின் மீது நீங்காத கசப்புணர்வை ஏற்படுத்துகிறது. அறிவியல், அல்லது பிறப்பில் உள்ள குறைபாடுகளை, தனிமனி தக் குறைபாடாக பாவிப்பதே இதற்கு முக்கிய காரணம். இந்த உலகம் எப்போதும் இனவிருத்தியை நமக்கு போதித்துக்கொண்டே இருக்கிறது.

அதற்குத் தகுதியில்லாத அல்லது இனவிருத்தியை விரும்பாதவர்களை மிக மோசமாக சமூகம் வஞ்சித்துக்கொண்டே இருக்கிறது. ‘இனவிருத்தி செய்ய முடியாது’ என்கிற ஒற்றைக்காரணமே திருநங்கைகள் இந்த அளவிற்கு புறக்கணிக்கப்படுவதற்குக் காரணம்.

ஆனால் மேலோட்டமாக அணுகினால், அவர்கள் பிச்சை எடுக்கிறார்கள், பாலியல் தொழில் செய்கிறார்கள் போன்ற காரணங்களே முன்வைக்கப்படுகின்றன. ‘அவர்கள் இப்படி பிச்சை எடுப்பதற்கும், பாலியல் தொழில் செய்வதற்கும் யார் காரணம்’ என்கிற எளிய கேள்வியை சமூகம் எப்போதும் கவனத்தில் கொள்வதில்லை. இந்த காரணங்களைப் பின்தொடர்ந்தும், திருநங்கைகளின் உலகம் சார்ந்தும், திருநங்கைகளின் குடும்பம் அவர்களை எவ்விதம் அணுகுகிறது என்பது குறித்தும் தமிழில் ஒரு குறும்படம் பேசுகிறது.

தன் சகோதரி குளித்து முடித்துவிட்டு அறைக்கு வந்து வளையல் அணிந்து, பொட்டு வைத்து, பூச்சூடிக்கொள்வதைப் பார்த்துக்கொண்டிருக்கும் அன்பு, தானும் வளையல்களை எடுத்து அணிந்துகொள்கிறான். சிறுவனின் சேட்டையாக நினைக்கும் அவனது அக்கா, ‘‘டேய் அன்பு! உனக்கு வளையல் நல்லா இருக்குடா. இந்தா... இந்த பொட்டும் வச்சிக்கோ’’ என்று பொட்டு வைத்து அவனை அழகு பார்க்கிறாள். அதற்குள் அம்மா வந்து, ‘‘என்னடா இது... பொம்பளப் புள்ள மாதிரி? எழுந்து பள்ளிக்கூடத்துக்குப் போ’’ என்று அதட்டுகிறாள்.

காலச் சுழற்சியில் அன்பு பதின்பருவத்தை எட்டுகிறான். தனக்குள் இருக்கும் பெண்மையைப் பொத்திப் பாதுகாத்து வைத்திருக்கிறான். ஒருநாள் அவனது பெற்றோர்களும், அக்காவும் ஒரு திருமண நிகழ்விற்காக பக்கத்து ஊருக்குச் செல்கிறார்கள். தனிமையில் அன்பு தன்னுடைய பெண்மையை ஆராதிக்கத் தொடங்குகிறான்.

பெண்கள் அணியும் உள்ளாடைகளை அணிந்து, சேலை அணிந்து, பொட்டு வைத்து, வளையல் போட்டுக்கொண்டு, நளினத்தில் நாணுகிறான். பேருந்து கிடைக்காமல் வீட்டிற்கு வரும் அவனது தந்தை, அன்புவின் நிலை கண்டு கொதித்தெழுகிறார். ‘‘நீ இங்க இருந்தா என் பொண்ணுக்கு கல்யாணமே ஆகாது, வெளியில போடா பொட்ட’’ என்று ஆர்ப்பரித்து அவனை வீட்டை விட்டுத் துரத்துகிறார்.

வீடற்ற உலகின் பல்வேறு குறுக்கீடுகள், பாலியல் தொழில் செய்ய வற்புறுத்தும் நபர்கள் என எல்லாரையும் தாண்டி, திருநங்கைகளோடு வந்து சேர்கிறான். அங்கிருக்கும் குருபாய், ‘‘கடைகளுக்குப் போய், தினசரி முன்னூறு ரூபாய் கொண்டு வா. சில மாதங்கள் கழித்து உனக்கு நிர்வாணம் செய்து வைக்கிறேன்’’ என்று சொல்லி, சக திருநங்கைகளுடன் அவனை பிச்சை எடுக்க அனுப்பி வைக்கிறார். சில மாதங்கள் கழித்து அவனுக்கு ‘தாயம்மா நிர்வாணம்’ செய்து வைக்கப்படுகிறது. அன்பு ‘வளர்மதி’யாகிறாள்.

தன் குடும்பத்தை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள் வளர்மதி. ‘‘திரும்பி இங்கேயே வந்துவிட வேண்டும், இல்லையென்றால் உங்கள் வீட்டிற்கு வந்து அசிங்கம் செய்து விடுவோம்’’ என்கிற தன்னுடைய குருபாயின் எச்சரிக்கையோடு நீண்ட பயணம் செய்து வீடு வந்து சேர்கிறாள் வளர்மதி.

ஆனால் வீடு துளியும் மாறியிருக்கவில்லை. தந்தை அவளை ஏற்க மறுக்கிறார். அவளது தாய் மட்டும் பள்ளிச் சான்றிதழைக் கொடுத்து, ‘‘பிச்சை எடுக்காத அன்பு, ஏதாவது வேலை செய்து சாப்பிடு’’ என்று சொல்லி அனுப்புகிறாள். வளர்மதி வேலை தேடி அலைகிறாள். சமூகம் தன்னுடைய கோரப்பல்லைக் காட்டிக்கொண்டே அவளைத் துரத்துகிறது.

திருநங்கைகள் குறித்த மிக நீண்ட நெடிய வரலாறு தமிழ் மண்ணில் உண்டு. சங்க இலக்கியத்திலும், பேரரசர்கள், சிற்றரசர்கள் காலத்திலும் கூட திருநங்கைகள் பற்றிய வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழில் சு.சமுத்திரம் திருநங்கைகள் குறித்து எழுதிய ‘வாடாமல்லி’ நாவல், மிக முக்கியமான இலக்கியப் பங்களிப்பாகவே இதுவரை இருந்து வருகிறது. இலட்சுமணப் பெருமாளின் ‘ஊமங்காடை’ சிறுகதை, திருநங்கைகள் குறித்த முக்கியமான பதிவு. சமூகமும், குடும்பமும் எவ்விதம் திருநங்கைகளை அவமானப்படுத்துகிறது என்பதை அவர் பதிவு செய்திருப்பார்.

நகைச்சுவையாகத் தொடங்கும் சிறுகதையின் இறுதி வரிகள் இப்படி முடியும்... ‘அத்து விட்ட பிறகும் அவளுக்குத் தோழியாய், அவள் பிள்ளைக்குக் காவலாய், அது பசியில் அழுது பாலுக்கு முண்டுகையில் தன் மார்பை ஏக்கமாகத் தடவும் பொன்ராசைப் பார்த்த தங்கக்கிளிக்கு மட்டுமா சரஞ்சரமாய்க் கண்ணீர் வரும்?’ என்று.

‘நான் ஆணல்ல’ என்று மறுத்தும், திருமணம் செய்து வைக்கப்பட்ட, தனக்குள் பெண் தன்மையைச் சுமந்துகொண்டிருக்கும் ஒரு திருநங்கை பற்றிய பதிவுதான் இந்த வரிகள். வாசகனின் மனதைக் குடைந்தெடுத்து, திருநங்கைகள் குறித்து சிந்திக்கத் தூண்டும் இந்த சிறுகதைக்கு எவ்விதத்திலும் குறையாத அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது ‘கோத்தி’ குறும்படமும்.

‘கோத்தி’ குறும்படம், கதைசொல்லலில் சோர்வடையச் செய்யாத உத்தியைப் பின்பற்றியுள்ளது. தன் வீட்டிற்கு பயணம் மேற்கொண்டிருக்கும் வழியில் தனது கதையைச் சொல்லத் தொடங்குகிறாள் வளர்மதி. அந்தப் பயணத்தில் சக பயணியாக நாமும் பயணித்த உணர்வைக் கொடுக்கிறது படம். குடும்பம், பயணம், திருநங்கைகளுடனான வாழ்க்கை என மூன்று வெவ்வேறு திசைகளில் கதை பயணிப்பதால், பார்க்கும் எவருக்கும் சோர்வு ஏற்படுவதில்லை.

குறும்படத்தின் இசை, இரண்டு வேறுபட்ட காலங்களை மிக நுட்பமாக நமக்கு உணர்த்துகிறது. அன்பு ஒவ்வொரு முறையும் தனக்குள் இருக்கும் பெண்மையை உணரும்போதும், பெண்மையை கட்டுக்கடங்காமல் வெளிப்படுத்தும்போதும், அதனைப் பின்தொடரும் இசை நம்மையும் அன்புவின் மீது வாஞ்சை கொள்ள வைக்கிறது. அன்பு வளர்மதியாக மாறும் வரை தமிழின் பாரம்பரிய இசைக்கருவிகளும், அதன் பின்னர் மேற்கத்திய இசைக்கருவிகளும் படம் முழுக்க பயன்படுத்தப்பட்டுள்ளன.

படம்: கோத்தி
இயக்கம்: சி.ஜெ.முத்துக்குமார்
நேரம்: 29.08 நிமிடங்கள்
ஒளிப்பதிவு: மா.பொ.ஆனந்த்
இசை: அனூப்
படத்தொகுப்பு: பி.ஜி.சக்தி
பார்க்க:   www.youtube.com/watch?v=rt9pyXV0tJw

இந்த உலகம் எப்போதும் இனவிருத்தியை நமக்கு போதித்துக்கொண்டே இருக்கிறது. அதற்குத் தகுதியில்லாதவர்களை மிக மோசமாக சமூகம் வஞ்சித்துக்கொண்டே இருக்கிறது.

தங்கர்பச்சானிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்திருக்கும் சி.ஜெ.முத்துக்குமார், சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட ஒரு குழுவை தன்னுடைய படைப்புகளில் பதிவு செய்ய வேண்டும் என்கிற உந்துதலால் ‘கோத்தி’ குறும்படத்தை இயக்கியுள்ளார். ஒரு படைப்பாளி, சமூகத்தின் ஒவ்வொரு இடுக்கிலிருந்தும் தனக்கான கருவைத் தேடிக்கொண்டே இருப்பான்.

சராசரிகள் கவனிக்க மறந்த ஒரு புள்ளியிலிருந்து அவனுக்கான தேடல் தொடங்கும். தெருக்களிலும் பயணங்களிலும் நம்மிடம் உதவி கேட்டு நிற்கும் திருநங்கைகளை நாம் அப்படியே மறந்துவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவோம். ஆனால் படைப்பாளி என்பவன், மனதளவில் அவர்களைப் பின்தொடர்ந்து, அவர்களுக்காக கலகக்குரல் எழுப்புவான். முத்துக்குமார் அதைத்தான் செய்திருக்கிறார். ‘கோத்தி’ என்றால், ‘சிறப்பாக’ என்று பொருள்.

(சித்திரங்கள் பேசும்...)
ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி