வரலட்சுமி என் பின்னால் இருக்கார்!



‘‘‘ஜீவா’ நல்லாயிருக்குன்னு எல்லோரும் சொல்றாங்க. ‘அவன் இவன்’ படத்துல என் நடிப்பைப் பாராட்டினதை விட, ‘ஜீவா’வுக்கு பேசினவங்க அதிகம். ஒண்ணுமில்லை, டைரக்டர் சுசீந்திரனின் நேர்மையான ஸ்கிரிப்ட் மனதைத் தொட்டது...

வாங்கிட்டேன்’’ - தயாரிப்பாளராகவும், நடிகராகவும் கடலினும் பெரிய பொறுமையுடன் காத்திருந்து வெற்றி பெற்றிருக்கிறார் விஷால். நட்பின் புள்ளியில் ஆரம்பித்து விரிந்தது குளிர்ப்பேச்சு!‘‘ ‘பூஜை’ டிரெய்லர்... பதறித் துடிக்க வைக்கிற பரபரப்பில் இருக்கு?’’

‘‘ஹரி சார் பத்திதான் தெரியுமே. அவர் ரூட்டே தனி. அவர் எப்பவும் எக்ஸ்பரிமென்ட் பண்றது கிடையாது. ஃபுல் மீல்ஸ்னு சொல்வாங்களே, அதுதான் ‘பூஜை’. அவரோட ஒர்க், மந்திரம் தந்திரமெல்லாம் கிடையாது. எந்த ஹீரோவையும் ‘பி அண்ட் சி’ வரைக்கும் இழுத்துட்டுப் போயிடுவார்.

கலெக்ஷன்னா அங்கே இருக்கிறவங்கதானே கை கொடுப்பாங்க. இந்த ஏரியாவில் ஸ்கோர் பண்றது எனக்குப் பிடிக்கும். ஏழு வருஷத்திற்குப் பின்னாடி அவர் படம் பண்றேன். படம் பார்த்தா அதிரடியிலும், வேகத்திலும் பின்னுது. சத்யராஜ், ராதிகா, ஸ்ருதின்னு கலகல கூட்டம். தீபாவளின்னா மக்களுக்கு ஜனரஞ்சகமா ஒரு படம் பார்க்கணும். அன்னிக்கு யாரும் ஆர்ட் சினிமா பார்க்க நினைக்கறதில்ல.

‘சுள்’ளுன்னு அந்தப் படம் இருந்தா நல்லாயிருக்கும். ‘பூஜை’ அந்த இடத்திற்கு வந்து நிற்கும். இதில் முதல் தடவையா என்கூட ஸ்ருதி நடிக்கிறாங்க. வெளியே இருந்து பார்த்த வரைக்கும் அவங்க மும்பை பொண்ணு. அங்கே இருக்கிற கலாசாரப்படி இருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, நேர்ல பார்த்தா அச்சு அசல் தமிழ்ப் பொண்ணு. கமர்ஷியல் படத்தில் அழகான ஹீரோயின் எதிர்பார்ப்பாங்க. ஹரி சார் இதுவரைக்கும் எடுத்த படங்கள்லயே அருமையான காதல் ட்ராக் இதில்தான் இருக்கு. தீபாவளி சந்தோஷத்திற்கு ‘பூஜை’ ஈடு கொடுக்கும்!’’‘‘இரண்டு வருஷத்திற்கு முன்னாடி தடுமாறிக்கிட்டு இருந்தீங்க. இப்ப பார்த்தால் புரொடியூசரா எழுந்து நிற்கிறீங்க..?’’

‘‘வேடிக்கை இல்லை. நானே நினைச்சுப் பார்க்கலை. யாரோ சொல்லித்தான், நான் சினிமாவுக்கு வந்து 10 வருஷம் ஆச்சுன்னு புரிஞ்சது. நிறைய ஏற்ற இறக்கங்களைப் பார்த்திருக்கேன். காலேஜ்னா அங்கே படிக்கிற கோர்ஸைத்தான் கத்துக்கலாம். ஆனா, சினிமாவில் முழு வாழ்க்கையையே கத்துக்கலாம். வெற்றியும், தோல்வியும், தர்ற பாடங்கள் அவ்வளவு இருக்கு. தோல்விங்கிறது ஏதோ ஒரு தருணத்துல எல்லா நடிகர்களுக்கும் நிகழ்றதுதான். அதிலிருந்து சில பேர் மீண்டு வருவாங்க; பல பேர் பின் வாங்கியிருக்காங்க.

இன்னும் சில பேர் கதவு தானாக ஒருநாள் திறக்கும்னு காத்துக்கிட்டே இருப்பாங்க. புரொடியூசர் ஆனது, ஆடியோ நிறுவனம் ஆரம்பிச்சது, படங்களை வாங்கி வெளியிட்டது... எல்லாத்துக்கும் காரணம் இருக்கு. என்னை ஏதோ ஒண்ணு அழைச்சிட்டுப் போகுது. பெருசா திட்டம் போடுறது கிடைக்காது. வெற்றி பெறுகிற முடிவுகளை திடீர்னு எடுத்திருக்கேன். ஆனா, வெற்றிக்கும் தோல்விக்கும் என்னால் காரணம் சொல்ல முடியலை!’’ ‘‘ஒரு சமயம் விஜய் அளவுக்குப் பேசப்பட்டீங்க...’’

‘‘ஒவ்வொரு சமயத்திலும் ஒரு நடிகர் அலாரம் அடிக்கிற மாதிரி வந்து நிற்பார். எல்லாரும் சுதாரிப்பாங்க. நாம ஸ்டெடியாக இருக்கோம்ங்கிற இடம் கொஞ்சம் அசைஞ்சு கொடுக்கும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி சிவகார்த்திகேயன் வளர்ச்சி அப்படி மிரட்டுச்சு. எல்லோரும் கொஞ்சம் பயந்தாங்க...

சும்மா மூடி மறைக்கிற விஷயம் இல்லை இது. நான் விஜய்க்கு போட்டியா வர்றேன்னு நான் சொல்லாமலே எல்லாரும் சொன்னது நிஜம். என் நோக்கம் இவரைத் தாண்டணும், இவரை விட அதிகம் பிஸினஸ் பண்ணணும்னு எதுவுமே இல்லை. என் போக்குல போறேன். போற வரைக்கும் போவோம்...’’‘‘திடீர்னு மியூசிக் நிறுவனம் ஏன்?’’

‘‘கோபம் வந்தது. நியாயமான கோபம். ஆரம்பிச்சிட்டேன். நியாயமா கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் ‘இவ்வளவுதான்... மியூசிக் செத்துப் போச்சு’ன்னு ஒரு கணக்கு சொன்னாங்க. அது இல்லைனு நிரூபிக்கத்தான் இந்த முயற்சி. உண்மையான விலையை தயாரிப்பாளர்களுக்கு காட்டுற முயற்சிதான் இது.

 வியாபாரத்தில் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தயாரிப்பாளர்களை பந்தாட்டம் ஆடுகிற முயற்சிக்கு என் வரைக்குமாவது முற்றுப்புள்ளி வச்சேன். திருட்டு விசிடி, ஆடியோ விற்பனை இல்லை, தியேட்டருக்கு ஜனங்க வரலைன்னு பல காரணங்களைச் சொல்லி, தயாரிப்பாளர்களுக்கு எதுவும் கிடைக்கலை.

நான் ஆடியோ தொடங்கியது வியாபாரம் கிடையாது. ஆராய்ச்சி மணி. பூனைக்கு மணி கட்டுகிற வேலை. இதே மாதிரி ஓவர்சீஸ் வியாபாரத்திலும் ஆராய்ச்சி பண்ண இறங்கியிருக்கேன். கவுன்சிலில் கூட, ‘ஒற்றுமையா இருந்தால் கொஞ்சமாவது சம்பாதிக்கலாம்’னு சொன்னேன். அதை அங்கே சொல்லக்கூட கூச்சமா இருக்கு. அங்கே நம்மளை விட அனுபவசாலிகள் இருக்காங்க. ‘மாற்றம் வேணும், மாற்றம் வேணும்னு கேட்காதே... அந்த மாற்றமா நீயே ஆகிடு’ன்னு காந்தி சொல்வார். அதான் மாறிட்டேன்!’’‘‘ ‘ஐ’, ‘கத்தி’ வர்ற சீஸனிலும் பயப்படாமல் ‘பூஜை’யை தீபாவளிக்கு இறக்குறீங்களே!’’

‘‘என் குழந்தையும் நல்லா படிச்சிருக்கு. எல்லாரும் சேர்ந்து பரீட்சை எழுதட்டும். நான் இப்ப படங்களை ரிலீஸ் தேதி சொல்லிட்டுத்தான் ஆரம்பிக்கிறேன். அதன்படி, ‘பூஜை’ தீபாவளி ரிலீஸ். அவ்வளவுதான். ‘பூஜை’, ‘ஐ’, ‘கத்தி’ எல்லாம் சேர்ந்த மாதிரி ஜெயிச்சா சந்தோஷம்தான். நான் எதுவும் வீம்புக்கு செய்யலையே... சொல்லிட்டுத்தானே ஆரம்பிச்சேன்! இப்பவே சொல்லியிருக்கேன்... என் அடுத்த படம் ‘ஆம்பளை’, பொங்கல் ரிலீஸ்!’’‘‘சிரிச்சுக்கிட்டே வெளிப்படையா பேசுறீங்க. வரலட்சுமியோட காதலை மட்டும் மறைக்கிறீங்க!’’

‘‘எல்லாத்தையும் சொல்றதுக்கு ஒரு நேரம் வரணும். அப்ப எல்லாருக்கும் சொல்றேன்!’’‘‘இது பொதுவான பதில்...’’‘‘ஒரு சினிமா எடுக்கிறதுக்குக்கூட ஸ்கிரிப்ட், நேரம், காலம் பார்த்துட்டு செய்றோம். வாழ்க்கைன்னா சும்மாவா? படங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும்போது, வாழ்க்கையோட அடுத்த கட்டம் பத்தி எவ்வளவு யோசிக்கணும்!’’
‘‘கல்யாணம்னு பொறுப்பு ஏத்துக்க பயமா?’’

‘‘கல்யாணம்னா கொஞ்சம் ‘பக்’னுதான் இருக்கு. இன்னும் அதற்கான மைண்ட் செட் வரலை. வந்துட்டா... கல்யாணம், அதுவும் ரெண்டு வருஷம் கழிச்சுத்தான்!’’ ‘‘உங்களைப் பார்த்தாலே வரலட்சுமி பின்னாடி வர்றாங்களான்னு தேடுறாங்க. சும்மா சொல்லாதீங்க... சாதாரண ஃப்ரண்ட்ஷிப் இது கிடையாது...’’‘‘சின்ன வயதிலிருந்து வரூ ஃப்ரெண்ட். உண்மைதான்... என் பின்னாடிதான் இருக்காங்க!’’ ‘‘கல்யாணம்..?’’‘‘டைம் வரும்போது சொல்றேனே!’’

- நா.கதிர்வேலன்