வாசல்



ஆசாரி சற்றே திகைத்துத்தான் போனார். வீட்டைக் கட்டுகிறவர்கள் முன்வாசல் கதவுக்கு மட்டும் கொஞ்சம் மெனக்கெடுவார்கள்தான். ஆனால் இந்த அளவுக்கா? அசல் தேக்கு மரக் கட்டையில் மிக நுண்ணிய வேலைப்பாடுகளோடு மிக மிக கனமான வாசல் கதவை அமைக்கச் சொல்லியிருந்தார் வீட்டு உரிமையாளர். அந்த வீட்டின் மொத்த மர வேலைப்பாடுகளையும் சேர்த்தால் கூட அந்த ஒரு கதவின் செலவுக்கு ஈடாகாது. எதற்காக இந்த வெட்டிச் செலவு?

கதவைச் செய்து மாட்டியபோது, வீட்டு உரிமையாளரிடம் கேட்டே விட்டார் ஆசாரி.‘‘அதுவா? என்னைத் தேடி வீட்டுக்கு நிறைய பேர் வருவாங்க. நம்ம தொழில் அப்படி. அவங்க காலிங் பெல்லை அடிச்சிட்டு காத்திருக்கும்போது நாம வந்து திறக்க கொஞ்ச நேரம் லேட்டானாலும் மனசுல லேசா வெறுப்பு வரும். ஆனா, இப்படிப்பட்ட கதவு வச்சா, நாம திறக்குற வரை இந்த வேலைப்பாடுகளை ரசிச்சிக்கிட்டு இருப்பாங்க.

 மனசு லேசாகும். அதுக்கப்புறம் நம்ம வீட்டுக்குள்ள அவங்க சந்தோஷமாத்தான் நுழைவாங்க. பேச்சும் இனிமையா ஆரம்பிக்கும். அது மட்டுமில்ல... உங்களுக்கும் உங்களோட இந்தப் பாரம்பரியக் கலைக்கும் இது விளம்பரம். பார்க்கிறவங்க எல்லாரும் ‘யார் செய்தது’ன்னு கேட்பாங்க இல்லையா?’’ என்றார் அவர். ஆசாரி வாயடைத்து நின்றார்.     

ஏ.லோகநாதன்