அவசரம்



ரவி அந்த திருமண மண்டபத்துக்குள் நுழைந்தான். உறவினர் வீட்டுக் கல்யாணம் அது. அங்கேயே ரவிக்குப் பெண் பார்ப்பதாக ஏற்கனவே முடிவாகி, பெண் வீட்டாரும் வந்திருந்தார்கள். ரவியின் அப்பா சண்முகம் அவனைப் பெருமையாக அறிமுகப்படுத்தினார்.‘‘என் நாலாவது பையன் ரவி! என் கம்பெனிலதான் வேலை பார்க்கறான்!’’ நிமிர்ந்து பார்த்த பெண் வீட்டார் அதிர்ந்தனர். காரணம், காக்கிச் சீருடையில் இருந்தான் ரவி. பார்க்க வந்த பெண், முகத்தை உம்மென வைத்துக் கொண்டாள்.

‘‘என்னங்க, இந்த சண்முகம் எவ்வளவு பெரிய தொழிலதிபர். அவர் பையன் அவர் கம்பெனியிலயே வேலை பார்க்கலாம். அதுக்காக இப்படியா அடிமட்டத் தொழிலாளியா வச்சிருப்பார்? இவரெல்லாம் இந்தப் பிள்ளைக்கு என்ன சொத்தைக் கொடுத்துடப் போறார்?’’ எனத் தங்களுக்குள் அவர்கள் பேசித் தயங்கியது சண்முகத்துக்கே கேட்டது. புன்னகையால் விடைபெற்றுக் கிளம்பியது சண்முகம் குடும்பம். அதன் பிறகுதான் பெண் வீட்டாரின் நெருங்கிய நண்பர் ஒருவர் ஆதங்கக் குரலெடுத்தார்...

‘‘அவசரப்பட்டுட்டீங்களே... அந்தப் பையன் ஃபாரின்ல எம்.பி.ஏ படிச்சவர். கம்பெனிக்கே அவர்தான் வருங்கால எம்.டி. தொழில்ல எல்லா நுணுக்கத்தையும் கத்துக்கணும்னுதான் இப்ப டிரெயினிங்ல இருக்கார். புரிஞ்சுக்காம வார்த்தையை விட்டுட்டு நல்ல வரனை இழந்துட்டீங்க!’’தாமதமாக வருந்தினார்கள் அவர்கள்.

காயத்ரி