ப்ரியா ஆனந்த் Feeling Good



பிடிச்சவங்க கூடதான் நடிக்கிறேன்!

அவ்வளவு பாசமாக, ‘அண்ணா’ என்றழைத்து, நம் ஆதங்கத்தைக் கிளப்புகிறார் ப்ரியா ஆனந்த். ‘வை ராஜா வை’ படத்திற்காக கௌதம் கார்த்திக்குடன் ஜப்பானில் டூயட் ஷூட் முடித்த எனர்ஜி தெறிக்கிறது ப்ரியாவின் பேச்சில்..!

‘‘ ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’, ‘வணக்கம் சென்னை’, ‘வை ராஜா வை’ன்னு லேடி டைரக்டர்களின் முதல் சாய்ஸ் ஆகிட்டீங்க... எப்படி?’’

‘‘சந்தோஷமான விஷயம்தானே! பெண் இயக்குநர்களோட படங்கள்ல எனக்கு நடிப்புக்கான ஸ்கோப் அதிகம் இருக்கு. அவங்க பெண் கேரக்டர்களை ரொம்ப மரியாதையாவும், கண்ணியமாவும் வடிவமைப்பாங்க. ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ல ஸ்ரீதேவி மேம் கூட நடிச்சது எனக்கு வாழ்நாள் சாதனை மாதிரி. டைரக்டர் கௌரி ஷிண்டே அதை அவ்வளவு நல்லா பண்ணியிருந்தாங்க. கிருத்திகா மேம் ரொம்ப ஸ்பெஷல். ‘எதிர்நீச்சல்’ல என் கேரக்டர் பார்த்துட்டு ஐஸ்வர்யா தனுஷ் மேம் பாராட்டோடு அடுத்த பட சான்ஸும் கிடைச்சது!’’
‘‘ ‘வை ராஜா வை’...’’

‘‘டீசன்டான சப்ஜெக்ட். காலத்துக்கேத்த காமெடி சென்ஸ் உள்ள படம். விவேக், சதீஷ், மனோபாலான்னு நிறைய காமெடி ஸ்பெஷலிஸ்ட்ஸ் கலக்கியிருக்காங்க. அவங்களோட சிங்கப்பூர்ல செவன் ஸ்டார் சொகுசு கப்பல்ல ஷூட்டிங், ட்ராவல் எல்லாமே ஸ்வீட் ப்ளஸ் த்ரில் அனுபவம். சிங்கப்பூர் தவிர, வியட்நாம், தாய்லாந்து எல்லாம் போனோம்.

ஜப்பான்ல ஸாங் ஷூட் பண்ணினப்ப கௌதமை ஜப்பான் நாட்டுப் பையன்னு அங்கே உள்ள பொண்ணுங்க நினைச்சிட்டாங்க. ஸோ, அவருக்கு அங்கே அவ்வளவு ரசிகைகள். ‘ஷூட்டிங் எப்போ முடியும், எப்படி கௌதமை சந்திக்கலாம்’னு நிறைய பொண்ணுங்க வெயிட் பண்ணிட்டிருப்பாங்க. அதனால, கௌதம் செம குஷி மூட்லதான் இருந்தார்!’’

‘‘உங்களோட நடிக்கிற ஹீரோக்கள் எல்லாருமே உங்க திக் ஃப்ரெண்ட் ஆகிடுறாங்களே... எப்படி?

‘‘யாரோடவும் ஈஸியா பழகிடுறது என்னோட ப்ளஸ். ஒரு நாள் ஷூட்டிங்னா, எட்டுல இருந்து பத்து மணி நேரம் ஸ்பாட்டுல அந்த யூனிட்டோட இருக்க வேண்டியிருக்கு. விக்ரம் பிரபு கூட ‘அரிமாநம்பி’ நடிச்சேன். இனிமையான ஜென்டில்மேன் அவர். கௌதம் கார்த்திக்கை ஹீரோவா அறிமுகமாகுறதுக்கு முன்னாடியே தெரியும். அதர்வாவும் நல்ல ஃப்ரெண்ட்தான். பிடிச்சவங்க கூட நடிக்கிறதால, ஆட்டோமெட்டிக்கா எனர்ஜி வந்திடுது பாஸ்!’’

‘‘மற்ற ஹீரோயினுக்கெல்லாம் சான்ஸ் வாங்கிக் கொடுக்கறீங்களாமே... அவ்ளோ நல்லவங்களா நீங்க?’’

‘‘விசாகா என்னோட சின்ன வயசு ஃப்ரெண்ட். அபுதாபி, டெல்லியில் படிச்சு வளர்ந்த பொண்ணு. ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்துல என் ஃப்ரெண்டா கெஸ்ட் ரோல் ஒண்ணு இருந்தது. அந்த கேரக்டருக்கு விசாகாவை டைரக்டர்கிட்டே ரெக்கமண்ட் பண்ணி, சான்ஸ் வாங்கிக் கொடுத்ததில் எனக்கு சந்தோஷம்தான். சென்னையில அவளுக்கு வேற யாரும் இல்லை. ஸோ, இங்கே வந்தால் எங்க வீட்டுலதான் தங்குவா. நட்புல இதெல்லாம் சகஜம்தானேப்பா!’’

‘‘நீங்க நம்ம ஊர் பொண்ணா, அமெரிக்க பொண்ணானு குழப்பம் இருந்துக்கிட்டே இருக்கு..?’’

‘‘சென்னையில நான் என் பாட்டி கூட இருக்கேன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். என்னோட அப்பா, அம்மா அமெரிக்காவில் இருக்கறதால யு.எஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஸ்கூல் படிப்பு சென்னையில தான். காலேஜ், யு.எஸ்ல உள்ள யுனிவர்சிட்டியில. நான் இன்னிக்கு என்ன பண்றேன்... எங்கே ஷூட்டிங்...

என்ன கிசுகிசு மீடியாவில வந்திருக்குன்னு உடனுக்குடனே எங்க வீட்ல அப்டேட் பண்ணிடுவேன். சென்னை எனக்கு ரொம்ப ஸ்பெஷல். எனக்குப் பிடிச்ச விஷயங்கள் நிறைய இங்க இருக்குது. ரசமலாய், பிரியாணி, அரிசி பாயசம்னு அடுக்கிக்கிட்டே போகலாம். நான் சென்னை பொண்ணுங்க!’’‘‘தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல்?’’

‘‘சாரிண்ணா, தீபாவளி, நியூ இயர்னு எந்த பண்டிகையையுமே நான் செலிப்ரேட் பண்றதில்லை. பட்டாசு வெடிக்கறதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காது. பண்டிகைக்காக புது டிரஸ் எடுக்கற பழக்கமும் என்கிட்ட இல்லை. ஃபாரின் போறப்ப, சூப்பரா காஸ்ட்யூம்ஸ் கிடைச்சதுனா, அப்படியே அங்கேயே ஷாப்பிங் பண்ணிக்குவேன். அவ்வளவுதான்!’’

‘‘ரொம்பவும் எதிர்பார்த்த ‘இரும்புக்குதிரை’ சரியா போகலைன்னு வருத்தமிருக்கா?’’

‘‘சினிமாங்கறது ஒரு குதிரை ரேஸ் மாதிரிதானே. இது ஜெயிக்கும், இது ஜெயிக்காதுன்னு என்னால எப்படி கணிக்க முடியும்? எல்லா படங்களுக்கும் ஒரே உழைப்பைத்தான் கொடுத்து நடிக்கறோம். அது ஓடலையேனு கவலைப்பட்டு என்ன பிரயோஜனம்? அடுத்து அடுத்துன்னு ஓடிக்கிட்டே இருக்கறதுதானே வாழ்க்கை!’’

- மை.பாரதிராஜா