சலுகை



‘‘மெனு கார்டுல விலையெல்லாம் கூடுதலா இருக்கு... ஆனா, இவ்வளவு கம்மியா பில் வந்திருக்கு.

 இந்த சர்வர் தவறுதலா போட்டிருப்பானோ? இல்ல... நாம கார்ல வெள்ளையும் சொள்ளையுமா வந்திறங்குனதைப் பார்த்துட்டு, ‘யாரோ பெரிய கை... இவரைக் கைக்குள்ள போட்டுக்கலாம்’னு நினைக்கிறானோ! இதை அனுமதிக்கக் கூடாது’’ - தனக்குள் முடிவெடுத்துக் கொண்ட ராமலிங்கம், சைகையால் சர்வரை அழைத்தார்.

 ‘‘மெனு கார்டுபடி நானும் டிரைவரும் சாப்பிட்டதுக்கு முன்னூத்தி இருபது ரூபாய் வரணும். ஆனா, ‘பில்’ இருநூத்தி நாற்பதுதான் வந்திருக்கு!’’ எனப் புருவத்தை உயர்த்தினார்.

சர்வர் தயங்கித் தயங்கி மெதுவாகச் சொன்னான்...“சார், இந்த ஹோட்டல்ல ஊனமுற்றவர்களுக்கு இருபத்தஞ்சு சதவீதம் சலுகை உண்டு. நீங்க நடந்து வரும்போதே பார்த்தேன். அதான்...’’ - இழுத்தான்.ராமலிங்கத்தின் முகம் மாறியது.‘‘இதோ பாருப்பா... நான் இந்த ஊனத்தோடு தான் முன்னேறி ஓஹோன்னு வாழ்ந்துட் டிருக்கேன்.

பொருளாதாரத்துல இவ்வளவு பலமா இருக்கிற எனக்கு எதுக்கு சலுகை?’’ என்றவர், ‘‘பில்லை மாத்திக்கொண்டு வா...’’- என உரக்கச் சொன்னார். சரியான பில் தொகையைச் செலுத்திவிட்டு சாய்ந்து சாய்ந்து நடந்து சென்றவரின் திசைக்கு சல்யூட் அடித்தான் சர்வர்.

கே.எம்.சம்சுதீன்