ரஜினிக்கு காமெடி பன்ச் அதிகம்!



சந்தானம் உடைக்கும் லிங்கா சீக்ரெட்ஸ்

சந்தனக் கடத்தல்காரர்களைக் கூடப் பிடிச்சிடலாம்... சந்தானத்தைப் பிடிப்பதுதான் இப்போ கஷ்டம். அதுவும் அவரின் லேட்டஸ்ட் ப்ராஜெக்ட், ரஜினியின் ‘லிங்கா’. ‘‘அதில் கமிட் ஆனதில் இருந்தே நாட் ரீச்சபிள் ஆகிட்டீங்களே!’’

என்றால், ‘‘ஊர்ல பத்து, பதினைஞ்சு மொபைல் வச்சிருக்கவனுக்கெல்லாம் காலே வர மாட்டேங்குது. ஒரே ஒரு மொபைல் வச்சிட்டு, நான் படுற அவஸ்தை... அய்யய்ய!’’ என அழகாக சமாளிக்கிறார். முயன்றாலும் சந்தானத்தின் பேச்சில் ‘ஜாக்கிரதைத்தனம்’ இருக்காது. ஜாலியும் கேலியும்தான் ஜலதரங்கம் ஆடும்...

‘‘ ‘லிங்கா’வில் உங்களை ரஜினிதான் சிபாரிசு பண்ணினாராமே..?’’

‘‘அதெல் லாம் இல்ல... ஒரு படத்தோட ஸ்கிரிப்ட் ரெடியானதும், அதுல யாரெல்லாம் நடிக்கலாம்னு டைரக்டர் உட்பட ப்ரீ ப்ரொடக்ஷன் டீம்தான் முடிவு பண்றாங்க. அப்படித்தான் நானும் இந்தப் படத்துக்குள்ள வந்திருக்கணும். கே.எஸ்.ரவிக்குமார் சார் போன் போட்டுக் கூப்பிட்டதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. ரஜினி சாரோட முதல் முதலா ‘குசேலன்’ல நடிச்சிருந்தேன்.

அடுத்து, ‘எந்திரன்’ல இன்னும் கொஞ்சம் பெரிய கேரக்டரா கிடைச்சது. ஆனா இப்ப... ஆர்யா, ஜீவா காம்பினேஷன்ல நடிக்கிற மாதிரி ‘லிங்கா’வில் ரஜினி சாரோட ஃபுல் லெங்க்த் காமெடி பண்ணியிருக்கேன். அடிப்படையில ரஜினி சாரோட தீவிர ரசிகனான எனக்கு இது பெரிய கிஃப்ட்!’’

‘‘கே.எஸ்.ரவிக்குமார் ரொம்ப டென்ஷனான ஆள்னு சொல்வாங்களே?’’

‘‘ஃபேக்ட்டு.. ஃபேக்ட்டு... ஃபேக்ட்டு... நானும் பயந்துட்டேதான் போனேன். ஏன்னா, ‘கேட்கிறவன் கேனயனா இருந்தா கேரம் போர்டை கண்டுபிடிச்சவன் கே.எஸ்.ரவிக்குமார்னு சொல்லுவியே’ன்னு அவரை நானே கலாய்ச்சிருக்கேன். அப்போ, ‘என்னை ஏன்டா கலாய்க்கிறான்’னு அவர் டென்ஷன் ஆனதா கேள்விப்பட்டேன். உண்மையில அவர் ரொம்ப நல்ல மனிதர். ‘இதுதான் இன்னிக்கு எடுக்கப் போற சீன்...

டயலாக்’னு அவர் சொன்னதும். ‘சார் ஒரு ஆப்ஷன் இருக்கு... இப்படி பண்ணிக்கலாமா?’னு பவ்யமா கேப்பேன். ‘பிரமாதம்’னு தட்டிக் கொடுப்பார். அவருக்கு என்னை ரொம்பப் பிடிச்சுப் போச்சு. ஆனா, எல்லாத்தையும் கணக்குல வச்சிருக்கார். ஒருநாள் நான் வழக்கம் போல, ‘சார் இப்படி வச்சிக்கலாமா?’னு கேக்க, ‘அதானே... நான் சொன்ன டயலாக்கை நீ என்னிக்கு பேசியிருக்கே’ன்னு கலாய்ச்சி விட்டுட்டார்!’’

‘‘ ‘லிங்கா’ ரஜினி எப்படி?’’

‘‘ஆர்யா, சிம்பு, விஷால்கிட்டல்லாம் எனக்கு இருக்குற அதே கெமிஸ்ட்ரி ரஜினி சாரோட இன்னும் தூக்கலா வந்திருக்கு. முதல் நாள் அவரை ஸ்பாட்ல பார்த்தே அசந்துட்டேன். செம ஃப்ரெஷ், செம ஸ்டைல்... யூத் லுக்ல ரஜினி சார் கலக்கியிருக்கார். ஃப்ரீ டைம்ல ஆன்மிகம் பத்தி அவ்வளவு விஷயங்கள் பேசுறார்.

பிரமிப்பா இருந்தது. ஆன்மிகத்துல நான் கேக்குற அப்பாடக்கர் கேள்விக்கெல்லாம் எளிமையா பொறுமையா விளக்கம் சொல்லி புரிய வைச்சார். ஒரு நாள் முக்தி அடையறதைப் பத்திப் பேசும்போது, ‘நீங்க முக்தி அடைஞ்சிட்டீங்களா’ன்னு கேட்டுட்டேன். ‘ஏன்டா கேட்டோம்’னு ஃபீல் பண்ற அளவுக்கு, அன்னிக்கு பூரா எல்லாரையும் கூப்பிட்டு அதைச் சொல்லி, ஓட்டு ஓட்டுனு ஓட்டிட்டார்...’’

‘‘அவ்வளவு ஜாலியான ரஜினியா?’’

‘‘பின்ன..? நான்தான் எல்லாரையும் ஓட்டி நீங்க பார்த்திருப்பீங்க. என்னை மாதிரி மேனரிசம் காட்டி ரஜினி கலாய்ச்சார்னா நம்புவீங்களா? ரஜினி சார் மூடுக்கு வந்தார்னா அந்த யூனிட்டையே கலகலப்பா ஆக்கிடுவார். கே.எஸ்.ரவிக்குமார் சூப்பர் ஸ்டாரை வச்சி ஏற்கனவே நிறைய படங்கள் பண்ணியிருக்கறதால, அவர் டைரக்ஷன்ல ரொம்ப கம்ஃபர்டபிளா ஃபீல் பண்றார் ரஜினி. ரெண்டு பேரும் ஜாலி மூட்ல இருக்குறதையெல்லாம் பார்க்கக் கொடுத்து வச்சிருக்கணும்!’’

‘‘அனுஷ்கா..?’’

‘‘பேசிக்காவே அனுஷ்கா யோகா டீச்சர்ங்கறதால... நான் அவங்களை ‘குருஜி’ன்னுதான் கூப்பிடுவேன். தமிழ்ல அவங்க அறிமுகமான ‘ரெண்டு’, ‘வானம்’, ‘தாண்டவம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘சிங்கம் 2’... இப்படி அவங்களோட நிறைய நடிச்சிருக்கேன். அவங்களும் ஆன்மிகம் நிறைய பேசுவாங்க. ஒரு தடவை அவங்க சொன்ன ஒரு ஆன்மிக மேட்டர் உண்மையான்னு எனக்கு டவுட் வந்துடுச்சு. நேரா ரஜினி சார்கிட்ட சொல்லி செக் பண்ணேன். ‘நோ... நோ... அது தப்பு தப்பு’ன்னு தீர்ப்பு சொல்லிட்டார் சூப்பர் ஸ்டார். அன்னில இருந்து அனுஷ்கா பேரை ‘ஃப்ராடு குருஜி’னு மாத்திட்டேன். மொத்தத்துல அவங்க ரொம்ப ஃப்ரெண்ட்லி குருஜி!’’

‘‘ரஜினி சார் பன்ச் டயலாக்ல கொஞ்சம் சொல்லுங்களேன்?’’

‘‘இதுல ரஜினி சாருக்கு காமெடி பன்ச்சும் அதிகம். பன்ச் எல்லாமே கதை தொடர்பா இருக்கறதால, அதை இப்பவே சொன்னா சரியா இருக்காது. வேணா நான் பேசின பன்ச் ஒண்ணை சொல்றேன். ஒரு சீன்ல ரஜினி சார் எல்லாரையும் ஒரு உயரமான மரத்துல ஏத்தி விடுவார். ஷூட்டிங் கேப்ல எல்லாரையும் ‘ஏறு... ஏறு...’ன்னு அவர் கீழிருந்து சொல்லிக்கிட்டிருக்க, ‘என்ன சார், கண்டக்டர் மாதிரியே ஏறு... ஏறு...ங்கறீங்க?’னு கமென்ட் அடிச்சேன். ‘இது நல்லா இருக்கே... சூப்பர் சூப்பர்’னு அவரே பாராட்டினார். அது படத்துலயும் வருது!’’

‘‘இப்ப நிறைய காமெடியன்ஸ் வந்திருக்காங்க. யார் நல்லா பண்றாங்க?’’

‘‘கருணாகரன் நல்லா பண்றார். ‘லிங்கா’வில் அவரும் இருக்கார். ‘எப்பவும் ஷாட் போய்க்கிட்டு இருக்கற மாதிரியே திருதிருன்னு முழிக்கிறாரே’ன்னு அவரை ரஜினி சாரே கிண்டல் பண்றார்.’’
‘‘ஹீரோவா அடுத்த ப்ளான்?’’

‘‘கதை ரெடி. எனக்கு காமெடி ஸ்கிரிப்ட்ல வொர்க் பண்ணிட்டிருந்த முருகன், ஆனந்த் ரெண்டு பேர் டைரக்டர்ஸ். ஒரு ஹீரோயினா ஆஷ்னா நடிக்கிறாங்க. இன்னொருத்தர் தேடிட்டிருக்கோம். டைட்டில்  முடிவாகலை. ஹீரோவைத் தாண்டியும் போகுற எண்ணமிருக்கு. அதாவது, டைரக்ஷன். நண்பர்கள் உதயநிதிகிட்டயும் ஆர்யாகிட்டயும் கதை சொல்றதா சொல்லியிருக்கேன். பார்க்கலாம்!’’
‘‘இந்த தீபாவளிக்கு என்ன ப்ளான்?’’

‘‘ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸோடு கொண்டாடப் போறேன். ஸ்கூல் படிக்கும்போது பட்டாசுன்னா அவ்வளவு இஷ்டம். ஆனா, வாங்க காசிருக்காது. வெடிக்காத பட்டாசை எல்லாம் பொறுக்கி எடுத்து கொளுத்தறோம்னு ஸ்கூல் லேபையே ஒரு தடவை கொளுத்திட்டோம். இன்னிக்கு கடவுள் என்னை நல்ல நிலையில வச்சிருக்கறதால, ஃப்ரெண்ட்ஸ்களுக்கு பட்டாசு வாங்கிக்கொடுத்து, பத்திரமா வெடிக்கச் சொல்லப் போறேன்!’’

‘‘ஹீரோவாகிட்டதால காமெடியனா ஒரு கேப் விழுந்துடுச்சா?’’

‘‘அப்படியெல்லாம் இல்லையே... உதயநிதி சாரோட ‘நண்பேன்டா’, ‘சிறுத்தை’ சிவா டைரக்ஷன்ல அஜித் சார் நடிக்கும் படம், ராஜேஷ் டைரக்ஷன்ல ஆர்யாவோட ஒரு படம், விஷாலோட ‘ஆம்பள’ன்னு எல்லா ஹீரோக்கள் கூடவும் நடிச்சிட்டிருக்கேன். பணத்துக்காக நான் நடிக்கல. பெட்டி நிறைய பணத்தோடு கால்ஷீட் கேட்டு நின்ன நிறைய பேரை நான் திருப்பி அனுப்பியிருக்கேன்.

 நூறு சதவீதம் முழு உழைப்பையும் கொடுக்க முடியும்ங்கற கேரக்டர்ல மட்டும் பண்றேன். தொடர்ந்து அதிக நாட்கள் கால்ஷீட் கேட்டு வர்ற படங்களை என்னால பண்ண முடியல. ‘கலகலப்பு’ படத்துக்கு மொத்தமே அஞ்சாறு நாட்கள்தான் ஆச்சு... ஆனா, திருப்தியா இருந்தது. யாரோட வாய்ப்பையும் யாரும் பறிச்சிக்க முடியாது. வடிவேலு வடிவேலு தான். சந்தானம் சந்தானம்தான்!’’

- மை.பாரதிராஜா