நெருப்பில் பொல்யூஷன் இல்லை!



விளக்கு பூஜையில் கின்னஸ் முயற்சி

‘‘நெருப்பைப் பார்த்து பயந்த வரைக்கும் மனுஷன் காட்டு விலங்குதான். என்னைக்கு அதைக் கையாளக் கத்துக்கிட்டானோ அன்னைக்குத்தான் அவன் மனுஷனானான். அப்படி நாம மனுஷனானதுக்கு அடையாளம்தான் விளக்கு.

அதனாலதான் எல்லா கலாசாரத்துலயும் மதத்துலயும் விளக்குக்கு ஒரு முக்கிய இடம் இருக்கு!’’ - ஆன்மிகமும் தத்துவமும் பின்னிப் பிணைய பேசுகிறார் விசாலாட்சி அம்மா. தமிழகத்தின் திருவிளக்கு பூஜை ஸ்பெஷலிஸ்ட். இவரின் மெகா திருவிளக்கு பூஜைகள் கின்னஸ் வரை கூட போயிருக்கின்றன. தன் வாழ்வு முழுவதையும் இந்த ஜோதி வழிபாட்டுக்காகவே அர்ப்பணித்த இவருக்கு, இப்போது 75 வயது. 

‘‘இப்ப தண்ணியில, காத்துல, பூமியில அசுத்தம் கலந்துட்டதா சொல்றாங்க. ஆனா, நெருப்புல பொல்யூஷன் வரவே முடியாது. விளக்குச் சுடர் மாதிரி சுத்தமானது எதுவுமில்ல. அதனால தான் விளக்குப் பூஜை எல்லா மனுஷங்களுக்கும் பொதுவானது. சாதி, மதத்திற்கெல்லாம் அப்பாற்பட்டது!’’ - என்கிறவர், திருவிளக்கு பூஜைக்காக தமிழகம் முழுவதும் பயணித்திருக்கிறார். கிருபானந்த வாரியாரே ‘திருவிளக்கின் செல்வி’ எனப் பட்டம் கொடுத்துப் பாராட்டியிருக்கிறார் இவரை.

‘‘எனக்கு பூர்வீகம் மதுரை. 12 வயசுலயே கோயில்கள்ல திருப்பாவை, திருவெம்பாவை பாடணும்னா முதல் ஆளா நிப்பேன். எங்க வீட்ல என்னோட சேர்த்து ஆறு பிள்ளைங்க. எங்க வீட்டுப் பக்கத்துல இருந்த சுந்தரராஜன் - ராஜம்மாள் தம்பதிக்கு குழந்தை இல்லாததால என்னைத் தத்தெடுத்து வளர்த்தாங்க. அவங்க மதுரையில 1954ம் வருடம், ‘திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி’யை ஆரம்பிச்சாங்க. காஞ்சி பெரியவர்தான் துவக்கி வச்சார்.

அப்பா அம்மா காலத்துக்குப் பிறகு இசைப்பள்ளி என் பொறுப்புல வந்துச்சு. அப்போ ஆரம்பிச்ச திருவிளக்குப் பூஜை, இன்னைக்கு வரை தொடருது. கல்யாணம், குடும்பம்னு சராசரி வாழ்க்கையைத் தேடலை. தமிழ்நாடு முழுக்க இதுவரை ஐயாயிரம் கோயில்கள்ல அழைப்பின் பேரில் திருவிளக்கு பூஜை செய்திருக்கேன். நான் தொடங்கின காலத்துல திருவிளக்கு பூஜையை சில பெரிய கோயில்கள்ல மட்டும்தான் நடத்துவாங்க. ஆனா, இப்ப அது பரவலாகியிருக்கு!’’ என்கிறார் விசாலாட்சி மகிழ்ச்சியாக.

ஏற்கனவே, 2008ல் இவர் நடத்திய 10008 விளக்கு பூஜை, கின்னஸ் சாதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால், கிடைக்கவில்லை. தற்போது 15 ஆயிரம் விளக்குகள் வைத்து செய்த மெகா பூஜை கின்னஸுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.‘‘சாதனைக்காக நான் திருவிளக்கு பூஜை நடத்தல. சமதர்மம், மனச்சாந்தி, மக்கள் நலன் வேண்டிதான் நடத்துறேன்!’’ - அன்பொழுக முடிக்கிறார் விசாலாட்சி அம்மா.

 பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்