கியா... இது இந்திய பார்பி!



‘‘பார்பி பொம்மைன்னா உலகத்துக்கே தெரியும். அது தவிர இத்தாலிக்கு ‘ஃபுல்லா’ பொம்மை, கொரியாவுக்கு ‘புல்லிப்’ பொம்மை, சீனாவுக்கு ‘சாரா’ பொம்மைனு ஒவ்வொரு நாட்டுக்கும் அடையாளமா ஒவ்வொரு பொம்மை இருக்கு.

ஆனா, 120 கோடி மக்கள் தொகை இருக்குற இந்தியாவுக்கு..? பொம்மைகளை மையப்படுத்தி நவராத்திரினு பண்டிகையே கொண்டாடுறோம்... நமக்குன்னு ஒரு பொம்மை வேண்டாமா? அதுக்காக உருவாக்கினதுதான் இந்த கியா!’’ என தன் பெருமைக்குரிய படைப்பை அறிமுகப்படுத்துகிறார் ஹிமா ஷைலஜா தீர்தாலா. பெரிய கண்கள், அடர் புருவம், கூரிய மூக்கு, வகிடெடுத்த கூந்தல் என அச்சு அசல் இந்திய டீன் ஏஜ் பெண்ணாகக் காட்சியளிக்கிறது இவரின் ‘கியா’ பொம்மை.

‘‘அடிப்படையில் நான் பி.இ எலக்ட்ரானிக்ஸ். யு.எஸ்., யு.கேனு எல்லா இடத்திலும் வேலை பார்த்துட்டேன். ஃபேஷன் டிசைனிங் என் ஆர்வ ஏரியா. துபாய் ஏர்போர்ட்ல ஒருமுறை பார்பி பொம்மைக்கு ஃபேஷன் டிரஸ் போட்டி நடத்தினாங்க. அதுல கலந்துக்கிட்டப்போ நம்ம ஊர் உடைகளை பார்பிக்கு போட்டுப் பார்த்தேன். செட் ஆகல. அப்பதான் ‘ஏன் நமக்கே நமக்குனு ஒரு பொம்மையை யாரும் உருவாக்கல?’னு யோசிச்சேன்.

வேலையை விட்டுட்டு ‘ஷெல் ஸ்டுடியோ’னு ஒரு நிறுவனத்தைத் தொடங்கினேன். அதன் தயாரிப்புதான் ‘கியா’. ‘கியா’ன்னா பறவையின் கூக்குரல்னு அர்த்தம். இந்தியப் பெண் குழந்தைகளோட க்ளோஸ் ஃப்ரெண்டா இந்த கியா நிச்சயம் ஒட்டிக்குவா!’’ என்கிற ஷைலஜா, ஐதராபாத்காரர். துவக்கத்தில் கியா பொம்மைகளையும் தெலங்கானா மற்றும் ஆந்திராவில்தான் விற்பனைக்குக் கொண்டுவரவிருக்கிறார். 75 கோடி மதிப்புள்ள இந்திய பொம்மைகள் மார்க்கெட்டில் ‘கியா’வுக்கும் ஓரிடம் நிச்சயம் என்பது இவரின் உறுதியான நம்பிக்கை! நாமதான் பொம்மைகளை பெரிய பெரிய இடங்களில் உட்கார வைத்து அழகு பார்ப்போமே!

- நவநீதன்