மாறும் யுகங்கள் மாறுகின்றன!



மதிப்பிடுகிறார் வைரமுத்து

மயக்கும் தமிழும், மதியூகப் பேச்சும் கவிப்பேரரசுவோடு பிறந்த கவசகுண்டலங்கள். வாழ்வின் வறண்டுபோன உதடுகளைத் தன் நுனி நாக்கால் இன்னும் ஈரப்படுத்திக்கொண்டே இருப்பது கவிதை.

 பிரியம், துயரம், தேடல், ஆராதனை, பெருங்கோபம் என எல்லா அனுபவங்களையும் பேசியிருக்கின்றன அவர் கவிதைகள். சில கவிதைகளில் பாட்டன் மொழி... சில கவிதைகளில் வியர்வைத்துளி! பல கவிதைகளில் ஊஞ்சல் உற்சாகம்... சில கவிதைகளில் குழந்தை முத்தம்! சிறிய கருப்பொருளைக்கூடக் கவிதையாக்குகிற கலை, வைரமுத்து வின் வாழ்வனுபவம் தந்த வரம். தேய்பிறை காணாத தேன் தமிழ் நிலவைச் சந்தித்தபோது மகரந்தச்சொற்களில் நீண்டது உரையாடல்...

‘‘1982-83ல் ‘இதுவரை நான்’ எழுதினீர்கள். 1983 முதல் இன்று வரை வைரமுத்து?’’

‘‘கால ஓட்டத்திற்கேற்ப மாறுதல்கள் வந்திருக்கின்றன. மனசு பக்குவப்பட்டிருக்கிறது. வாழ்க்கையை அதன் போக்கில் புரிந்துகொள்ள வேண்டும் என்ற உணர்வு வந்திருக்கிறது. ‘இதுவரை நான்’ முதல் பாகம் எழுதியபோது எனக்கு வயது 28. கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் கடந் திருக்கின்றன. இந்தக் காலக்கட்டம் பதிவு செய்யப்படத்தான் வேண்டும். இரண்டாம் பாகம் எழுதுவேன். காலம் வாய்க்கும்!’’‘‘ ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, ‘கருவாச்சி காவியம்’ என கிராமக் காவியங்கள் சரி... நகரம் பற்றிய புரிதல் உள்ளதா?’’

‘‘நகரத்தை எழுதுவதற்கு எழுத்தாளர்கள் மிகுந்து இருக்கிறார்கள். கிராமத்திலிருந்து வந்தவர்கள் கூட, நகர வாழ்க்கைக்கு தங்களை ஒப்புக்கொடுத்து விட்டார்கள். நகரத்தைத்தான் அழகாகப் பதிவு செய்கிறார்கள். அப்படியெனில் கிராம வாழ்க்கையை யார் பதிவு செய்வது? கிராமத்தில்தானே பழைய பண்பாட்டின் வேர்கள் இருக்கின்றன. அவற்றைப் பதிவு செய்வதே என் விருப்பம். அதற்காக, டிரஸ்ட்புரத்தில் இருக்கிற பெண்ணையோ, பெசன்ட் நகரில் இருக்கிற ஆணையோ எழுத முடியாது என்பதல்ல.

அதற்கான வீச்சு என்னிடம் வரவேண்டும். கிராமம் என்னைப் பாதித்த அளவு நகரம் பாதிக்கவில்லை என்பதுதான் உண்மை. கிராம வாழ்க்கையில் நித்தம் நித்தம் புது சம்பவங்கள். நகரத்து வாழ்க்கையில் எல்லா வருடங்களுமே ஒரே நாளுக்கான நகல்கள். ஒரே மாதிரி உடுத்தி, துய்த்து, உண்டு, பணியாற்றி, ஒரேவிதமான மனிதர்களைச் சந்தித்து... இதில் மாற்றமே இல்லை. கிராமத்து வாழ்க்கை, நித்தம் நித்தம் மலர்கிற பூ. நகரத்து வாழ்க்கை, என்றோ பூத்த காகிதம்.’’

‘‘இன்றைய கிராமியம் மாறியிருப்பதை உணர்ந்தீர்களா?’’

‘‘நான் புறப்பட்டு வந்த கிராமம் இன்றில்லை. என் கிராமத்தின் பழைய விழுமியங்களும் இல்லை. என்றைக்கு ஒரு கிராமத்தின் திண்ணை என்பது அழிந்து போனதோ, அன்று கிராமத்தின் பொதுச் சிந்தனை அழிந்து விட்டது. எப்போது கிராமத்திற்குத் தொலைக்காட்சி வந்ததோ... அன்று தெரு வாழ்க்கை போய்விட்டது. எனது கிராமமான கரட்டுப்பட்டியில் கோடை நிலா வெளிச்சத்தில் எல்லோரும் வீட்டிற்கு வெளியே, தெருவில்தான் படுத்திருப்போம்.

கதை பேசி, விடுகதைகள், சொலவடைகள் சொல்லி, வாழ்வியல் அனுபவங்களைப் பகிர்ந்து, நட்சத்திரங்களை எண்ணி, நிலவைப் பார்த்து உரையாடித் தீர்த்த நாள் உண்டா இன்று? இப்போது யாராவது ஏழு மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர விரும்புகிறார்களா? இவர்களின் வாழ்க்கை தொலைக்காட்சிக்குள் ஓடி ஒளிந்துகொண்டது. இப்போது கிராமத்தில் உலக்கைகள் இல்லை. எங்கள் பெண்கள் உலக்கை குத்துகிற வரைக்கும் அவர்களுக்குத் தோள் வலிமை இருந்தது.

 உடற்பயிற்சி இருந்தது. மார்பகங்கள் பெருத்திருந்தன. உலக்கை போன பிறகு இந்த மூன்றும் போய்விட்டன. அம்மி போய்விட்டது. அம்மியில் அரைப்பது யோகாசனம், மூச்சுப்பயிற்சி. கோலமிடுவது, வாசல் பெருக்குவது என்பது இடுப்புவலி வராமல் இருக்க! முன்பு வாழ்க்கையே உடற்பயிற்சி. என்றைக்கு கிராமத்துப் பெண்கள் ‘வாக்கிங்’ என்ற முறைக்கு வந்தார்களோ, அன்றே என் கிராமம் அழிந்துவிட்டது. பழைய கிராமத்தில் வாக்கிங் என்பது வாழ்க்கை முறைக்குள் அடங்கியிருந்தது.

இன்று அது தனித்து இயங்குகிறது. இது புறமாற்றம். அகமாற்றத்தில் பொதுநலம் சுருங்கி, சுயநலம் வந்து விட்டது. இது உலகமயமாதல் என்ற கலாசாரம் நம்மீது வீசிய பெரிய வலை. நம் கலாசாரத்தின் தலையில் விழுந்த மிகப்பெரிய அரிவாள் வெட்டு. கிராமம் பழையதை விட முடியாமல், புதியதைத் தொட முடியாமல் திரிசங்கு சொர்க்கத்தில் இருக்கிறது. மாறும் யுகங்கள் மாறுகின்றன.’’

‘‘சினிமாவில் பாடல் யாரும் எழுதலாம் என்றாகிவிட்டதே?’’

‘‘இது வளர்ச்சிதான். பாடல் தன் கட்டுமானத்தை இழந்திருக்கிறது. அதனால் எல்லோரும் உள் புகுந்து வர வாய்ப்பிருக்கிறது. எத்தனை பேர் எழுதுகிறார்கள் என்பதா முக்கியம்? எத்தனை பேர் வெல்கிறார்கள் என்பதே முக்கியம்!

பாடலுக்கு இலக்கிய அறிவு, இதிகாச அறிவு, புராண அறிவு, வரலாற்று அறிவு, அறிவியல் அறிவு, வாழ்வியல் அறிவு இவையெல்லாம் வேண்டும் என நினைத்த காலம் சற்றே தளர்ந்திருக்கிறது. இவை எதுவுமற்று சொற்களின் உறவுகளால் பாடல் எழுதிவிட முடியும் என்ற நிலை வந்திருக்கிறது. நிகழ்காலப் பாடலாசிரியனுக்கு தொழில்நுட்ப அறிவு, காதல் குறித்த உணர்வே போதும் என்றாகிவிட்டது. இதுவே நிரந்தரமில்லை.

நாளை, இதே கலை உலகம் புதுக் கருத்துகளோடு மையம் கொள்ளலாம். இலக்கியமே படமாகலாம். சினிமாவே திரையில் எழுதப்பட்ட இலக்கியமாகலாம். அப்போது வளமான பாடல் ஆசிரியர்கள்தான் பாடல் எழுத முடியும் என்ற நிலை வரும்.’’‘‘ ‘சாதித்துவிட்ட அலுப்பு’ தட்டுப்படுகிறதா?’’

‘‘சாதித்ததாக நினைத்தால்தானே அலுப்பு வரும். எதுவுமே இல்லை. இதுவரை நிகழ்ந்திருப்பவை எல்லாம் சம்பவங்கள்தான். நான் எழுதுகிறேன்... விருதுகள் வருகின்றன. விருது என்பது சாதனை அல்ல. ஒரு பாராட்டு, கை குலுக்கல். சமூகம் என்னை தட்டிக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. நான் நன்றி செலுத்திக்கொண்டே இருக்கிறேன். இதுவரை எழுதியதெல்லாம், இதைவிட சிறந்த படைப்பை எழுதுவதற்கான வெள்ளோட்டம்தான்.’’‘‘கவிதையிலும் பாடலிலும் காதல் ஸ்பெஷலிஸ்ட் நீங்கள். இன்றைய காதல் பற்றி...’’

‘‘இன்று காதல் முற்றிலும் அழிந்துவிட்டது என நினைக்கவில்லை. ஆனால், காதல் தனக்கிருந்த அந்தரங்கத்தை இழந்துவிட்டது. ஆணும், பெண்ணும் பேசுவதற்கு, சந்திப்பதற்கு இருந்த தடைகள் காதலை ரசமாக வைத்திருந்தன. இன்று தொழில்நுட்பம் அந்த இடைவெளியைக் குறைத்து, காதல் நீண்ட கால இனிப்பாக இல்லாமல் நாக்கில் வைத்ததும் கரையக்கூடிய மிட்டாயாக மாறிவிட்டது.’’‘‘ரஜினி, கமல் இருவரோடும் நீண்ட கால நட்பு... கொஞ்சம் (சம்பவங்களால்) சொல்லுங்களேன்!’’

‘‘இருவருமே அன்புக்குரியவர்கள். இருவருமே மிகுந்த பண்பாட்டோடு பழகுகிறவர்கள். இருவருமே என்னிடம் நிறைய தடவை மனம் திறந்திருக்கிறார்கள். இன்னும் சொன்னால், நான் கூட என் வாழ்க்கையை அவர்களோடு அவ்வளவு பகிர்ந்து கொண்டதில்லை. நான் என்னைக் கொஞ்சம் அளந்துதான் வெளிப்படுத்துவேன்.

அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மிகமிகப் பெரிது. நல்ல நல்ல சம்பவங்கள், நெகிழ்ச்சிகள் எல்லாம் உண்டு. ‘இதுவரை நான்’ இரண்டாம் பாகத்திற்குக் காத்திருங்கள்!’’

‘‘முதல் கவிதைத் தொகுப்பில் உங்களை ‘பருவக்கிழவன்’ என்றீர்கள்... இப்போது உங்களை எப்படி அழைக்கப் பிரியம்?’’

‘‘உடல் மாறியிருக்கிறது. உள்ளம் மாறாமல் இருக்கிறது. இந்த பூமியை வியப்பதை என்றைக்கு நிறுத்தி விடுகிறேனோ அன்று எனக்கு வயதாகி விடும். வேடிக்கையாக எப்போதும் சொல்வேன். இந்த சூரியன் மிகமிகப் பழையது. சூரிய உதயம் புதியது. சந்திரனும் பழையது... சந்திரோதயம் புதியது. காற்று பழையது... சுவாசம் புதியது. மொழி ஒரு வியப்பு. வாழ்க் கை ஒரு வியப்பு. என்னைச் சுற்றி எத்தனையோ வியப்பு. அவை என்னை இளமையாக வைத்திருக்கின்றன.’’

‘‘இசையில் அடுத்த தலைமுறை கூட்டமாக வருகிறதே... உங்கள் எதிர்பார்ப்பு யார் மீது?’’

‘‘இன்று இசை என்பது மனம் சார்ந்ததல்லாமல், செவி சார்ந்ததாகி விட்டது. நான் சப்தங்களின் காதலன் அல்ல... பொருளின் காதலன். வயலின் வாசிக்கப்பட்டால் அந்த வயலின் அழுகிறதா, காதலிக்கிறதா, கதறுகிறதா, தாலாட்டுகிறதா எனத் தெரிய வேண்டும். இல்லையென்றால் அந்த வாத்தியத்தில் நான் கரைய மாட்டேன்.

 மனதிலிருந்து மெட்டு வந்ததற்கு மாறாக, கருவியிலிருந்து சப்தம் வரக்கூடிய காலத்திற்கு மாறியிருக்கிறது இசை. இந்தக் கூட்டத்திலிருந்து ஒருவன் பூதாகரமாக, தலைமுறைக்கு தலைமை தாங்குகிறவனாக வருவான். அவன் யாரென்று தெரியாது. வரட்டும். அதனால் இந்தக் கூட்டத்தை வரவேற்போம்.’’

‘‘உங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘நான் எதையும் ஒழுக்கமான வளர்ச்சியா எனப் பார்ப்பேன். ஒழுக்கமாக வராத எதுவும் நிலைபெறுவதில்லை. வளர்ச்சிக்கு ஒரு ஒழுங்கு வேண்டும். அந்த ஒழுங்கு அவர்களிடம் இருப்பதாக நினைக்கிறேன். நான் பெற்ற துன்பமும், வறுமையும் இவர்கள் பெற்றதில்லை என்பதனால், என்னை விட நேர்மையாக இருக்கிறார்கள். நேர்மையான வளர்ச்சி நிதானமாகத்தான் இருக்கும். நிதானமான வளர்ச்சி நிரந்தரமானதாக இருக்கும்.”‘‘தமிழ் சினிமாவில் பாடலே இல்லாது போகுமா?’’

‘‘எல்லாப் படங்களுக்கும் பாட்டு வேண்டும் என்பதே மூடநம்பிக்கை. பாடல்களே இல்லாத ‘வண்ணக்கனவுகள்’ படத்திற்கு நானே வசனம் எழுதியிருக்கிறேன். இந்த இடத்திற்குப் பாட்டு வேண்டாம் என்பதை வெளியே ‘தம்’ அடிக்கப் போகிறவன் தீர்மானிக்கிறான். கதையில் பாட்டு என்பது உடம்பில் சட்டையாக இல்லாமல், உடம்பின் தோலாக இருக்க வேண்டும். இப்போது கூட, பல படங்களுக்குப் பாடல்கள் தேவையில்லை. ஆனாலும், தொலைக்காட்சி, வானொலி, இணையங்களுக்கு ஒலித்தொடர்பு வேண்டுமே... அதற்காகச் சேர்க்கிறார்கள்.’’

‘‘இப்போதெல்லாம் இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் நடிக்கிறார்கள். அந்தக்கால வாலிகூட நடித்தார். 80களில் நீங்களும் இளையராஜாவும் இருந்த உயரமே வேறு. ஏன் நடிக்கத் தோன்றவில்லை?’’‘‘நடிக்கத் தெரியவில்லை.

அதனால் தோன்றவில்லை. நடிப்பது என்பது உடம்பிற்கு விரோதமான விஷயம் என நினைக்கிறேன். செயற்கையாக அழுவது, கோபிப்பது, கண்ணீர் விடுவது, ஆவேசப்படுவதெல்லாம் எனக்கு ஒவ்வாத விஷயம். ‘இயல்பாக இரு’ என்பதுதான் நான் என் உடம்பிற்கு சொல்லிக் கொடுத்திருக்கும் செய்தி. நான் சொல்வதை என் உடம்பு சரியாகக் கேட்கிறது.’’

‘‘நெடுங்காலமாய் உங்கள் தோற்றத்தில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. எப்படிப் பராமரிக்கிறீர்கள்?’’

‘‘என் தாயும் தந்தையும் கொடுத்த உடல் இது. என் தந்தைக்கு மரணம் வரையில் கூட தொப்பை போட்டதில்லை. அதெல்லாம் மரபணுக்கள் கொடுப்பது. இந்த உடலை தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்ற எச்சரிக்கை எனக்குண்டு. 40,000 ரூபாய் என்பதால் அந்த அலைபேசியை எவ்வளவு கவனமாகக் கையாளுகிறீர்கள். அப்படியென்றால் உங்களுக்குள் இருக்கிற கிட்னிக்கு என்ன விலை? ஒரு இருதயத்தின் விலை என்ன?

 சில மருத்துவமனைகளில் ஒருமுறை டயாலிசிஸுக்கு 40,000 ரூபாய் கூட ஆகிறது. சிறுநீரகம் என்ற உறுப்பு உங்களுக்கு 80 வருஷங்களுக்கு டயாலிசிஸ் செய்துகொண்டே இருக்கிறதே, அதற்கு என்ன பணம் தரவேண்டும்? உள் உறுப்புகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்...

 இழந்த பிறகு உறுப்புகளை எண்ணி ஏங்கக்கூடாது என்பதுதான்என் ஆரோக்கியக் கொள்கை. வயிற்றை அடைக்கிறஉணவுக்கு ஆசைப்படுவதில்லை சாப்பாட்டுக்கு நல்ல பசியோடு உட்கார்ந்து பசியோடு எழுந்து விடுகிறேன். ஆயில் அதிகம் உபயோகித்தால் ஆயுள் குறையும். இனிப்பு, உப்பு, கொழுப்பு இந்த மூன்று பூக்களைத் தவிர்த்து விடுகிறேன். நீங்களும் தவிர்த்துப் பாருங்கள்... அல்லது, குறைத்துப் பாருங்கள்!’’

ஆணும் பெண்ணும் பேசுவதற்கு, சந்திப் பதற்கு இருந்த தடைகள் காதலை ரசமாக வைத்திருந்தன. இன்று தொழில்நுட்பம் அந்த இடைவெளியைக் குறைத்து விட்டது!

கதை பேசி, விடுகதைகள், சொலவடைகள் சொல்லி, வாழ்வியல் அனுபவங்களை பகிர்ந்து, நட்சத்திரங்களை எண்ணி, நிலவைப் பார்த்து உரையாடித் தீர்த்த நாள் உண்டா இன்று?

- நா.கதிர்வேலன்
படங்கள்: புதூர் சரவணன்