ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்



ஜெனிபர் லாரன்ஸ் இந்தியாவை அப்படி நேசிக்கிறார். உலகிலேயே அவருக்குப் பிடித்த இடம் ராஜஸ்தான்தானாம். ‘‘இந்தியப் பாரம்பரிய ஆடைகளும், வைர நகைகளும் ரொம்ப பிடிக்கும். இவற்றை வாங்கவே விரைவில் இந்தியா வரப் போகிறேன்’’ என்கிறார். ராஜஸ்தான் வெயில் பற்றி அவருக்குத் தெரியாது போல!

கேத்ரினா கைஃப்பும் ரண்பீர் கபூரும் மும்பையில் கோடிகளைக் கொட்டி ஒரு அபார்ட்மென்ட் வாங்கி, அதில் இணைந்து வாழ்கிறார்கள். இந்த அபார்ட்மென்ட் வாசலில் எப்போதும் போட்டோகிராபர்கள், டி.வி. கேமராமேன் தலைகள் தென்படும். இதனால் தங்கள் சுதந்திரம் கெடுகிறது என அலறும் கேத்ரினா, அந்த அடுக்குமாடி வளாகம் முழுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியிருக்கிறார். மற்ற வீட்டுக்காரர்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்களாம்.

முன்னாள் கணவர் டாம் க்ரூஸுடனான வாழ்க்கையில் இரண்டு பையன்கள், இந்நாள் கணவர் கீத் அர்பன் வாரிசாக இரண்டு பெண்கள் என நான்கு குழந்தைகளுக்கு அம்மா நிகோல் கிட்மேன். ஆனாலும், ‘‘எனக்கு இன்னும் நான்கு குழந்தைகள் வேண்டும்’’ என்கிறார் நிகோல். அவரது சகோதரிக்கு ஆறு குழந்தைகள். அவரை மிஞ்ச வேண்டுமாம்!

நடிக்க வருவதற்கு முன்பு சோனாக்ஷி சின்ஹா ஃபேஷன் டிசைனிங் படித்தார். அதனால் படங்களில் தனக்கு காஸ்ட்யூம் டிசைனர் தரும் ஆடைகளில் இன்னும் கொஞ்சம் மெருகேற்றி அணிகிறார். சோனாக்ஷியின் ஸ்டைலிஷ் தோற்றத்துக்கு இதுவே காரணம்!

மஞ்சு வாரியர் ரீ என்ட்ரி கொடுத்த மலையாள ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ?’ படத்தை தமிழில் ரீமேக் செய்து ஜோதிகா ரீ என்ட்ரி கொடுக்கிறார். இதே படத்தின் இந்தி உரிமையை அஜய் தேவ்கன் வாங்கியிருக்கிறார். தன் மனைவி கஜோல் நடிக்கப் பொருத்தமான படம் இது என அவர் நினைக்கிறார். திருமணத்துக்குப் பிறகு நீண்ட நாள் நடிக்காமல் இருந்த கஜோல், ‘மை நேம் ஈஸ் கான்’ படத்தில் மட்டும் ஷாருக் கேட்டதால் நடித்தார். இப்போது மீண்டும் மேக்கப் போடுகிறார்.