விக்ரம் பிரபு ஸ்ரீதிவ்யா செம ஜோடி!



‘எஸ்’ சொல்லும் எழில்

ஆஹா வந்துட்டீங்களா!’’ - அன்போடு வரவேற்கிறார் டைரக்டர் எழில். ‘துள்ளாத மனமும் துள்ளும்’ தொடங்கி, ‘தேசிங்கு ராஜா’ வரை நிதானமான வெற்றி யைப் பெற்றவர். இப்போது, ‘வெள்ளைக்கார துரை’ படம் வரப்போகிற உற்சாகம்!‘‘இதுவரைக்கும் ஒன்பது படங்கள் செய்தாச்சு. சினிமாவைப் பற்றி நிறைய பார்வைகள் இருக்கு. நாலு பக்கம் படிச்சா வராத உணர்வை, நாலு பேர் மேடை போட்டுப் பேசினா புரியாத விஷயத்தை, சினிமா மூலம் சொன்னால் மனதில் பதியும்.

என்னைப் பொறுத்தவரை சினிமா மக்களின் வாழ்க்கையை நினைச்சுப் பார்க்கிற ஒரு விஷயம். வெறும் பொழுதுபோக்கா மட்டுமே இருந்திடக் கூடாது. எங்கேயோ ஒரு ஓரத்தில் உங்களின் இதயத்தில் ஒட்டணும். கொஞ்சம் கவலை மறந்து சிரிக்கணும். அப்படி ஒரு படம் ஜாலியா பண்ண நினைச்சேன். அதுதான் ‘வெள்ளைக்கார துரை’ ’’ - எளிமையாகப் பேசுகிறார் அனுபவம் நிறைந்த எழில்.‘‘ ‘வெள்ளைக்கார துரை’ன்னா..?’’

‘‘கொஞ்சம் பிகு பண்ணிட்டு திரிகிற ஆட்களை நாம் அப்படித்தான் சொல்லுவோம். சின்னதா திமிரோடு இருக்கிற பசங்களை கிராமங்களில் அழைக்கிற பெயர், ‘வெள்ளைக்கார துரை’தான். விடியற்காலையில பூங்காக்களில் பார்த்தா பெரும் கூட்டமா ஆணும், பெண்ணும், பெரியவர்கள் கூட சேர்ந்து, ‘கெக்கே பிக்கே’ன்னு சிரிப்பு தெரபி பண்றாங்க. ‘அடடா, இப்ப ஜனங்க சிரிக்கிறது அரிதாப் போச்சோ’ன்னு உடனே உறைச்சுது. இந்தப் படத்தில் எல்லா உணர்வையும் நகைச்சுவை சேர்த்தே சொல்லணும்னு ஆசைப்பட்டேன்.

‘மனம்கொத்திப் பறவை’ பார்த்துட்டு சிரிச்சு, தியேட்டர்லயே பிரசவ வலி வந்த கர்ப்பிணிப் பெண்கள் இருந்தாங்க. அப்படிப்பட்ட சிரிப்புகள் இதில் நிறைய இருக்கு. கிராமத்தில் தவறுன்னு நினைக்காம விளையாட்டா தப்பு பண்ணிடுவாங்க. அப்புறம்தான் அவங்களுக்கு விபரம் புரியும்.

அப்படி ஒரு இயல்பான பையன், அவனோட வாழ்க்கை இதில் இருக்கு. ஒரு இடம் வாங்கி பெரிசா வரலாம்னு போனா, அது சுடுகாடா இருந்ததா விபரம் தெரிய வருது. அப்புறம் கதையில் நிறைய நடக்குது. வாழ்க்கையில் அவன் எதிர்கொள்கிற பிரச்னைகள், சோதனைகள் எல்லாம் சேர்ந்து கலவையா அம்சமா வந்திருக்கு. விக்ரம் பிரபு இருக்குறதால கொஞ்சம் ஆக்ஷனும் இருக்கணும்ல? அதுவும் இருக்கு. ஆனால், மொத்த வடிவில் பார்த்தால் இது காமெடி யில் ஜொலிக்கிற படம்தான்!’’‘‘விக்ரம் பிரபு காமெடிக்கு பொருந்துகிறாரா..?’’

‘‘அவர் இதுவரைக்கும் ஆக்ஷன் மட்டும்தான் செய்திருக்கார். அதனால் அவருக்கே கூட சந்தேகம் இருந்திருக்கலாம். ‘விக்கி, நாங்க யாரும் வெளி ஆட்கள் இல்லை... உங்க நண்பர்கள்னு நினைச்சுக்கிட்டா, கிண்டலும் கேலியும் சகஜமா இருக்கும்’னு சொன்னேன். ஒரு ரெண்டு நாள் பழக ஆரம்பிச்சார். பின்னாடி பார்த்தால், அவர்தான் காமெடியில் முன்னணியில் இருக்கார். அவருக்கு எதுவும் கத்துக் கொடுக்க வேண்டாம். ஒரு வார்த்தை சொன்னால், அடுத்த பத்து வரிகளையும் புரிஞ்சுக்கிற தன்மை.

அவங்களுக்கு சொல்லிக் கொடுத்தா நடிப்பு வரணும்? பிரபு சார் என்கிட்ட ‘அவனுக்கு நல்லா கம்பு சுத்தத் தெரியும். அந்த விவரம் உங்களுக்குத் தெரியாது’னு சொல்லி வச்சார். புரிஞ்சுக்கிட்டு, ஒரு அழகான சண்டைக்காட்சி வச்சிருக்கேன். இப்ப மொத்த யூனிட்டிலும் லந்து கொடுக்கிறவர் அவர்தான். அவர் தனியா பண்ணுகிற காமெடிகளைக் கூட படத்தில் வைக்கலாம். அப்படியிருக்கு..!’’

‘‘இவ்வளவு கெடுபிடி கால்ஷீட்டிலும் ஸ்ரீதிவ்யாவை கேட்ச் பண்ணிட்டீங்க!’’‘‘இன்றைய இளைஞர்களுக்கு பிடிச்ச பொண்ணு ஸ்ரீதிவ்யாதான். அவங்களோட கனவுப் பொண்ணும் அவர்தான். ‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்துல வந்து நின்ன ஸ்ரீதிவ்யாவை யாரும் மறக்கவே முடியலை என்பதுதான் நிஜம். என்னோட ‘மனம்கொத்திப் பறவை’யில் அவங்கதான் நடிச்சிருக்க வேண்டியது. தப்பிப் பறந்திட்டாங்க. இப்ப சரியா அவங்களைக் கொண்டு வந்து சேர்த்துட்டோம்.

 இப்பத்தான் அவங்க பாடல் காட்சிகளை எல்லாம் பார்த்தாங்க. ‘விக்ரம் பிரபு - திவ்யா ஜோடி நல்லாயிருக்கே’ன்னு முதல் கமென்ட் அவங்ககிட்ட இருந்து வந்ததுதான். நளினம், அழகு, குறைந்தபட்ச கவர்ச்சி, நிறைந்த பெண்மைன்னு இன்னிக்கு அவங்கதான் புதுப்பெண்களில் முதலிடத்தில் இருக்காங்க. அந்த இடத்தை இதிலும் விட்டுக் கொடுக்கவில்லை. அசத்தியிருக்காங்க.’’‘‘உங்களுக்கு இப்பல்லாம் இமான்தான் பேவரிட்!’’

‘‘பாடல்கள் கேட்டே வளர்ந்த இளமைக்காலம் நம்மோடது. என் படங்கள் மொத்தமும் நல்ல பாடல்களால் நிறைஞ்சிருக்கு. அதற்கு கடவுளோட கருணைதான் காரணம். உணர்ந்து எழுகிற கவிஞனின் பாடல் வரிகளும், நல்ல மனநிலையில் இருக்கிற இசையமைப்பாளனும் ஒரே நேர்கோட்டில் இணைஞ்சாத்தான் அந்தப் பாடல் எல்லாருக்கும் பிடிக்கும். அப்படிப் பார்த்தால் அந்த ஆசீர்வாதம் எனக்கு இருந்துக்கிட்டே இருக்கு. அப்படித்தான் ‘வெள்ளைக்கார துரை’ பாடல்களும். ஒரு பாடலை வைரமுத்து சாரும், மீதியை யுகபாரதியும் எழுதியிருக்காங்க. ‘தடதட’னு மாடிப்படிகளில் உருண்டுட்டுப் போற மாதிரி இருக்கு பாடல்கள்.

நானும் இந்த மாதிரி வேணும்னு இமான்கிட்ட சொல்றதில்லை. ‘இந்தப் பாட்டு மாதிரியே போட்டுக் கொடுங்க’ன்னு எந்த கேசட்டையும் நீட்டுறது இல்லை. இமானே அசல்தான். அவருக்கு எதுக்கு நகல்? இதெல்லாம் செய்யாததால் என்னை அவருக்குப் பிடிக்கும். என்னோட சமீபத்திய மூன்று படங்களுக்கும் சூரஜ் நல்லு சாமிதான் கேமராமேன். நினைக்கிறதை அப்படியே கண்ணில் கொண்டு வந்து காட்டுவார்!’’

நா.கதிர்வேலன்