ரஜினி ‘பஞ்ச்’
ரஜினியின் ‘பஞ்ச்’களை உற்று கவனித்தால் புரியும்... தலைவர் சொல்வது எதுவும் சாதாரணமானவை அல்ல. நிர்வாக மேலாண்மையோடு தொடர்புபடுத்தினால், அதன் உள் அர்த்தம் பிரமிக்க வைக்கும். சின்ன பென் டிரைவில் அடங்கியிருக்கும் பெரிய விஷயங்கள் போல, பிரமிக்க வைக்கிறது இந்த மேனேஜ்மென்ட் ஒன் லைன்ஸ்...

இது எப்டி இருக்கு?

வாழ்க்கையிலோ ஆபீசிலோ எந்த ஒரு வேலையையும் செய்து முடித்துவிட்டு, பக்கத்தில் இருப்பவரிடம் ‘இது எப்டி இருக்கு?’ எனக் கருத்து கேட்பது ரொம்ப அவசியம். அப்படி சக ஊழியர்களிடம் கேட்கும்போது அவர்களும் உள்ளம் குளிர்ந்து, தங்களது வேலையில் சிரத்தை காட்டுவார்கள். டீம் ஸ்பிரிட் சிறக்கும்... கம்பெனி செழிக்கும்!

என் வழி தனி வழி

நம்மிடம் வரும் எந்தப் பணியையும் மற்றவர்களைப் போலில்லாமல், வித்தியாசமாக செய்து முடிக்கப் பழக வேண்டும். அப்போதுதான் நமக்கென்று ஒரு தனித்துவம் உருவாகும். கடைசி ஓவரில் ஸ்பின்னருக்கு பவுலிங் கொடுக்கும் தோனியின் தனித்துவத்துக்கெல்லாம் தலைமை தத்துவம் இதுதான்! ‘தனி வழி’ என்பது வெற்றிக்கு ஷார்ட் ரூட்!

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி

டேய்! மலேடா!
அண்ணாமலை..!

உன் வாழ்க்கை உன் கையில்


லீகல் டாக்குமென்ட், ஆபீஸ் கான்ட்ராக்ட் போன்ற முக்கியமான மேட்டர்களில் பார்த்து, ஜாக்கிரதையாக, நிதானமாய் ஒருமுறை படித்த பின்பு கையெழுத்துப் போடவும். இல்லையேல் ஆபத்தில் மாட்டிக்கொண்டு கம்பி எண்ணும்படி கூட ஆகலாம். இதைத்தான் ‘உன் வாழ்க்கை உன் கையில்’ என்ற தத்துவ உபதேசம் செப்புகிறது.

சொல்றான், செய்யறான்

‘ஏன்? எதற்கு?’ என அவசியமின்றி புரட்சிக் கொடி தூக்காமல், மேனேஜ்மென்ட் சொல்வதைச் செய்பவன் பெரிய இடத்திற்கு வருவான் என்பதைத்தான் தலைவர் இப்படிச் சொல்கிறார். மேலதிகாரியிடம் மட்டும் இந்த ‘சொல்றான்... செய்யறான்...’ டெக்னிக்கை பயன்படுத்திப் பாருங்கள். சுலபத்தில் பல ப்ரொமோஷன்கள் பெற்று நீங்கள் வாழ்வாங்கு வாழ்வது உறுதி!

ஒரு தடவை சொன்னா
நூறு தடவை சொன்னா மாதிரி


இது பாஸ்களுக்காக சொல்லப்பட்ட திருவாசகம். அதிகாரிகள் தங்கள் அருமைப் பணியாளர்களுக்கு ஒரே ஒரு முறை கட்டளை இட்டாலும் அதை நூறு முறை சொன்னது போல, நச்சென்று நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல சொல்ல வேண்டும். அப்போதுதான் ரிசல்ட் கிடைக்கும். கார்ப்பரேட் உலகில் நிறைய திட்டப்பணிகள் சரியான கம்யூனிகேஷன் இல்லாமல்தான் தோல்வி அடைகின்றன. ‘கொன்று வா’ என ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்த சிலப்பதிகார பாண்டிய மன்னன் வரை இந்த தியரி அப்ளை ஆகும்!

வாழ்க்கையில எதுவும் ஈஸியில்லை... முயற்சி பண்ணினா எதுவுமே கஷ்டமில்லை...

அப்ரைஸல் நேரத்தில் மேனேஜரிடம் அனைத்திலும் குட் வாங்குவது ஈஸியில்லை. ஆனால், தினமும் அவருக்கு காரைக்குடி ஓட்டல் விசிறித் தொப்பி மாதிரி சல்யூட் அடித்து... அவர் அடிக்கும் த்ராபை ஜோக்குக்கெல்லாம் ‘‘ஆஹா... செம்ம...’’ எனக் குலுங்கிக் குலுங்கி சிரித்து வைத்து... பிறந்த நாளுக்கு பன்னிரண்டு மணிக்கு வாட்ஸப்பில் பூங்கொத்து அனுப்பி... எனத் தொடர்ந்து முறை வாசல் செய்து விடாமுயற்சி செய்தால் எதுவுமே கஷ்டமில்லை என்பதைத்தான் சொல்ல வருகிறார் சூப்பர் ஸ்டார்!

சிங்கம் சிங்கிளாதான் வரும்

நாம் ஒழுங்காக வேலை செய்கிறோமா என்று பார்ப்பதற்கு நிறுவனத்தின் முதலாளி முன்னறிவிப்பு எதுவுமின்றி சிங்கிளாக சடாரென்று தாவி கம்பெனி உள்ளே சிங்கமாக நுழைவார். கம்பெனி போனில் மணிக்கணக்காக கடலை போடுவோர் கையும் களவுமாக - ஃபோனும் வாயுமாக பிடிபடுவர். ரஜினியின் இந்த அறிவுரை இளசுகளுக்கு மிகவும் முக்கியமான மந்திரம்.

பாபா கவுன்டிங் ஸ்டார்ட்ஸ்
ஒன், டூ, த்ரீ...


இது டைம் மேனேஜ்மென்டை சுருக்கி, சுலபமாக்கி, சூப் வைத்துக் கொடுக்கும் வரிகள். எந்த வேலையையும் ‘இதுதான் டைம்... இதற்குள் முடிக்க வேண்டும்’ எனத் தீர்மானித்துக் கொண்டு தொடங்க வேண்டும். பக்கத்து சீட் ஃபிகரைப் பார்க்காமல், அடிக்கடி சிஸ்டத்தின் வலது கீழ் மூலையில் மணி பார்த்துக்கொள்ள வேண்டும். செய்யும் வேலைகளை முக்கியத்துவம் கருதி ஒன்று, இரண்டு, மூன்று என வரிசைப்படுத்திக் கொள்ளவும் வேண்டும் என்பதே இதன் சாரம்!

அசந்தா அடிக்கறது
உங்க ஸ்டைல் - அசராம அடிக்கறது என் ஸ்டைல்


இது டேட்டா என்ட்ரிகாரர்களுக்காக சொன்ன பொன்மொழி. பக்கத்தில் இருக்கும் ஃபிகரோடு கடலை போட்டு வாய் அசரும்போது கொஞ்சம் டேட்டா என்ட்டர் பண்ணுவது சிலரின் வழக்கம். ஆனால், யாரோடும் வாயாடாமல், எப்போதும் அசராமல் டைப் அடித்தபடி இருப்பதுதான் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான மார்க்கம்!

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்


ஒரு ப்ராஜெக்ட்டை எவ்வளவு தாமதமாக வேண்டுமானாலும் செய்து முடிக்கலாம். ஆனால், அந்த ப்ராஜெக்ட்டில் மக்களிடையே புழக்கத்தில் இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கோமா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் அந்தக் காரியத்தில் ஜெயம் நமக்குத்தான்!

ஆர்.வி.எஸ்