தூண்டில்



கூடுதலா இருபத்தைஞ்சு பவுன் நகையும், ஐந்து லட்ச ரூபாய் ரொக்கமும் கொடுத்தால்தான் சாருமதி கழுத்தில் தாலி கட்டுவேன்!’’ - கடைசி நேரத்தில் மாப்பிள்ளை மகேஷ் இப்படி அறிவிக்க, கல்யாண மண்டபம் களேபரமானது.‘‘இப்படி பண வெறி பிடித்து அலைகிற மனுஷனுக்கு என் மகளைக் கொடுக்க எனக்கு இஷ்டமில்லை.

வசதி குறைவுன்னாலும் பரவாயில்லை... என் தங்கச்சி மகன் முகுந்தனுக்கே என் மகளை இந்த மேடையிலேயே கட்டி வைக்கிறேன். இன்னும் பத்து நிமிஷத்தில் மாப்பிள்ளை வீட்டார் வாங்கிய வரதட்சணையை கீழே வச்சிட்டு மண்டபத்தை விட்டு வெளியே போகலைன்னா, போலீஸுக்கு போன் பண்ணிடுவேன்’’ என கர்ஜித்தார் சாருமதியின் தந்தை.

இந்த முடிவில் சாருமதி பூரித்துப் போனாள். மாஜி மாப்பிள்ளை மகேஷின் சோக மைண்ட் வாய்ஸ் இது... நேற்றிரவு சாருமதியே போன் செய்து, ‘எங்கப்பாகிட்ட இப்போ நிலம் வித்த காசு லட்சக்கணக்கில் இருக்கு. கடைசி நேரத்தில் இப்படி பணமும், நகையும் கேட்டு செக் வையுங்க.

 வேற வழியில்லாம கொடுத்துடுவார்’ என்று ஐடியா கொடுத்தது, ஆசைப்பட்ட அத்தை மகனைக் கட்டிக்கொள்ளத்தானா? தனக்கு அவள் போட்டது தூண்டிலா? ஆசையில் வசமாக சிக்கி பேரைக் கெடுத்துக் கொண்டோமே! இதை இப்போது இவர்களிடம் சொன்னால் நம்புவார்களா?                      
றீசுபாகர்