அழியாத கோலங்கள்திருமண சிந்தனைகளும் முடிவும்

என் சொந்தக்காரர்களிலும் நண்பர்களிலும் திருமணம் செய்துகொள்ளாதவர்கள், கொடைக்கானலில் கமலின் தோட்டத்தை மேற்பார்க்கும் என் மாமன் ஜி.சீனிவாசன்... அவர் அண்ணன் பார்த்தசாரதி... தன் ஆயுள்காலம் வரை கமலுக்கு உதவியாளனாக, கமலின் போர்க்கால மனைவிகளின் தாக்குதலைச் சமாளித்து, வயோதிகத்தில் மருத்துவமனையில் கமல் கையைப் பிடித்துக்கொண்டே உயிர் துறந்த பாலண்ணா. நான் அந்தக் கூட்டத்தின் நாலாவது ஆளாக இருந்தும் தாய் & தந்தையரின் திருப்திக்காக அந்த பந்தத்தை ஏற்றுக்கொண்டவன்.

1954ம் ஆண்டில் முதல்முறையாக தந்தையும் மகனும் எதிரெதிராக வழக்குகளில் ஆஜராக ஆரம்பித்தோம். அதன்பின் அதிகம் சினிமாவுக்குப் போவதை விட்டுவிட்டேன். ஒரு நாள் என் தந்தையார் சிவாஜி படம் பார்த்து விட்டு, ‘‘ ‘நான் வளர்த்த பச்சைக்கிளி நாளை வரும் கச்சேரிக்கு’ன்னு பாடறானேடா? நான் என்னத்தை பாடறது?’’ என்று கேட்டார்.அந்த வருட நடுவில் என்னை உட்கார வைத்து தனியாகப் பேசினார். ‘‘உன் இஷ்டத்துக்கு விரோதமாக நான் செய்த ஒரே காரியம்...

எஞ்சினியராகணும், டாக்டராகணும்னு பைத்தியம் பிடிச்சுத் திரிஞ்ச உன்னை கட்டாயப்படுத்தி வக்கீலாக்கியது. என் தியரி, வக்கீலின் மூத்த மகன் வக்கீலுக்குப் படித்துவிட்டு வந்தால், அவன் கட்சிக்காரர்களை தேட வேண்டியதில்லை! தந்தை விபத்தில் மறைந்தால், ஆபீஸில் இருக்கும் கேஸ் கட்டுகள்தான் குடும்ப இன்சூரன்ஸ்! அதனால் செய்தேன். இன்றைக்கு ஒரு லேர்ன்ட்
ஃபிரண்டு ஆகிவிட்டாய். நான் உனக்கு யோசனை சொல்ல முடியாது.’’

‘‘இப்ப என்ன சொல்ல வர்றீங்க?’’ என்றேன்.‘‘வெள்ளிக்கிழமையானா, உன் டப்பா காரை எடுத்துட்டு ஃப்ரெண்ட்ஸை கூட்டிட்டு காணாம போயிடறே? திங்கட்கிழமை கோர்ட்லதான் உன்னை பாக்கறேன். நீ ஸ்மோக் பண்றேன்னு தெரியும். குடிப்பியோன்னு சந்தேகப்படறேன். வேற என்ன பண்றேன்னு எனக்குத் தெரியாது. உனக்கு குடும்பப் பொறுப்பு வரணும்னு ஆசைப்படறேன்.’’

‘‘எனக்கு கல்யாணம், குடும்பம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை!’’  ‘‘You need sex... you are born because your parents had sex..." ''If you are worried about my sex, i know where to find it... and when to find it!’’ ‘‘நீயா தேடினா அதுக்குப் பேர் தேவடியாத்தனம்... நாங்க பண்ணி வச்சாத்தான் அதுக்குப் பேர் கல்யாணம்!’’நான் பதில் பேசவில்லை. அன்றைய சண்டை அதோடு முடிந்தது.

அப்போது என் தாயார், கமலை வயிற்றுக்குள் சுமக்கும் இதயநோய் உள்ள நிறை கர்ப்பிணி. என்னை அழைத்து, ‘‘இப்ப உன்னை விட்டா அப்புறம் பிடிக்க முடியாது. நான் டெலிவரிக்கப்புறம் இருப்பேனோ இல்லையோ! உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுடறேன்டா’’ என்றார். மறுநாள் பெண் பார்க்கப் போனோம்.

டிபன் & காபி சாப்பிட்டு வெளியே வந்ததும் அப்பா கேட்டார்... ‘‘என்னப்பா, பொண்ணு பிடிச்சிருக்கா?’’இந்தக் காலத்து காதல் மன்னர்கள் மாதிரி பதில் சொன்னேன். ‘‘ஒரு ஃபிகர்தான் தெரிஞ்சுது. நீங்க அதே ஷேப்பிலே வேற ஆளை மாத்தினா கூட கண்டுபிடிக்க முடியாது. கோ அஹெட்...’’

திருமணம் நடந்தது. அதற்கு 65 நாட்களுக்குப் பின்தான் உலகநாயகன் பிறந்தார். திருமணம் என்பது அன்றும் சரி, இன்றும் சரி... ஒரு வில்லங்கமான சமாசாரம். எனக்குத் திருமணம் என்ற கட்டுப்பாட்டிலேயே நம்பிக்கை கிடையாது. காதல் என்பது, நாம் மோதிக்கொள்ளும் சுவருக்கு கலர் கலராக வார்னிஷ் அடித்துப் பார்ப்பது போல. அது கிடக்கட்டும்... என் தாயார் சொன்னார்கள், ‘பார்த்திருக்கும் பெண், அவரின் மாமன் மகன் சக்கரவர்த்தி அய்யங்காரின் மனைவியுடைய சகோதரி மகளாம்’.

 (உலகநாயகனின் சொந்தக்காரர்களில் ஒருவர் பேசுவது போல் தெரிகிறதா? இது உலக நாயகனின் சொந்தத் தாய் அய்யா!) அந்தப் பெண்ணின் தாயும் தந்தையும் 15 ஆண்டுகளுக்கு முன்னே இறந்து விட்டர்களாம். எனக்கு வந்த தகவல், அவர்கள் mixed doubles suicide army of two. என் ஐடியா... ஆஹா, ஒரு தற்கொலைப் படை வாரிசை திருமணம் செய்துகொண்டு தியாகிப் பட்டமும் வாங்கி விடலாம்!

வழக்கம் போல் ஒரு மொட்டைக் கடிதம், வருங்கால மிசஸ் சாருஹாசனுக்குக் கிடைத்திருக்கிறது... ‘சாருஹாசனுக்கும் ஒரு இளம் சினிமா நடிகைக்கும் காதல்! (அந்த பிரபல நடிகை பெயரைச் சொல்லாமல் விட்டு விடுகிறேன்) அப்பா, தமிழக முதல்வர் உதவியுடன் போலீஸ் வைத்துப் பிடித்து வீட்டுக்குக் கூட்டி வந்தார்’ என்று! இதில் போலீஸை வைத்துப் பிடித்துக்கொண்டு வந்தது வரை உண்மை... ஆனால், நடிகையின் வீட்டிலிருந்து இல்லை. ஒரு ‘பழைய பிக்பாக்கெட்’ வீட்டில் டிரெயினிங் எடுத்துக் கொண்டிருந்தபோது பிடித்தார்கள். உலகம் ஒரு சிறந்த ஜேப்படிக்காரனை வளர விடாமல் கெடுத்து விட்டது.

ஒரு வேடிக்கை என்னவென்றால், கான்வென்ட்டில் படித்த இந்த மணப்பெண் அந்த பிரபல நடிகையின் விசிறி. மொட்டைக் கடிதத்தை ஒளித்து வைத்து விட்டு, ‘‘இந்த பரமக்குடி பையன் எனக்கு ஓகே!’’ என்று சொல்லி விட்டார். அதற்குள் அமெரிக்காவிலிருக்கும் அவரின் சொந்தக்காரர் ஒருவருக்கு ஒரு பரமக்குடி வக்கீல் சொன்னாராம், ‘‘அந்த டி.எஸ் மகன், பம்பாயில் வக்கீலுக்கு படித்தபோது ஒரு மராத்தி பெண்ணுடன் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளோடு டைவர்ஸ் செய்துவிட்டு வந்திருக்கிறான்’’ என்று!

சொன்னவர் பேரில் தவறில்லை. ‘தண்ணி போடுகிறேன்... சிகரெட் பிடிக்கிறேன் என்று ஒப்புக்கொள்ளும் வக்கீல், இதையும் செய்திருப்பான்’ என்ற பரமக்குடி பொதுமக்களின் நம்பிக்கைதான் அது. இதையெல்லாம் தாண்டி நடந்த திருமணத்தில், மணமகன் குடும்பத்திற்கு பெருமை சேர்க்க தமிழக முதல்வர் வந்தார். ஆச்சரியம் ஒன்றுமில்லை.

சீனிவாச அய்யங்காரின் ஆஸ்தான புரோகிதர், என்னுடைய கிளாஸ்மேட் பிச்சை வாத்தியார். அருமையா ஃபுட்பால் ஆடுவான். ஆனால், 8ம் கிளாஸ் படிக்கும்போது அவர் அப்பா சின்னம்பி வாத்தியார் தவறி விட்டார். ஐ.ஏ.எஸ் பாஸ் செய்து ஒரு அதிகாரியாகக் கூடிய தகுதி படைத்தவனை 12 வயதில் வேத பாடசாலைக்கு அனுப்பிவிட்டார்கள். எனக்கு முன்னே அவனுக்குத் திருமணமாகி குழந்தை பிறந்த தகவல் வந்ததும், ஓடி வந்து என் தந்தையாரிடம் அதைச் சொன்னான்...

‘‘போஸ்ட் ஆபீசுலேர்ந்து நேரே இங்கேதான் வர்றேன்! இப்பத்தான் ‘கால்’ வந்தது!’’ நான் சும்மா இருக்காம கேட்டேன்... ‘‘பிச்சை, ‘கால்’ மொதல்லே வர்றது தப்பாச்சேப்பா... ‘தலை’ன்னா முதல்லே வரணும்!’’என் அப்பாகிட்டே திட்டு வாங்கிக் கட்டிக்கிட்டேன்.என் திருமணத்துக்கு பிச்சை வாத்தியார்தான் சீஃப் புரோகிதர். மணமக்கள் புகையில் அடிபட்டு கண்ணீரில் இருக்கும்போது, பிச்சை மட்டும் அக்கினிப் பிழம்பாக மந்திரங்களைக் கொட்டினான். அவன் ஒவ்வொரு முறை மந்திரம் ஓதி ‘ஸ்வாஹா’ என்று முடிக்கும்போதும், ‘‘கண்ணு எரியுதுடா, சீக்கிரம் முடிடா ஸ்வாஹா!’’ என்று நான் எரிகிற நெருப்பில் நெய்யை ஊற்றுவேன்.

திருமணத்தில் என் நான்கு அத்தைமார்கள் சுற்றி நின்றார்கள். என் மனைவி வெள்ளைக்காரர்கள் பள்ளியில் படித்ததால், ஒரு நாலைந்து வெள்ளைக்காரிகள் வந்திருந்தார்கள். தாலி கட்டி முடிந்ததும் ஒளிந்துகொள்ள முயன்ற என் கையைத் துரத்திப் பிடித்துக் குலுக்கினார்கள். என் நாலு அத்தைகளும் கோரஸாக, ‘‘கையைத் தொடுராளுகடி’’ என்று ஓலமிட, திருமணம் இனிதே முடிந்தது.

மறு வீடு முடிந்ததும் பிறந்த வீடு சென்ற மனைவிக்கு, என் வாழ்க்கையிலேயே முதலும் கடைசியுமான காதல் கடிதம் ஆங்கிலத்தில் எழுதினேன். பதிலே வரவில்லை. சில நாட்களில் மனைவி வந்ததும், லெட்டருக்கு பதில் போடாதது பற்றி கேட்டேன்.

‘‘இருங்க வர்றேன்’’ என்று சொல்லிப் போனவள், சிவப்பு மையால் நிறைய XXXXXXXகளைக் காண்பித்து, ‘‘இதென்ன ஸ்பெல்லிங்? கமா, ஃபுல் ஸ்டாப், வெர்ப் எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி இது என்ன லவ் லெட்டர்? லவ் எப்படிங்க வரும்?’’ என்றதும், ‘எழுவாய்... பயனிலை... செயப்படு பொருள் யாது?’ என்று நினைத்து, காதல் கடிதம் எழுதுவதை
அன்றைக்கு விட்டவன்... இன்றுவரை எழுதவில்லை.

நான் டெலிவரிக்கப்புறம் இருப்பேனோ இல்லையோ? உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுடறேன்டா’’ என்றார் அம்மா. என் திருமணம் நடந்தது. அதற்கு 65 நாட்களுக்குப் பின்தான் உலகநாயகன் பிறந்தார்.

(நீளும்...)

சாருஹாசன்