8,500 ரூபாய் விற்ற புற்றுநோய் மருந்து இப்போது 1,08,000ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் இந்தியர்கள் புற்றுநோயால் இறக்கிறார்கள். புதிதாக 10 லட்சம் புற்றுநோயாளிகள் உருவாகிறார்கள். உணவுமுறை, வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட மாற்றம், சுற்றுப்புறச் சீர்கேடு போன்ற காரணங்களால் 20ல் ஒருவருக்கு புற்றுநோய் பாதிக்கலாம் என்று சென்னை கேன்சர் இன்ஸ்டிடியூட் செய்த ஆய்வு சொல்கிறது. ஹார்ட் அட்டாக், கொலஸ்ட்ரால், நீரிழிவு, ஹெச்.ஐ.வி. போன்ற நோய்களும் மனித குலத்தை அழுந்த பீடித்துக் கொண்டிருக்கின்றன.

இப்படியான சூழலில்தான் மத்திய அரசு, அத்தியாவசியமான 108 மருந்துகளை விலைக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் பட்டியலில் இருந்து நீக்கியிருக்கிறது. சத்தமேயில்லாமல் இது நிகழ்ந்தது, பிரதமர் மோடி அமெரிக்காவுக்குப் பயணமாவதற்கு முதல் நாள். அமெரிக்காவின் அரசியல் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் பகாசுர மருந்து உற்பத்திக் கம்பெனிகளைத் திருப்திப்படுத்துவதற்காகவே இப்படியொரு நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்தது என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, அந்நிய நாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களே மருத்துவச் சந்தையில் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன. குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து... மருத்துவம் பற்றி மக்களுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லாததால் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்துக்கேற்ப மருந்துக்கு விலை வைக்கின்றன.

உதாரணத்துக்கு, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள் ஒரு நிறுவனத்தால் (10 மாத்திரைகள்) 25 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், மற்றொரு நிறுவனம் அதே மருந்தினை 385 ரூபாய்க்கு விற்கிறது. மருத்துவர்களும் மருந்தின் பெயரை எழுதாமல், குறிப்பிட்ட நிறுவனத்தின் பிராண்டைக் குறிப்பிட்டு எழுதி இதுபோன்ற மோசடிக்கு தெரிந்தோ, தெரியாமலோ துணை போகிறார்கள். உயிர் அச்சம் துரத்துவதால் மக்கள் இதிலெல்லாம் கவனம் செலுத்துவதில்லை. அதுவே மருந்து நிறுவனங்களுக்கு பலமாக அமைகிறது.

பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளுக்குக் காப்புரிமை பெற்றுவிடுகின்றன. அவர்கள் வைத்ததுதான் விலை. உள்நாட்டு நிறுவனங்கள் அந்த மருந்தை தயாரித்து விலைகுறைவாக விற்க முனைந்தால் நீதிமன்றத்தின் வழியாக முட்டுக்கட்டை போடுவார்கள்.

இதை உணர்ந்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, புதிய காப்புரிமைச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். அச்சட்டத்தின்படி, புதிய மருந்தை உருவாக்குவதற்கான செய்முறைக்கு மட்டுமே காப்புரிமை. மருந்துக்குக் காப்புரிமை இல்லை.

 அதனால் வெளிநாட்டு நிறுவனங்களின் காப்புரிமை பெற்ற மூலக்கூறு கலவையை வேறு செய்முறைகளின் வழியாகத் தயாரித்து இந்திய நிறுவனங்கள் குறைவான விலைக்கு விற்றன. அதன் தொடர்ச்சியாக 1978ல் மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையம் கொண்டு வரப்பட்டது. நிறுவனங்களின் கடும் எதிர்ப்பை மீறி 340 மருந்துகள் அதன்கீழ் பட்டியலிடப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டன. உலகிலேயே இந்தியாவில்தான் மருந்துகளின் விலை குறைவு என்ற நிலை உருவானது.

1994ல் ‘காட்’ ஒப்பந்தம் அமலுக்கு வந்தபிறகு நிலை மாறிவிட்டது. காப்புரிமைச் சட்டம் வலுவிழந்தது. விலைக் கட்டுப்பாட்டு ஆணையமும் செயலிழந் தது. திரும்பவும் மருந்துக் கம்பெனிகளின் ராஜ்ஜியம்... 2001ல் தோகாவில் நடந்த உலக வர்த்தக அமைப்பு மாநாடு, மருந்துக் கம்பெனிகளின் ஏகபோகத்தை சற்று தளர்த்தியது. ‘காப்புரிமை காரணமாக உயிர்காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டால், அல்லது கூடுதல் விலைக்கு விற்கப்பட்டால் காப்புரிமையைக் கருதாமல் அந்த நாடே மருந்தை உற்பத்தி செய்து மக்களுக்குக் கொடுக்கலாம்’ என்று முடிவெடுக்கப்பட்டது.

ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கல்லீரல் புற்றுநோய்க்கான  Sorafenip tosylate என்ற மாத்திரையைத் தயாரித்து காப்புரிமையையும் பெற்றது. ஒரு மாதத்துக்கான 120 மாத்திரைகளின் விலை 2.84 லட்சம். இதே மாத்திரையை ஒரு இந்திய நிறுவனம் தயாரித்து 8,800 ரூபாய்க்கு விற்றது. 2005க்குப் பிறகு, பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் அழுத்தத்தால் இந்திய காப்புரிமைச் சட்டம் மீண்டும் திருத்தப்பட்டு, விலைக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் கீழிருந்த கொஞ்சநஞ்ச மருந்துகளும் குறைக்கப்பட்டன.

இதனால் மருந்து களின் விலை பல மடங்கு அதிகரித்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ‘உடனடியாக அத்தியாவசிய மருந்துகளின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, முந்தைய மத்திய அரசு, மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையத்தை சற்று மேம்படுத்தியது. கடந்த மே மாதத்தில் 138 மருந்துகளையும், ஜூலை மாதத்தில் 108 மருந்துகளையும் அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

மருந்து கண்டுபிடிப்புச் செலவு, உற்பத்திச் செலவு உள்பட அனைத்தையும் கணக்கிட்டு, ‘அதைவிட 125% கூடுதல் விலை வைத்து விற்றுக்கொள்ளலாம்’ என விலை நிர்ணயிக்கப்பட்டது. அதன் மூலம் 35% வரை விலை குறைந்தது. ஆனால், மருந்து நிறுவனங்கள் இந்த ஆணையத்தையே அங்கீகரிக்கத் தயாரில்லை. நீதிமன்றங்களில் மாறி மாறி வழக்குகளைத் தொடுத்தார்கள்.

இறுதியில் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடையை எதிர்த்து வழக்காட வேண்டிய மத்திய அரசு, காதும் காதும் வைத்தாற்போல கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவையே திரும்பப் பெற்றுக்கொண்டது.

இதனால் புற்றுநோய், காசநோய், இதயநோய், எய்ட்ஸ் நோய்களுக்கான மருந்துகளின் விலை பலமடங்கு எகிறி விட்டது. 8,500 ரூபாய் விற்ற ரத்தப் புற்றுநோய்க்கான imatinib (Glivec) மாத்திரை இப்போது ரூ.1 லட்சத்து 8 ஆயிரம். ‘‘மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு இந்தியாவில் மிகவும் குறைவு. அதையே மூலதனமாக்கி மருந்து நிறுவனங்கள் கொள்ளை லாபம் பார்க்கின்றன.   Amikacin500   என்றொரு ஊசி...

இதன் உற்பத்திச் செலவு 7 ரூபாய். மொத்த விற்பனையாளர்களுக்கு 9 ரூபாய்க்கு விற்கிறார்கள். மருந்தகங்களுக்கு 12 ரூபாய்க்கு தரப்படுகிறது. ஆனால் மக்களுக்கு விற்கும் விலை 78 ரூபாய். இதுபற்றி யாரும் கேள்வி கேட்க முடியாது. இந்தியாவில் 4 கோடி நீரிழிவு நோயாளிகளும், நாலரைக் கோடி இதய நோயாளிகளும் 22 லட்சம் காசநோயாளிகளும், 25 லட்சம் பேர் ஹெச்ஐவி தொற்றோடும் இருக்கிறார்கள்.

நோய் உருவாவதற்கான காரணிகள் இங்கே மலிந்து கிடக்கின்றன. பெட்ரோலில் இருந்து வெளியேறும் பென்சீன் (Benzene ) என்ற ரசாயனம் ரத்தப் புற்றுநோயை உருவாக்கக்கூடியது. அமெரிக்கா போன்ற நாடுகளில், பென்சீன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் ‘வேப்பர் ரெக்கவரி சிஸ்டம்’ இருந்தால் மட்டுமே பெட்ரோல் பங்குகளுக்கு அனுமதி... இந்தியாவில் அப்படி எதுவும் இல்லை.

டெல்லியில், பெட்ரோல் பங்குகளைச் சுற்றி 2 கி.மீ தூரத்துக்கு மேற்கொண்ட ஒரு ஆய்வில், நிர்ணயிக்கப்பட்டதை விட 5 முதல் 10 மடங்கு அதிக பென்சீன் வெளியேற்றம் இருந்தது தெரிய வந்தது. இந்தியாவெங்கும் இதுதான் நிலை.

குறிப்பாக, தென்னிந்தியாவில் நுரையீரல் புற்றுநோய், இரைப்பை புற்றுநோய் அதிகமாகி வருகிறது. 880 ஆண்களில் ஒருவருக்கும், 460 பெண்களில் ஒருவருக்கும் தைராய்டு புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் உண்டு. 250 பேரில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் வரலாம் என்கிறார்கள். இப்படியான நேரத்தில் மருந்துகளின் விலை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உயர்வது மனித உரிமைக்கு எதிரான செயல்.

இதை ஒரு நாடு அனுமதிக்கக்கூடாது. ஒரு ஆண்டுக்கு 4 கோடி இந்தியர்கள் மருந்து செலவின் மூலமாகவே வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்படுகிறார்கள். இந்த விலை உயர்வு மேலும் மக்களைப் பாதிக்கும்’’ என்கிறார் டாக்டர் புகழேந்தி. நம்பிக்கைதான் நோயாளிகளுக்கு மருந்து. ஆனால், அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு பெரும் அவநம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. என்ன செய்யப் போகிறது அரசு?

ஒரு ஆண்டுக்கு 4 கோடி இந்தியர்கள் மருந்து செலவின் மூலமாகவே வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்படுகிறார்கள். இந்தச் சூழலில் மருந்துகளின் விலை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உயர்வது மனித உரிமைக்கு எதிரான செயல்.


வெ.நீலகண்டன்