25 வயது குறைந்த லிங்கா ரஜினி



இளமை... ஸ்டைல்...

எங்கெங்கும் பரபரக்கிறது ‘லிங்கா’ ஃபீவர். செம யங்... அண்ட் ஸ்டைலிஷ் ரஜினி பற்றி கோலிவுட் முழுக்க இனிக்கிறது பேச்சு. ‘லிங்கா’ ரஜினியை துள்ளும் இளமையாகப் படம் பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் ஆர்.ரத்னவேலுவுக்கு ‘‘ ‘லிங்கா’ பத்தி பேசலாமா?’’ என டெக்ஸ்ட் செய்தால், ‘‘போஸ்ட் புரொடக்ஷன்ல இருக்கேன்.

ஈவினிங் ஓகேவா?’’ என பதில் வந்தது. ‘‘எல்லாருக்குமே ஆச்சரியம். ‘ஒரு பீரியட் ஃபிலிமை இவ்ளோ சீக்கிரம்.. அதுவும் ரொம்ப குவாலிட்டியா எப்படி எடுத்தீங்க?’னு ஷங்கர் சார் கேட்டார். இப்படி ஒரு ஸ்பீடில் இதுக்கு முன்னே நான் வொர்க் பண்ணினதில்ல’’ - வியப்பும் புன்னகையுமாக பேச ஆரம்பித்தார் மனிதர்.

‘‘இந்தப் படத்துல நீங்க தான் வேணும்னு ரஜினி சாரே விரும்பினாராமே?’’

‘‘ஆமாம். ‘லிங்கா’ ப்ராஜெக்ட் தொடங்கலாம்னு முடிவானதும் கே.எஸ்.ஆர்கிட்ட ரஜினி கேட்டுக்கொண்ட விஷயங்களில் ஒண்ணு, ‘ரத்னவேலு கேமரா பண்ணணும்... அப்புறம், ரஹ்மான் இசையமைக்கணும்’ங்கிறதுதான். ‘எந்திரன்’ல அவரோட வொர்க் பண்ணின அனுபவத்தை வச்சு, எனக்கு இந்த வாய்ப்பு தேடி வந்திருக்குன்னு நினைக்கிறேன்.

கே.எஸ்.ஆர் சார் என்னைக் கூப்பிட்டப்போ, வேறொரு படத்துல கமிட் ஆகியிருந்தேன். ரஜினி சார் படம்னதும், உடனே விட்டுட்டு ஓடி வந்ததுக்குக் காரணம், நான் அவரோட தீவிர ஃபேன். அவரோட வொர்க் பண்றப்ப ஒரு வசதி இருக்கும். ‘சூப்பர் ஸ்டார்’ கூட வொர்க் பண்றோம்னு நமக்கு பயம் வந்துடக் கூடாதுன்னு ஒரு புதுப்பட ஹீரோ மாதிரி நடந்துக்குவார். கம்ஃபர்ட்டபிளா நம்மளை ஃபீல் பண்ண வைப்பார்!’’

‘‘ ‘எந்திரன்’ ரஜினி - ‘லிங்கா’ ரஜினி - கம்பேர் பண்ணுங்களேன்?’’

‘‘ ‘எந்திரன்’ ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன். ஸோ, அதுல சிட்டி ரஜினி கேரக்டருக்காகத்தான் மெனக்கெட்டோம். ‘லிங்கா’ அப்படியில்லை. பீரியட் ஃபிலிம். அதுவும், ரஜினி சார் ஹாஸ்பிட்டல்ல இருந்து, ரசிகர்கள் எல்லாரையும் கவலையில் ஆழ்த்தி, இப்ப மீண்டு எழுந்து நடிக்க வர்றார். ஸோ, ‘எனர்ஜியா இருப்பாரா?’ன்னு இண்டஸ்ட்ரி ஆட்கள்ல இருந்து ரசிகர்கள் வரை எல்லாருக்குமே ஒரு டவுட் இருந்தது. அதனாலதான், ‘ரஜினி சாரை ரொம்ப இளமையா, ஸ்டைலிஷா காட்டணும்’னு எங்க டீம்ல எல்லாருமே விரும்பினோம்.

அதுக்கு லைட்டிங் எப்படி இருக்கணும்? எந்த ஆங்கிள்ல கேமரா வச்சா நல்லா இருக்கும்னு என் பங்குக்கு நானும் கூடுதலா கவனம் எடுத்துக்கிட்டேன். ரஜினி சாருக்கு மேக்கப் பண்ற பானுவும் வித்தியாசமா நிறைய ட்ரை பண்ணாங்க. ஸ்பாட்ல ரஜினி சார் கம்ஃபர்ட்டபிளா ஃபீல் பண்ண கவனம் எடுத்துக்கிட்டோம். அவரோட தேவைகளை கவனிக்க ஒரு டீமே அவர் கூட இருந்தாங்க.

காலையில ஆறு மணிக்கு ஷூட்டிங் வச்சாலும், ரஜினி சாரை பத்து, பதினொரு மணிக்குத்தான் ஸ்பாட்டுக்கு வரச் சொல்வோம். ஆனாலும் அவர் அரை மணி நேரத்துக்கு முன்னாடியே வந்து கேரவன் கூட போகாம வெயிட் பண்ணிட்டிருப்பார். அதான் ரஜினி சார்! முதல்நாள் ஷூட்டிங்ல அவர் மேக்கப் போட்டு வந்து நின்ன அன்னிக்கே அசந்துட்டோம்! படத்துல ஓபனிங் ஸாங்கான ‘ஓ நண்பா...’ பாட்டை சமீபத்தில்தான் எடுத்தோம். அது, செம மாஸ் அண்ட் க்ளாஸா வரணும்னு ஜாஸ்தி கவனம் செலுத்தினோம். அவரோட எனர்ஜியைப் பார்த்து அசந்துட்டோம்.

1990கள்ல வந்த ரஜினி மாதிரி அவ்வளவு உற்சாகம்! 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இளமை ரஜினியா இப்ப அவர் இருக்கார். இந்த வேகத்துக்கு அவர் இன்னும் நாலு படம் ஒரே சமயத்துல நடிக்கலாம்!’’

‘‘படத்தை ரஜினி சார் பார்த்துட்டாரா? என்ன சொன்னார்?’’

‘‘முழுப்படமும் பார்த்து, ‘திருப்தியா இருக்கு’ன்னார். படத்தோட ட்ரெய்லர், பாடல்கள் எல்லாம் பார்த்துட்டு, ஷங்கர் சாரே, ‘ரஜினி சாரை எப்படி இவ்வளவு யங்கா காட்டியிருக்கே?’ன்னு ஆச்சரியமானார்!’’‘‘இத்தனை சீக்கிரத்தில் ஒரு பீரியட் ஃபீலிம்... எல்லாருக்குமே இது ஆச்சரியம். எப்படி இது சாத்தியமாச்சு?’’‘‘பக்கா ப்ளானிங். ஸ்கிரிப்ட் ரெடியா இருந்தது. ஆனா, வொர்க் ப்ரெஷர் ஜாஸ்தி. ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிஞ்சதும் ‘நாளைக்கு என்ன ஷாட், என்ன தேவை’ன்னு டீம் எல்லோரும் சேர்ந்து பேசி ரெடி பண்ணுவோம்.

பிரமாண்டமான அணை, ஆயிரம் பேர் க்ரௌடு, யானைகள், லொகேஷன்ல மழைன்னு எத்தனையோ ப்ரெஷர். நம்பவே முடியாத பல விஷயங்கள் சில மணி நேரங்கள்ல சாத்தியமான அதிசயமெல்லாம் ‘லிங்கா’ ஷூட்டிங்லதான் நடந்துச்சு. லிங்கேஸ்வரன் ரஜினிக்கு ஒரு ரயில் ஃபைட் இருக்கு. செம மிரட்டலா வந்திருக்கு. லீ விட்டோகர்னு ஒரு ஹாலிவுட் ஃபைட் மாஸ்டர் பண்ணிக் கொடுத்த அந்த ஃபைட் படத்துல நிச்சயம் பேசப்படும். அதில் அவரோட சேர்ந்து நானும் என் பங்குக்கு மிரட்டியிருக்கேன்.

வழக்கமான பீரியட் ஃபிலிம்னா கலர் டோன் வித்தியாசமா இருக்கும். பிளாக் அண்ட் வொயிட் ஃப்ளேவர்தான் வச்சிருப்பாங்க.. ஆனா, இதில் கலர்ல வித்தியாசப்படுத்தியிருக்கேன். ஷிமோகாவில் ஷூட்டிங் நடந்தபோது மழை விடாது பெய்யும். லொகேஷன் டென்ஷன் ஒரு பக்கம். மறுபக்கம் சீக்கிரம் முடிக்கணும்ங்கற டென்ஷன். லைட் வச்சா, மழை தண்ணி பட்டு, அடிக்கடி ஃப்யூஸ் போயிடும். பலூன் லைட் வச்சா, மழைக்காத்துல அதைப் பிடிக்கிறவரும் சேர்ந்து ஆடுவார்.

எல்லாத்தையும் விட ‘படம் நல்லா வரணும்’னு ரஜினி சார் ரிஸ்க் எடுத்திருக்கார். அணை சீன் எல்லாம் டாப் ஆங்கிள்ல காட்டியிருக்கேன். அங்கேயும் செம மழை. நூறு பிளாஸ்டிக் ஷீட்ஸ் வாங்கி வச்சிக்குவோம். ஒவ்வொரு சீட் கீழேயும் அம்பது பேராவது மழைக்கு ஒதுங்கி நிற்பாங்க. மழை லேசா விட்டதும் உடனே ஷீட்டை வீசி எறிஞ்சிட்டு ஷாட்டுக்கு வந்து நிப்பாங்க... பிரமிப்பா இருக்குங்க... சொல்றதுக்கே!’’

‘‘ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹான்னு செம அழகான பொண்ணுங்க கூட வொர்க் பண்றீங்களே?’’

‘‘2500 விளம்பரப் படங்கள் பண்ணியிருக்கேன். ஏஞ்சலினா ஜோலியா இருந்தாலும், ஐஸ்வர்யா ராயா இருந்தாலும், அழகா காட்டினாதான் ரசிகர்களுக்குப் பிடிக்கும். சோனாக்ஷி சின்ஹா, பாலிவுட்ல பெரிய பேக்ரவுண்ட்ல இருந்து வந்தவங்க. ரொம்ப மரியாதையா இருப்பாங்க. காலையில ஸ்பாட்டுக்கு வந்ததும் குட்மார்னிங் சொல்வாங்க.

மேக்கப்ல கரெக்ஷன்ஸ் சொன்னா கூட கேட்டுக்குவாங்க. அனுஷ்கா வெரி பிரெட்டி. ஸ்பாட்டுல கலகலனு இருப்பாங்க. சோனாக்ஷியோ, அனுஷ்காவோ... ஸ்பாட்ல யார் இருந்தாலும் பேசி சிரிக்க நேரம் இருக்காது. அடுத்தடுத்த சீன், ப்ரெஷர், டென்ஷன் தான் மைண்ட்ல ஓடிட்டிருக்கும்!’’

‘‘ரஜினி சாரும் நீங்களும் திக் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டீங்களாமே?’’

‘‘அவருக்கு என்னைப் பிடிக்கும். எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். ஸ்பாட்டில் கிடைக்கிற கேப்ல அவர்கிட்டே நிறைய பேசிட்டிருப்பேன். ஆனா, அதையெல்லாம் இப்போ சொல்ல முடியாது. ரொம்ப சீக்ரெட்!’’

- மை.பாரதிராஜா

ஒளிப்பதிவாளர் ஆர்.ரத்னவேலு