உதவிசெயின் திருட்டு நமக்கு இன்னிக்கு நேத்து பழக்கமா? இதோ இன்னிக்கு புதுசா ஒரு ப்ளானோட வந்திருக்கேன்... கேளு!’’ எனத் தன் கூட்டாளி முத்துவிடம் விவரித்தான் காசி.‘‘நெருக்கடியான ஒரு ரோடு கிராஸிங்தான் நம்ம கைவரிசையைக் காட்டப் போற இடம்.

அந்த சிக்னல்ல பொம்பளைங்க மொத்தமா ரோட்டை கிராஸ் பண்ண நிக்கும்போது, நீ குருடன் மாதிரி குச்சி ஒண்ணை வச்சிக்கிட்டுப் போ. எந்தப் பொம்பள கழுத்துல கனமா நகை போட்டிருக்கோ அது பக்கத்துல போய், ரோடு கிராஸ் பண்ண கஷ்டப்படுற மாதிரி ஆக்ட் குடு. அவங்க உதவி செய்ய வரும்போது, சடார்னு கழுத்து செயினை அறுத்துக்கிட்டு எதிர்ப்பக்கம் வந்துடு. நான் டூ வீலரை ஸ்டார்ட் பண்ணி வச்சிக்கிட்டு தயாரா இருப்பேன். எப்படி..?’’

‘‘இந்த ஐடியா வேணாம்டா!’’ என்றான் முத்து.‘‘ஏன் மச்சி?’’

‘‘இப்படிப் பண்ணினா, நாளைக்கு நிஜமாவே கண்ணு தெரியாதவங்க ரோட்டுல கஷ்டப்படும்போது, யாருமே உதவி பண்ண பயப்படுவாங்க. நமக்கு ஆயிரம் ஐடியா கிடைக்கும்... ஜனங்களோட உதவி செய்யிற குணத்தை மாத்துற மாதிரி ஏன் நடந்துக்கணும்? நாளைக்கு நமக்கே ஒரு ஆபத்துன்னாலும் நாலு பேரு கை கொடுக்கணும் இல்ல!’’முத்துவை ஆமோதித்தான் காசி.

என்.அம்புஜம்