ஜீவனாம்சம் ஏன்? எப்படி? எவ்வளவு?‘‘நீ குடி... கூத்தாடு... சின்ன வீடு வச்சிக்கோ... ஆனா நானும் எம் புள்ளைகளும் கஞ்சி குடிக்க ஒரு வழியைச் சொல்லிட்டுப் போ’’ எனப் பெண்கள் கண்ணீரும் கம்பலையுமாக சொல்லும் வசனத்தைக் கேட்டிருப்போம்.


பல குடும்பங்களில் இதுதான் வாழ்வின் நிதர்சனம். கணவனால் நிராதரவாக விடப்படும் மனைவி, பிள்ளைகள், கடைசிப் பிடிமானமாக நம்பியிருப்பது அவன் தரும் ஜீவனாம்சத்தைத்தான். ஜீவனாம்ச சட்டம் தொடர்பான சந்தேகங்களை சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பிரசாத்திடம் கேட்டுப் பெற்றோம்...

ஜீவனாம்சம் என்றால் என்ன?

குற்ற நடைமுறைச் சட்டமான சி.ஆர்.பி.சியில் 125வது சட்டம்தான் ஜீவனாம்சம் தொடர்பான பல்வேறு விதிகளைச் சொல்கிறது. அதன்படி, ஒரு மனைவி கணவனிடம் கேட்பது மட்டுமல்ல... ஒரு மகன் பெற்றோரிடமும், பெற்றோர் தன் பிள்ளைகளிடமும் கேட்பது கூட ஜீவனாம்சமாகத்தான் கருதப்படும். வருமானமோ வாய்ப்புகளோ இல்லாத தங்களை அவர்கள் பராமரிக்கத் தவறும்போது, நீதிமன்றத்தை அணுகிக் கேட்கும் நிவாரணத் தொகை ஜீவனாம்சம்தான்.

யார் தொடுக்கலாம்?

ஒரு கணவன் ஒரு மனைவியையோ அல்லது குழந்தைகளையோ பொருளாதார ரீதியில் பராமரிக்கத் தவறும்போது, சி.ஆர்.பி.சி 125 சட்ட விதிக்குள் ஒரு மனைவி வழக்கு தொடுக்கலாம். இதற்கு அவர்கள் விவாகரத்து வழக்கு போட்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், ஏற்கனவே விவாகரத்து ஆனவர்களும் இந்த சட்ட விதியை உபயோகித்து ஜீவனாம்சம் கேட்கலாம்.

எங்கு தொடுக்கலாம்?


ஜுடிஷியல் மேஜிஸ்திரேட் கோர்ட் எனப்படும் குற்றவியல் நீதிமன்றங்களில்தான் இந்த வழக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், பாதிக்கப்பட்ட நபர்கள் குடும்ப நீதிமன்ற எல்லைக்குள் இருப்பின், அங்கேயே ஜீவனாம்ச வழக்குகளைப் பதிவு செய்யலாம். எந்த மதத்தைச் சார்ந்தவர்களாலும் இந்த 125வது சட்ட விதியைப் பயன்படுத்த முடியும். ஆனால், மறுமணம் செய்த பெண்கள், முதல் கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெற முடியாது.

எவ்வளவு பெற முடியும்?

அதிகபட்ச ஜீவனாம்ச தொகை எவ்வளவும் இருக்கலாம். ஒரு கணவனின் வசதி, வாழ்க்கைத் தரம், சொத்து மதிப்பு, வருமானத்துக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுகிறது. மாதா மாதம் கொடுக்கப்படுவது போல், ‘ஒன் டைம் ஜீவனாம்சம்’ பற்றியும் அரசு யோசித்து வருவதாகச் செய்தி இருக்கிறது. இதை ‘பெர்மனென்ட் அலிமனி’ என்பார்கள்.

இடைக்கால ஜீவனாம்சம்:

கணவன் - மனைவிக்கு இடையில் விவாகரத்து வழக்கோ, சேர்ந்து வாழ வேண்டும் என்ற வழக்கோ, அல்லது திருமணம் செல்லாது போன்ற வழக்கோ... இப்படி பல்வேறு பிரச்னைகள் குடும்ப நீதிமன்றத்தில் வழக்காக நீடிக்கலாம். இந்தக் கால கட்டத்தில் அந்த மனைவி தன்னையும் தன் பிள்ளைகளையும் பராமரிக்க ஒரு தொகையை நீதிமன்றம் மூலம் கேட்டுப் பெற முடியும்.

இதை இடைக்கால ஜீவனாம்சம் எனலாம். ஆனால், இந்த இடைக்கால ஜீவனாம்ச வழக்கை சி.ஆர்.பி.சி 125 சட்டப் பிரிவுக்குள் பதிய முடியாது. ‘பர்சனல் லா’ என்று சொல்லப்படும் மதச் சார்பான திருமணச் சட்டங்களின் கீழ்தான் தொடுக்க வேண்டும். குற்றவியல் நடைமுறை நீதிமன்றங்களிலோ அல்லது குடும்ப நீதிமன்றங்களிலோ இந்த வழக்குகளைத் தொடுக்கலாம்.

குடும்ப வன்முறைச் சட்டத்தில் ஜீவனாம்சம்:

மனைவியை அடித்துக் காயப்படுத்தல்; குழந்தைகளின் படிப்பை இடையூறு செய்தல்; வீட்டிலிருந்து மனைவி, பிள்ளைகளை அப்புறப்படுத்துதல்; மருத்துவ வசதிகளைத் தவிர்த்தல்; பட்டினி போடுதல் போன்ற செயல்களை குடும்ப வன்முறையாக இந்தியாவின் விசேஷ சட்டம் வரையறுக்கிறது.

கணவன் மீது தான் தொடுக்க இருக்கும் மற்றைய வழக்குகளுக்கு முன்பு, இந்த சட்டத்தின்படி ஒரு மனைவி இடைக்கால ஜீவனாம்சம் கேட்க உரிமையுடையவர். இந்த வழக்கை ஒரு குற்றவியல் நீதிமன்றத்தில்தான் தொடுக்க முடியும். காரணம், இது முழுமையான குற்ற நடவடிக்கை தொடர்பானது.

பெற்றோர் - பிள்ளை:


பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தங்களைப் பராமரிக்காதபோது, 2007ல் இயற்றப்பட்ட ‘சீனியர் சிட்டிசன் ஆக்ட்’ சட்டப்படி, ரூபாய் பத்தாயிரத்துக்கும் குறைவான ஜீவனாம்சத் தொகை கேட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு செய்யலாம். குழந்தைகளைப் பொறுத்தளவில், தங்கள் பெற்றோர் தங்களைப் பராமரிக்காதபோது ஜீவனாம்சம் கேட்கலாம். இதற்கு பெண்கள் வழக்கமாக ஜீவனாம்சத்துக்கு தாக்கல் செய்யும் சட்டவிதிப்படியே மனு தாக்கல் செய்யலாம்.

ஜீவனாம்சம் தர முடியாவிட்டால்...

‘ஐயா... நான் தெருவில் இருக்கிறேன். என்னால் எப்படி ஜீவனாம்சம் தர முடியும்?’ என கோர்ட்டில் வாதிடவே முடியாது. கணவன் என்றால் பிச்சை எடுத்தேனும் ஜீவனாம்சத் தொகையைக் கொடுத்தே ஆக வேண்டும். ஜீவனாம்சத் தொகை எவ்வளவு என்பது கணக்கல்ல. அவன் மனைவி, பிள்ளைகளைப் பராமரிக்கிறானா என்பதே ஜீவனாம்ச சட்டத்தின் தாத்பரியம்.

டி.ரஞ்சித்
படம்: ஆர்.சி.எஸ்