சகுனியின் தாயம்‘‘இதை அனுமதிக்கவே கூடாது...’’ கதிர் கொந்தளித்தான். அவன் முகமெல்லாம் சிவந்திருந்தது.‘‘என்ன தைரியம் இருந்தா மூன்று கிராமங்கள் எரிஞ்சு சாம்பலான இடத்துல ‘மெடிகோ’ நிறுவனத்தை கட்டப் பார்ப்பாங்க? எலும்புத்துண்டை வீசி எறியறா மாதிரி வீட்டுக்கு ஒருத்தருக்கு வேலை கொடுத்துட்டா... எல்லாம் முடிஞ்சதா நினைப்பா? பணக் கொழுப்பு. அதனாலதான் மக்களை இப்படி கிள்ளுக்கீரையா நினைக்க வைக்குது. இதை இப்படியே விடக் கூடாது.

மக்கள் சக்தின்னா என்னன்னு ஆளும் வர்க்கத்துக்கு புரிய வைக்கணும்...’’ - கைகளை பரபரவென்று தேய்த்துக் கொண்ட கதிர், தன் எதிரில் இருந்த ரங்கராஜனையும், தமிழரசனையும் பார்த்தான்.

அவர்கள் இருவரும் அவனையேதான் கவனித்துக் கொண்டிருந்தார்கள். சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த தேன்மொழியின் பார்வையும் அவன் மீதே பதிந்திருந்தது. மூவர் பக்கமும் தன் கண்களை மாறி மாறி திருப்பியவன், பற்களைக் கடித்தான்.

‘‘வீட்டுக்கு ஒருத்தருக்கு வேலையாம்... என்னமா நாடகம் ஆடறாங்க? மேனேஜர், சூப்பர்வைசர் வேலையா தரப் போறான்? மிஞ்சி மிஞ்சிப் போனா லேபரா சேர்த்துக்கப் போறான்... நாலாயிரமோ,

ஐந்தாயிரமோ மாதச் சம்பளமா கொடுத்து மொத்தமா வாயை அடைக்கப் போறான். அவங்க திட்டம் என்னன்னு புரிஞ்சு போச்சு. டிரெய்னின்னு சொல்லி யாரையும் பர்மனென்ட் பண்ணாம பத்து, பன்னிரெண்டு வருஷங்கள் ரத்தத்தை சக்கையா உறிஞ்சப் போறான். பி.எஃப், கிராஜுவிட்டி, இஎஸ்ஐ-னு தொழிலாளர்களுக்கு உரிய எந்த உரிமையும் கிடைக்காதபடி செய்யப் போறான்...’’சொம்பிலிருந்த நீரை ஒரே மடங்கில் குடித்தவன், தன் சட்டைக் காலரால் வாயைத் துடைத்துக் கொண்டான்.

‘‘இது தினமும் நம்ம அமைப்போட தொழிற்சங்கப் பிரிவு சந்திக்கிற தலையாய பிரச்னை தோழர். தற்காலிக ஊழியர்களை அமைப்பா திரட்டவும் முடியாம, அவங்களுக்கான உரிமைகளை பெற்றுத் தரவும் முடியாம தவிக்கறோம். உட்கட்சில இது குறித்துத்தான் விவாதமே நடக்குது. அவங்களை நிரந்தர ஊழியர்களாக்கச் சொல்லி போராட்டம் நடத்திட்டு இருக்கோம்... புரிஞ்சுடுச்சு தோழர்... ஸ்காட் வில்லியம்ஸோட திட்டம் என்னன்னு தெளிவா தெரிஞ்சுடுச்சு. விடக் கூடாது தோழர்... மக்கள் எழுச்சி எப்படியிருக்கும்னு ஆளும் வர்க்கத்துக்கு காட்டணும்...’’

‘‘எப்படி..?’’ நிதானமாகக் கேட்டான் ரங்கராஜன்.
திடுக்கிட்ட கதிர், கனவுலகிலிருந்து மீண்டது போல் விழித்தான். ‘‘தோழர்...’’
‘‘மக்கள் திரளை எப்படி கட்டி அமைக்கப் போறீங்க..?’’
‘‘சொன்னேனே... அரசாங்கத்தோட திட்டம் இதுதான்னு அவங்ககிட்ட அம்பலப்படுத்துவோம்...’’

‘‘அதுதான் எப்படின்னு கேட்கறார்...’’ தமிழரசனின் குரல் அழுத்தமாக ஒலித்தது.
‘‘பிரசாரம் மூலமா...’’ சொல்லும்போதே கதிரின் குரலில் சுருதி குறைந்தது.

‘‘எப்படி? மேனேஜர், சூப்பர்வைசர் வேலை தர மாட்டாங்கன்னா... அப்ப இந்த ரெண்டு போஸ்ட்டும் கொடுத்தா ‘மெடிகோ’ நிறுவனத்துல வேலைக்கு சேரலாமா?’’
‘‘தோழர்...’’‘‘உங்க ஆவேசம் சரி. ஆனா, அதுக்காக நீங்க சொல்ற தீர்வுல அவ்வளவு முரண்பாடு இருக்கு...’’
‘‘புரியுது தோழர்...’’

‘‘என்ன புரியுது..?’’
கதிர் தலைகுனிந்தான்.
‘‘முதல்ல ஒரு விஷயத்தை மறக்காதீங்க. மூன்று கிராமங்களை எரிச்சது ஸ்காட் வில்லியம்ஸோட ஆட்களோ, அரசாங்கமோ இல்லை. சாதி வெறி பிடிச்ச மனித மிருகங்கள்...’’
‘‘...’’

‘‘சமூகத்துல புரையோடிப் போயிருக்கிற இந்த சாதி அமைப்புகள் இருக்கிறவரைக்கும் ‘மெடிகோ’ மாதிரியான பன்னாட்டு நிறுவனங்களும், ஆளும் வர்க்கங்களும் குளிர்காய்ந்துகிட்டேதான் இருப்பாங்க. தங்களோட வசதிக்கு தகுந்தா மாதிரி சாதி அமைப்பு களைப் பயன்படுத்திக்கிட்டு இருப்பாங்க. அதனாலதான் சாதி மறுப்பு திருமணங்களை தந்தை பெரியார் ஊக்குவிச்சார். மார்க்சிய - லெனினிய அமைப்புகளும் அதைத்தான் தீர்வா முன்வச்சுக்கிட்டு இருக்கு...’’

‘‘...’’‘‘இழப்பீடா வீடு கட்டித் தர்றோம்னு சொல்லி வாயை அடைக்கறாங்க. அந்த வீட்டை முன்னாடி இருந்த இடத்துலயே கட்டித் தரணும்னு குரல் கொடுக்கணும்...’’
‘‘...’’‘‘முக்கியமா ‘மெடிகோ’ நிறுவனம் வெறும் மருந்து தயாரிக்கிற கம்பெனி இல்ல... ‘ரெட் மார்க்கெட்’ பிசினஸ்தான் அவங்களோட குறிக்கோள்னு ஆதாரத்தோட அம்பலப்படுத்தணும். பாதிக்கப்பட்ட மூன்று கிராம மக்களை ஒன்று திரட்டி போராடினா மட்டும் போதாது. தமிழகம் முழுக்க இதுக்கு ஆதரவு திரட்டணும். ஏற்கனவே இது தொடர்பா நாம பாடம் படிச்சிருக்கோம். நினைவுல இருக்கா?’’‘‘இருக்கு தோழர். கூடங்குளத்தைத்தானே சொல்றீங்க?’’ ரங்கராஜன் பதில் சொன்னான்.

‘‘ஆமா. அணு உலைக்கு எதிரான பிரசாரத்தை திட்டமிட்டு அந்த ‘ஏரியா’ பிரச்னைனு சுருக்கி இடிந்தகரை மக்களை தனிமைப்படுத்திட்டாங்க. நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட இதுக்கு ஆதரவு தெரிவிக்கலைங்கறது எவ்வளவு பெரிய சோகம்? பக்காவா திட்ட மிட்டு தமிழகம் முழுக்க மின்வெட்டை அமல்படுத்தி, ‘மின்சாரம் இல்லைனா என்ன ஆகும் பாருங்க... இதை தவிர்க்கத்தான் அணு மின் உற்பத்தில அரசு ஈடுபடுது’ன்னு சொல்லாம சொல்லி ஒட்டுமொத்த தமிழக மக்களையும் தங்களுக்கு சாதகமா திருப்பிட்டாங்க...’’

‘‘ம்...’’
‘‘இதே வேலையைத்தான் இப்ப தர்மபுரிலயும் செய்யப் போறாங்க. இந்த முறை நாம ஏமாறக் கூடாது. தமிழகத்துல இருக்கிற அனைத்து உழைக்கும் வர்க்கத்தையும் ஒன்று திரட்டி முழுமூச்சோட போராடியே ஆகணும்...’’‘‘செய்துடலாம் தோழர்...’’‘‘எப்படி செய்யப் போறீங்க?’’

கேட்ட தேன்மொழியை மூவரும் உற்றுப் பார்த்தார்கள். அதே ‘எப்படி’தான். ரங்கராஜனும் தமிழரசனும் தனித்தனியே கதிரிடம் கேட்டதற்கும், இப்போது தேன்மொழி மூவரை நோக்கி வினவுவதற்கும் வித்தியாசம் இருந்தது. அதை மூவரும் உணர்ந்து கொண்டார்கள். ‘‘நாங்க சொல்றதுலேந்து நீங்க மாறுபடறீங்களா தோழர்?’’ - தமிழரசன் குரலில் கோபமோ, எரிச்சலோ இல்லை. தவறு இருந்தால் சுயபரிசீலனை செய்து அதை திருத்திக் கொள்ள தயாராக இருக்கும் பாங்கே தொனித்தது.‘‘ஆமா...’’‘‘இதைத் தெளிவுபடுத்த முடியுமா?’’

‘‘முடியும். இதுவரைக்கும் நம்ம நடவடிக்கை, போராட்ட வழிமுறை... இது எல்லாத்தையும் தீர்மானிச்சது நாம இல்லை. அரசு. அவங்க இழுத்த இழுப்புக்கு நாம போய்க்கிட்டு இருக்கோம்...’’

‘‘அதாவது சுயமா நாமா எதையும் முன்னெடுத்து செய்யலைன்னு குறிப்பிடறீங்க... அப்படித்தானே?’’‘‘யெஸ்... இப்படி சொல்றனேன்னு என்னை தப்பா நினைக்காதீங்க...’’

‘‘போராட்ட யுக்திகளைப் பத்தி விவாதிக்கிறப்ப தப்பு, சரின்னு பார்க்கக் கூடாது. இயல்பா இருங்க. மனசுல பட்டதை சொல்லுங்க...’’‘‘நன்றி தோழர். சொல்ல வந்தது இதுதான். எப்படி ரஷ்ய, சீன புரட்சிகள்ளேந்து நாம பாடம் படிச்சிருக்கோமோ அப்படி ஆளும் தரப்பும் கத்துக்கிட்டிருக்கு. அதனாலதான் மக்களை நாம எப்படி அணி திரட்டி போராடுவோம்னு புரிஞ்சுகிட்டு அதுக்கு தகுந்தா மாதிரி காயை நகர்த்தறாங்க...’’

‘‘ம்...’’‘‘இப்ப கூட ‘மெடிகோ’வை தடுத்து நிறுத்த புரட்சிகர குழுக்கள் எப்படியும் களத்துல இறங்கும்னு ஆளும் தரப்புக்கு தெரியும். நிச்சயமா நாம செயல்ல இறங்கறதுக்கு முன்னாடி அடுத்த அடியை எடுத்து வைச்சுடு வாங்க. மக்களோட மனநிலையை தங்களுக்கு சாதகமா திருப்பிடுவாங்க...’’தமிழரசன் எதுவும் பேசவில்லை.

அமைதியாக இருந்தார். தேன்மொழி சொல்வது சரியென்றே ரங்கராஜனுக்கும் கதிருக்கும் தோன்றியது. ஆனால் -எந்த வகையில் ஆளும் தரப்பு அடுத்தடுத்து நகரும் என்றுதான் அவர்களால் சட்டென்று ஊகிக்க முடியவில்லை. புரிந்தபோதோ - வெள்ளம் தலைக்கு மேல் போயிருந்தது.

தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருந்துகளும், உபகரணங்களும் இல்லாததால், பிறந்து சில நாட்களேயான பன்னிரெண்டு பச்சிளங் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தார்கள் என்ற செய்தி அவர்களை எட்டியபோது -ஸ்காட் வில்லியம்ஸ் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தான்.‘‘மருந்து தயாரிக்கிற கம்பெனியை தொடங்கக் கூடாதுன்னு இனி தமிழ்நாட்டுல ஒருத்தனும் சொல்ல மாட்டான்!’’ ‘‘பீஷ்மா... என்ன காரியம் செய்துவிட்டாய்?’’ அலறிய முதிய சார்வாகனர், ஓடினார்.

அங்கே -உடலெங்கும் அம்புகள் தைத்ததால், அம்புப் படுக்கையின் மீது படுத்திருப்பது போல் இளைய சார்வாகனர் தரையில் வீழ்ந்திருந்தார்.உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. இளையவனின் தலையைக் கோதியபடி பீஷ்மரை நோக்கி ஆவேசமாகத் திரும்பினார் முதியவர்.‘‘ஓநாயைப் போல் ஏன் இப்படி ரத்த வெறி பிடித்து அலைகிறாய்...

’’‘‘குரு வம்சத்தை காக்க வேறு வழி தெரியவில்லை சார்வாகனரே...’’‘‘குரு வம்சமா? எது குரு வம்சம்..? வெவ்வேறு உயிரணுக்களின் விரிவுதானே நீ பொத்திப் பொத்தி பாதுகாக்கும் பாண்டவர்களும், கௌரவர்களும்... அப்படியிருக்க வம்சம் என்று எதைச் சுட்டிக் காட்டுகிறாய்..? யாரை ஏமாற்ற நாடகமாடுகிறாய்..? நிகழ்விலிருந்து உண்மைகளைக் கண்டறிய முடியாது என்றா நினைக்கிறாய்..?’’

‘‘உங்களுடன் விவாதிக்க எனக்கு விருப்பமில்லை. அரசைக் காப்பாற்ற வேண்டியது என் கடமை...’’‘‘அரசு... எது அரசு... போர்வீரர்களும், அமைச்சர் பிரதானிகளும், நீதித்துறையுமா? இந்த மூன்றும் செல்வந்தர்களுக்கான உறுப்புகள் என்று கூடவா எங்களுக்குத் தெரியாது... மக்களிடமிருக்கும் மொத்த குருதியையும் அட்டைப் பூச்சியைப் போல் உறிஞ்சி எடுக்கும் கூட்டத்துக்கு பெயர்தானே அரசு? பீஷ்மா... அந்த இடையனைவிட ஆபத்தானவன் நீதான்.

கிருஷ்ணனாவது தன்னையும் அரசனாக ஏற்கும்படி சத்திரியர்களுடன் மல்லு கட்டுகிறான். ஆனால், நீ..? அரச பதவி வேண்டாம் என்று மேலுக்கு அறிவித்துவிட்டு உண்மையில் என்ன செய்கிறாய்? முழு நிலத்தையும் கட்டி ஆள்கிறாய்.

பதவி தேவையில்லை என்று சொல்பவர்களைவிட, பொம்மையாக ஓர் அரசனை நியமித்துவிட்டு அவன் பெயரால் மொத்த பேரரசையும் தன் அசைவுக்கு ஏற்ப ஆட்டுவிப்பவன்தான் கடைந்தெடுத்த அயோக்கியன். இது மனிதகுலத்தின் சாபம். அதனால்தான் வரலாறு முழுக்க உன்னைப் போன்ற வேடதாரிகள் நிரம்பியிருக்கிறார்கள்...’’‘‘சார்வாகனரே...’’

‘‘கத்தாதே. குரலை உயர்த்தும் தகுதி உனக்கில்லை. பதவியைத் துறந்த மாமனிதன் என இந்த அஸ்தினாபுரி மக்கள் உன்னை மதிக்கிறார்கள். அதனாலேயே உன் சொல்லுக்குக் கட்டுப்படுகிறார்கள். இவையெல்லாமே நாடகம்தான் என்பது ஒருநாள் அவர்களுக்குத் தெரியத்தான் போகிறது. எப்படி தெய்வம் என்றே ஒன்று இல்லையோ, அப்படி உன்னைச் சுற்றி நீ கட்டி எழுப்பியிருக்கும் புனித பிம்பமும் வெறும் மாயைதான். நீர்க்குமிழி போல் ஒருநாள் அது வெடிக்கத்தான் போகிறது.

அன்று நீ இந்த இளைய சார்வாகனரை நினைத்து நினைத்து கண்ணீர் வடிக்கப் போகிறாய். பஞ்ச பூதங்களையும் சாட்சியாக வைத்து உனக்கு சாபமிடுகிறேன். உண்மைகளைத் தெரிந்து கொண்டதால்தானே அம்பு மழையில் இவனைப் படுக்க வைத்திருக்கிறாய்? இதே போல்தான் உன் உடலிலும் அம்புகள் தைக்கப் போகின்றன. உயிரும் பிரியாமல், வலியையும் பொறுக்க முடியாமல் நீ கதறப் போகிறாய். இது சத்தியம்...’’

‘‘ஹேய்... அது ராஜகுமாரி தானே?’’ மகேஷ் கத்தினான்.‘‘அதே. அதே. யாரைக் காப்பாத்தணும்னு நீ வந்தியோ அதே ராஜகுமாரிதான்...’’ ஹாரி பார்ட்டர் சிரித்தான்.
‘‘ஆனா, ஏழு கடல், ஏழு மலை தாண்டித்தானே இருக்கணும்?’’‘‘உன் மூஞ்சி. அப்படி கண்காணா தொலைவுல இருக்கறது மந்திரவாதியோட உயிர்...’’ ஸ்பைடர்மேன் செல்லமாக அவன் தலையில் குட்டினான்.‘‘ச்சூ.

தலைல அடிக்காத. எனக்கு பிடிக்காது...’’ என்று சொன்ன மகேஷ், மற்றவர்கள் சுதாரிப்பதற்குள் செயலில் இறங்கினான். மடமடவென்று அங்கிருந்த மரத்தின் மீது ஏறியவன், இமைக்கும் நேரத்தில் கூண்டின் அருகில் சென்றான்.

‘‘மகேஷ்... கிட்ட வராதே...’’ ராஜகுமாரி கத்தினாள்.‘‘ஏன்?’’‘‘கம்பில கரன்ட் பாயுது...’’‘‘மின்சாரமா?’’‘‘ஆமா. நீர் மின்சாரம். அருவில கொட்டற தண்ணீரை வைச்சே மந்திரவாதி கரன்ட்டை தயாரிக்கறான். அதை இந்த கூண்டுக்குள்ள பாய விடறான்...’’
‘‘ப்ச். என்னை அது ஒண்ணும் செய்யாது...’’

‘‘என்ன சொல்ற?’’
‘‘நிஜத்தை. இப்பதான் தண்ணியே இல்லையே... அப்புறம் எப்படி கரன்ட் வரும்?’’
சிரித்தவன், தன் கைகளை மடக்கினான். கராத்தேவில் எப்படி செங்கல்லை உடைப்பார்களோ அப்படி அந்தக் கூண்டில் இருந்த பூட்டை உடைத்தான். ராஜகுமாரியை அலேக்காகத் தூக்கியபடி தரையில் குதித்தான்.

‘‘சூப்பர்... சூப்பர்...’’ என ஹாரி பார்ட்டரும், ஸ்பைடர் மேனும் கைதட்டினார்கள்.ஆனால் -நிஜ தேவதையும், அவள் தங்கையும், டார்க் லார்ட்டும் அப்படியே அசையாமல் நின்றார்கள்.
‘‘இவங்க எல்லாம் ஏன் இப்படி சிலையா நிக்கறாங்க?’’ ‘‘நோ... மகேஷ்... இது ரியல் ராஜகுமாரி இல்ல. போலி. மந்திர வாதி நம்மை ஏமாத்திடான்...’’ என்று ஸ்பைடர் மேன் அலறவும், அந்த விபரீதம் நடக்கவும் சரியாக இருந்தது. எந்த ராஜகுமாரியை சிறையில் இருந்து மீட்டானோ -அந்த ராஜகுமாரி, சூனியக்கார பாட்டியாக மாறினாள். தன் கோரைப் பற்களால் மகேஷின் கழுத்தைக் கடிக்க முற்பட்டாள்.

‘‘தலைவர் எந்த நம்பிக்கையில, ‘எதிர்க்கட்சியை கேவலப்படுத்துவேன்’னு சொல்றார்?’’‘‘அந்த எதிர்க்கட்சியில அவர் சேரப் போறாராம்!’’‘‘தலைவருக்கு நேரம் சரியில்லைன்னு ஜோசியர் சொன்னது சரியாத்தான் இருக்கு...’’‘‘ஏன் அப்படிச் சொல்றே?’’‘‘மகளிரணித் தலைவியோட புருஷன் ஃபாரீன்ல இருந்து திரும்பி வந்திருக்கிறாரே!’’

‘‘2016 சட்டசபை தேர்தல்ல நமக்கு எத்தனை இடம்யா கிடைக்கும்?’’‘‘அப்ப நீங்க எந்தக் கட்சியில இருப்பீங்கன்னு சொன்னாதானே இதுக்கு பதில் சொல்ல முடியும், தலைவரே!’’

(தொடரும்)

கே.என்.சிவராமன்