அவன் அவள் unlimitedகெட்ட பழக்கம்...ஆண்களின் சொத்தா?

நான் என்னை எப்போது வெறுக்கிறேன் என்றால், எல்லோரையும் போல நானும் இருக்கும்போது!
- அர்னால்டு ஸ்வார்ஸ்நேகர்

‘‘அவளை மறக்க முடியல மச்சி... அதான் குடிக்கறேன்!’’ ஆல்கஹால் அடிமைகள் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் அல்டிமேட் காரணம், பெண். பெண்கள் குடிக்க எந்தத் தடையும் இல்லாத நாடுகளிலும் கூட அதிகம் குடிப்பது ஆண்களே. ஆக, ‘அதெல்லாம் ஆண்கள் விஷயம்’ எனச் சொல்லிக்கொள்ள ஒன்று இருக்கிறது என்றால், அது சரக்கு தான். காதலியை மறக்கச் செய்யும் மருந்தென்பதால்தான் பெண்களுக்கு ஆல்கஹால் தேவைப்படுவதில்லையோ?

‘‘ஆல்கஹால் உலகையே சற்று நேரம் மறக்கடிக்கும். சுயக் கட்டுப்பாட்டைக் கடந்து அசாத்திய தைரியம் தரும். இதனால் பலாத்காரம் உள்ளிட்ட பாலியல் குற்றங்கள்தான் நடக்க வாய்ப்பிருக்கிறதே தவிர, பெண்ணை மது மறக்கடிக்கும் என்பது நிச்சயம் உண்மையல்ல!’’ என அடித்துச் சொல்கிறார் டாக்டர் அனிதா ராவ். சென்னையில் போதை மறுவாழ்வுக்காக இயங்கும் டி.டி.கே மருத்துவமனையின் சேவை இயக்குநர் இவர்.

‘‘ஆனால் நாள்பட்ட குடி, ஒருவனின் தாம்பத்திய வாழ்வை நிச்சயம் பாதிக்கும். தொடர்ந்து குடிப்பது என்பது ஒரு மனிதன் தனக்குத்தானே செய்துகொள்ளும் வேதியல் குடும்பக் கட்டுப்பாடு (chemical castration) எனலாம். ஆனால், யாரும் இதைத் தெரிந்து செய்வதில்லை. தன் செக்ஸ் விருப்பத்தைக் குறைத்துக்கொள்ள யார்தான் விரும்புவார்கள்? காதலியை மறக்க வேண்டும் என்பதெல்லாம் சாக்குதான். மதுவுக்கும் கஞ்சாவுக்கும் உள்ள இயல்பு என்னவென்றால், முதலில் இவை மனிதனின் செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும். ஆனால், போகப் போக ஆண்மையையே பறித்து விடும்!’’ என்கிறார் அவர்.

Anaphrodisiac  என கூகுள் செய்தால், கிடைப்பவை ஆச்சரியத் தகவல்கள். அகராதிப்படி Aphrodisiac என்றால் ஆண்களின் செக்ஸ் உணர்வைத் தூண்டும் வயாகரா வகையறா. Anaphrodisiac என்பது அதற்கு நேர்மாறானது. ஆணின் செக்ஸ் உணர்வைக் குறைத்து பெண் இன்பத்தை மறக்கச் செய்பவையே Anaphrodisiac. காலம் காலமாக பெண் இன்பத்தை மறப்பதற்கும் முயற்சிகள் நடந்திருக்கின்றன. ஆண்கள் அதை ஒருவித சுதந்திரமாக நினைத்திருக்கிறார்கள்.

பலமாகவும் பார்த்திருக்கிறார்கள். உலகமே ‘Fallen in love’ என்றுதான் காதலைப் பேசுகிறது. வள்ளுவரே, ‘யாம் வீழ்பவள்’ என அதை வழி மொழிகிறார். காதல் உணர்வு என்பது ஓர் ஆணுக்கு வீழ்ச்சி தான். இன்றும், பலான மேட்டருக்காக ஒருவர் எத்தனை ‘பவர்’ மாத்திரைகள் விழுங்கினாலும் ‘அவர் அந்த விஷயத்தில் வீக்’ என்றுதானே சொல்கிறோம்? நாம் ஒப்புக்கொண்டாலும், இல்லை என்றாலும் ஆணின் செக்ஸ் உணர்வு, அவன் பலமல்ல... பலவீனமே!

இப்போது Anaphrodisiacக்கு வருவோம். அக்காலத்தில், நம்மூர் நொச்சி வகையைச் சேர்ந்த ஒரு மரத்தின் விதையை ‘துறவிகளின் மிளகு’ என்றே ஐரோப்பியர்கள் அழைத்திருக்கிறார்கள். பாலியல் இச்சையைக் குறைக்கும் இதனை துறவிகள் தின்று பிரம்மச்சரியம் காத்தார்களாம். உலகெங்கும் உள்ள பாரம்பரிய மூலிகைகள் லிஸ்ட்டில் இப்படிப்பட்ட ‘செக்ஸ் குறைப்பான்கள்’ நிறைய உண்டு. நவீன அறிவியல் உறுதி செய்த Anaphrodisiac என்றால், அது அபின்தான். அபினிச் செடியிலிருந்து எடுக்கப்படும் போதைப் பொருளான ஹெராயின், வலி நீக்கியான மார்ஃபின் போன்றவை பெண் வேட்கையை கம்மி பண்ணுவது கன்ஃபார்ம்!

மனவியல் மருந்துகளாகவும் போதைப் பொருளாகவும் உள்ள கெமிக்கல்கள் சிலவும் ஹார்மோனை மட்டுப்படுத்தி பெண் இன்பத்தை மறக்கச் செய்யும். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவும் ரஷ்யாவும் அப்படிப்பட்ட மருந்துகளை தங்கள் ராணுவ வீரர்களின் காபியில் கலந்து கொடுத்ததாக சொல்லப்படுவதுண்டு.அதிமதுரம் ஆண்களின் டெஸ்டோஸ்டீரானை மட்டுப்படுத்தி பாலியல் நாட்டத்தைக் குறைப்பதாக ஈரானிய ஆய்வாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

உலகின் 90 சதவீத அதிமதுரம், புகையிலை தயாரிப்பில்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆக, புகை பிடித்தலும் சுற்றி வளைத்து செக்ஸ் இன்பத்தில்தான் கை வைக்கிறது. சொல்லப் போனால் எல்லா கெட்ட பழக்கத்துக்கும் பின்னால், ‘பெண்ணைத் துறத்தல்’ இருக்கிறது. இதையே இன்னொரு கோணத்தில் பார்த்தால், பெண்ணைத் துறக்கும் எல்லா முயற்சியும் கெட்ட பழக்கம்தான் என்றும் சொல்லலாம்.

உதாரணத்துக்கு, டி20யின் கடைசி ஓவரில் டி.வி முன்னால் கேத்ரினா கைஃபே வந்து கவர்ச்சி காட்டினாலும், ‘யக்கா, மறைக்காதக்கா’ என விலக்கும் மனநிலையில்தான் ஆண்கள் இருப்பார்கள். இதனாலேயே பெண்களில் பலர் கிரிக்கெட்டை வெறுப்பார்கள். கிரிக்கெட் மட்டுமல்ல... பெண் வேட்கையில் இருந்தும், அது தரும் குடும்பப் பொறுப்புகளில் இருந்தும் ஆணை விடுவிக்கும் அயிட்டங்களான ரேஸ், செய்தித்தாள், டி.வி நியூஸ், ஆட்டோமொபைல் / எலக்ட்ரானிக்ஸ் ஆர்வம் என அனைத்தின் மீதும் பெண்களுக்கு ஓர் உள்ளார்ந்த பகையுணர்ச்சி உண்டு. 

ஆண்களைப் பொறுத்தவரை கதையே வேறு. ஜென் ஸ்டைலில் ஒரு கேள்வி... சும்மா கிடந்த காட்டை ஒரு வழிப்போக்கன் வளைத்து, வேலி போடுகிறான். ‘இது எனக்கு’ என உரிமை கொண்டாடுகிறான். அங்கே இங்கே நகராமல் அதைக் காவல் காக்கிறான். இப்போது தோட்டத்தை அவன் சிறைப்படுத்தியிருக்கிறானா? தோட்டம் அவனை சிறைப்படுத்தியிருக்கிறதா? இதே பரிதாப நிலைதான் ஆண்களுக்கும்.

பெண்களை உரிமை கொண்டாடி, அவர்களை அடிமைப்படுத்துவதாய் சொல்லிக்கொண்டு தாங்களே அடிமையாகிறார்கள் அவர்கள். இதை உணரும் ஆண்களில் சிலர் (உண்மையான) சன்னியாசியாய்ப் போகலாம். அது முடியாத அஞ்ஞானிகளின் உள்ளுணர்வு தற்காலிகமாகப் பெண்ணை வெறுக்க, அல்லது பெண்ணுக்கு எதிராகத் தன் உடலை சிதைத்துக்கொள்ள ‘கெட்ட பழக்கங்களை’ நாடலாம்.

நம் தமிழ் உலகுக்கு Anaphrodisiac மூலிகைகள் எல்லாம் பெரிதாகத் தேவைப்படவில்லை. இங்கே பாடல்களே அந்த வேலையைச் செய்தன. ‘மலமும் சலமும் நிறைந்த பெண்ணின் வயிற்றை நீ ஆலிலை என்கிறாய்... நீரும் சளியும் ஒழுகும் மூக்கை குமிழ் என்கிறாய்’ என்றெல்லாம் பட்டினத்தார் நம்மைப் பார்த்து பகடி செய்கிறார். நாலடியாரில் தொடங்கி பாரதிதாசன் வரை இப்படிப்பட்ட செக்ஸ் எதிர்ப்பு பாடல்கள் இங்கே எக்கச்சக்கம்.

பெண்களின் அங்க அவயவங்களை பச்சையாகச் சொல்லி ‘இது இவ்ளோதான்... இதுல உனக்கென்னடா ஆர்வம்’ எனக் கேட்பது நிஜமாகவே அதிர்ச்சி வைத்தியம். கிராமங்களில் சில பெண்கள் தங்களை இதே ஸ்டைலில் தற்காத்துக்கொள்வார்கள். ‘பதினாறு வயதினிலே’ படத்தில் காந்திமதிக்கு அறிமுகமே நம்ம சூப்பர் ஸ்டார், ‘‘பொம்பளையா அவ? தஞ்சாவூரு தவிலு!’’ என்பதுதானே! பச்சையாகப் பேசும் பெண் மீது ஆணுக்கு ரொமான்ஸ் வருவதில்லை.

அப்படிப்பட்ட பேச்சும் ஒரு வகையில் Anaphrodisiac மருந்துதான். இந்தக் காலத்து பெண் கவிஞர்களின் படைப்புகளில் உறுப்புப் பெயர்கள் மிகுந்திருப்பதையும் இதே கண்ணோட்டத்தில் தாராளமாக ஒப்பிட்டுப் பார்க்கலாம்.‘வீக்னஸ் என்றாலும் அதானே நமக்குப் பிடித்திருக்கிறது’ என்கிறீர்களா? அப்படியானால் வாருங்கள்... அது தரும் விளைவை அலசலாம்! ‘கள்ளக்காதல்’ என்பதன் பின்னணி என்ன?

செக்ஸ் உணர்வைக் குறைக்கும் மருந்துகளாக சந்தேகிக்கப்படும் வஸ்துகள் பட்டியலில் மருக்கொழுந்தும், பச்சைக்கற்பூரமும் கூட ஆஜர். இவை நம் ஊரில் பெரும்பாலும் ஆன்மிகப் பயன்பாட்டில் இருப்பது கண்கூடு. ஆன்மிகத்தை பரிசுத்தமாக வைக்க இப்படி ஒரு மறைமுக செட்டப். இருந்தாலும் சில சாமியார்களை இது கட்டுப்படுத்தாது போல!

கனவுல ஒரு தேவதை வந்துச்சு மச்சான். தன்னோட டிரஸ்ஸை எல்லாம் கழட்டிட்டு, ‘வேணுமா?’னு கேட்டுச்சு. நான் வேணாம்னு சொல்லிட்டேன்!   கரெக்ட்டு மச்சி. அப்புறம் தேவதையோட டிரஸ்ஸை வச்சிக்கிட்டு நாம என்னா பண்றது?

-தேடுவோம்...
கோகுலவாச நவநீதன்