காவியத்தலைவன்



மறைந்துபோன நாடகக் கலைஞர்களின் வாழ்வை உயிர்ப்போடு காட்ட முயற்சிக்கும் படைப்பு, ‘காவியத்தலைவன்’. பிரிதிவிராஜ்-சித்தார்த் என இரு கலைஞர்களின் பெருநெருப்பெரியும் வாழ்க்கையை, ஈகோவை ‘இதோ... இதோ’ என எடுத்துக் காட்டியிருக்கும் படம் இது.நாம் பார்த்தறியாது போன கலைஞர்களின் மகிழ்ச்சியான கணங்கள், காதல், அன்பு, துவேஷம், கர்வம், பொறாமை, நம்பிக்கை, தியாகம் எனப் பல்வேறு வகையான உணர்வுகளுக்கு இடமளிக்கும் திரைக்கதைக்கே வசந்தபாலனுக்கு பாராட்டு!

துக்கத்தின் வேர்களைச் சென்றடைந்து, அவற்றைக் காட்ட எத்தனிக்கும்போது அதைப் புரிந்துகொள்பவர்கள் எத்தனை பேர் என்ற கவலையும் வராமல் இல்லை. இயக்குனர் வசந்தபாலனின் சமூக விமர்சனம் எப்போதும் நேரடியாகச் சொல்லப்படுவதில்லை. அது கதையின் கீழ் மட்டத்தில் மெல்லிய நீரோட்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பிரிதிவிராஜ்... நடிப்பில் பெரும்போக்காக முன் நிற்கிறார். கேரளா வாடை கலந்த உச்சரிப்புதான் ஆரம்பத் தயக்கம் தருகிறது. வசந்த பாலனின் அக்கறையை சிரமேற்கொள்வதில் பிரிதிவிக்கு எந்தச் சிரமமும் இல்லை. சித்தார்த்திற்கு இது வாழ்க்கையின் மிகப் பெரிய படம். போஸ்டரில் பார்த்து வரும் மன சித்திரத்தை விட கூடுதல் சிறப்பு. நாம் பார்த்த சித்தார்த்தை விடவும், இந்த சித்தார்த் பன்முகத்தன்மை கொண்டவர்.

பாவங்களும் உணர்வுகளும் ஒத்துழைத்தாலும், உடம்பு தோற்றத்தில் ஒத்துழைக்கவில்லை. பக்கம் பக்கமாக வசனம் இல்லாமல், திமிர், காதலை குறைந்தபட்ச அசைவுகளில் காட்டுகிறார் அனைகா. சித்தார்த்தின் நடிப்பை வியந்துகொண்டே காதலையும் கண்ணில் பரவ விடும் நொடியில் அனைகா காட்டுவது கவிதை. காதல், ஏக்கம், தாகம் என நுணுக்கம் காட்டுகிறார்.

நாடகக் குழுவின் ஆசானாக வாழ்ந்து காட்டுகிறார் நாசர். நாடகத்தை உயிராகக்கொண்டு வாழும் பெரும் பாத்திரத்துக்கு எவ்வளவு முடியுமோ, அவ்வளவு நியாயம் செய்கிறார். வேதிகாவின் அறிமுகம் நிமிர வைக்கிறது. இதில், நுட்பத்தோடு அவர் நடிப்பை எடுத்துக்கொண்டிருக்கும் விதம் புதுசு. ‘‘எந்தத் தகுதியும் இல்லாத நீ எப்பவும் ஜெயிச்சுக்கிட்டே இருப்பே... எல்லாத் தகுதியும் இருந்தும் நான் தோத்துக்கிட்டே இருப்பேனா?’’ என எகிறும் பிரிதிவியின் வார்த்தைகளில் ஜெயமோகன் உரையாடல் துல்லியம்.

பொன்வண்ணன், தம்பிராமையா என அனைவரும் கதாபாத்திரத்தில் உறைகிறார்கள். ‘ஏ சண்டிக்குதிர...’, ‘ஹே மிஸ்டர் மைனர்’, ‘வாங்க மக்கா வாங்க’ பாடல்களில் ஏ.ஆர்.ரஹ்மான் மெருகு. ஆனால், நாடகக் காலகட்டங்களின் வாத்திய அழகு தட்டுப்பட மறுக்கிறது. நீரவ் ஷா வழக்கம் போல் நிறைவு. ஆர்ட் டைரக்டர் சந்தானத்தின் உழைப்பு, ஒவ்வொரு ஃப்ரேமிலும் பட்டவர்த்தனம்.

ஆனாலும், படத்தின் பிற்பகுதி சற்று பொறுமை இழக்கத்தான் வைக்கிறது. சித்தார்த் சுதந்திரப் போராட்ட வீரனாக வெகுண்டு எழுவதற்கான முன்கதை ஏதும் இல்லை. சுதந்திரப் போராட்டம் என்பது எத்தனை பரபரப்புத் தருணம். ஆனால், அதைத் தொட்டதும் கதை வேகம் குறைவது பெரிய மைனஸ். வசந்தபாலனின் அக்கறையை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது... ஈகோ வெளிவந்த விதத்தில், மற்ற பகுதிகள் தேங்கிவிட்டன எனலாம். சித்தார்த்தின் பாத்திரப் படைப்பும் குழப்பம்.இன்னும் சரியாக வந்திருந்தால், தமிழ் சினிமா பெருமிதம் கொள்ள வேண்டிய படமாக இருந்திருக்கும்!

குங்குமம் விமர்சனக் குழு